Share

Mar 3, 2018

மெட்டடர் வேன் ஓனர்


சென்ட்ரல் கவர்ன்மெண்ட் (postal dept) வேலையை “ I resign my job as the nature of work does’nt suit my temperament.” என்று ராஜினாமா செய்து விட்டு சினிமாவுக்கு வந்து அசிஸ்டெண்ட் டைரக்டராக “அழைத்தால் வருவேன்” படம் utter flap ஆனவுடன், மதுரையில் ஒரு மெட்டடர் வேன் ஒன்று வாங்கி சாமான்கள் ஏற்றி இறக்க வாடகைக்கு விட்டிருந்தேன்.
மதுரை கீழ மாரட் வீதியில் தான் வேன் நிறுத்தி ஏதாவது ட்ரிப் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். டிரிப் கொடுக்கும் பாக்கியத்திற்கு கமிஷன் கொடுக்க வேண்டும்.
டிரைவர்களால் பட்ட சிரமம் மிகவுண்டு. டிரைவர்கள் இல்லாவிடிலோ வேன் ஓட்டும் காரியம் நடப்பதில்லை.
ஒரு இரண்டு வருடத்தில் ஐம்பது டிரைவர்கள் மாறியிருப்பார்கள்.
தனியாக வேனை டிரைவர்கள் ஓட்டினால் வேன் வருமானத்தில் பெரும்பகுதியை திருடி விடுவார்கள். கிலோமீட்டர் பார்த்து வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆட்டைய போட்டுருவாங்கெ..
அதனால் நான் டிரைவரோடு வேனில் ஏறி விடுவேன். ஓனர் வேனில் வருவதை எந்த டிரைவரும் ரசிக்க மாட்டான்.
ஒரு டிரைவர் எரிச்சலாகி கொடைக்கானல் ட்ரிப்பில் “ நான் நெனச்சன்னா மலையில இருந்து வண்டிய உருட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்”னு சொன்னதுண்டு.
வீட்டில் வந்து வண்டியை நிறுத்தியதும் அன்னார் என்னால் அடித்து வெளுக்கப்பட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அப்போதெல்லாம் டிரைவருக்கு வாரம் இருநூறு ரூபாய் சம்பளம். ஓவர் டைம் சம்பளமும் உண்டு.
ஒரு டிரைவரிடம் “ நான் மாதம் உனக்கு ஆயிரத்து ஐநாறு ரூபாய் சம்பளம் தருகிறேன். ஆனால் ஒன்று என் பணத்த நீ திங்கனும்னு நெனச்சா நீ வெளங்கவெ மாட்டே” என்றேன்.
அவன் என்னிடம் வண்டி சாவியை உடனே திருப்பிக் கொடுத்து விட்டு சொன்னான்: “ சார் நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க.. நான் உங்க கிட்ட வேலை செய்றது நல்லதுல்ல. ஆனா ஒன்னு சொல்லுறேன். கேட்டுக்கங்க. நாங்க திருடறதுக்கு பதிலா டிரைவர் வேலைக்கு வர்றொம். எந்த டிரைவரும் வண்டி ஓனருக்கு தெரியாம திருடத்தான் செய்வான்.”
நான் வேனில் கூடவே வருவது பற்றி கீழ மாரட் வீதியில் ஒரு ஜோக் உண்டு.
” இந்த மெட்டடார் வேன்ல ஓனரே தான் கிளீனரா வர்றார்!”
இதை ’இப்படி பேச்சு சார்’ என்று இன்னொரு வேனின் டிரைவரே என்னிடம் சொன்னான்.
ஒரு முறை காலை ஆறு மணிக்கு டிரைவருடன் வேனில் ஏறினேன். மாலை ஆறு மணி துவங்கி துவரங்குறிச்சி ஒரு ட்ரிப், வத்ல குண்டு ஒரு ட்ரிப் முடிந்து ஒத்தக்கடைக்கு ஒரு ட்ரிப் முடித்து மதுரை வந்தவுடன் அந்த டிரைவர் கீழ மாரட் வீதியில் “ சார் என் அக்கா மாப்பிள்ளை கனரா பேங்க் மானேஜர். அவர் ஒட்டன் சத்திரம் ட்ரான்ஸ்பர் ஆகிறார். அதனால் அவர் வீட்டு ஜாமான்களுக்கு வேன் தேவைப்படுகிறது” என்று என்னிடம் வாடகை இவ்வளவு என ஒரு தொகையை சொன்னான்.
அப்போது இரவு பத்து மணி. சரி இந்த ட்ரிப்பையும் முடிப்போம் என்று சொல்லி விட்டு பேச்சியம்மன் படித்துறையில் இருந்த வீட்டுக்கு போனோம்.
சாமான்களை ஏற்றினார்கள்.
டிரைவரின் அக்கா கனரா பேங்க் மானேஜருக்கு முதல் மனைவி. அவர் பிள்ளையில்லாமல் இறந்து விட்டார். அதன் பின் இரண்டாவது திருமணம் செய்து இரண்டு குழந்தைகள்.
டிரைவர் சீட் அருகில் அவரது மனைவியும் குழந்தைகளையும் உட்கார வைத்து விட்டு நானும் மேனேஜரும் சாமான்கள் வைக்கப்பட்ட பகுதியில் இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டோம். வேன் ஒட்டன்சத்திரம் கிளம்பியது. அப்போது இரவு ஒரு மணி.
பேங்க் மேனேஜர் என்னுடன் பேசிக்கொண்டே வந்தார். ஒட்டன்சத்திரம் வந்து பொருட்களை வீட்டில் இறக்கி முடிப்பதற்குள் பொலபொலவென்று விடிந்து விட்டது.
விடைபெறும் போது கனரா பேங்க் மேனேஜர் என்னிடம் சொன்ன விஷயம் அனேகமாக ஒரு confession. “சார் இருபத்து நாலு மணி நேரமா நீங்க வேனில் டிரைவர் கூடவே இருக்கிறீங்க.. இனிமே நீங்க மதுரைக்கு ஒங்க வீட்டுக்கு போகனும். ஒரு விசயம் தெரியுமா? என் மாப்பிள்ள தான் இந்த டிரைவர். இந்த டிரிப்லயே உங்கள மோசம் செஞ்சிருக்கான். என்னிடம் அவன் வாங்கிற தொகையில பாதி தான் உங்க கிட்ட வாடகையா சொல்லியிருக்கான். உங்கள நெனச்சா சங்கடமா இருக்கு..என்னால சொல்லாம இருக்க முடியல..”
இடுக்கண் வருங்கால் சிரிக்கச்சொன்னான் இனிமேல் வருவது நலமென்று.


.........................................................












No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.