Share

Aug 16, 2019

அமைச்சர் ராமையாவும் பெரியப்பாவும்


அப்பா நாகையில் சுங்க இலாகா அதிகாரியாக இருந்த போது பெரியப்பா சிதம்பரத்தில் சுங்க இலாகா அதிகாரி.
முன்னதாக இருவரும் ஒரே ஊரில் (திண்டுக்கல்) இருந்திருக்கிறார்கள். ஆனால் சில மாதங்களில் அண்ணன் தம்பி இருவரும் ஒரே ஊரில் வேலை பார்க்கக்கூடாது என்று அப்போது ஒரு பிரச்னை ஏற்பட்டு அப்பா பழனிக்கு மாற்றப்பட்டார். பெரியப்பா திண்டுக்கல்லுக்குப்பிறகு கரூருக்கு. அப்புறம் நாகப்பட்டினம். அப்பா பழனியிலிருந்து திருச்சி. பின் நாகப்பட்டினம். பெரியப்பா அப்போது சிதம்பரத்தில்.
பெரியப்பாவின் துறுதுறுப்பும் சுறுசுறுப்பும் சொல்லில் அடங்காத விஷயம்.
அப்போது ஒரு Patrolling. ஒரு ரவுண்ட்ஸ் போகும்போது ஜீப்பில் இருந்து இறங்கி சாலையில் நிற்கும் போது ஒரு கார் வந்திருக்கிறது.
பெரியப்பா அந்த காரை நிறுத்தியிருக்கிறார்.
“Please let me do my duty”
உள்ளே இருந்தவர் எரிந்து விழுந்திருக்கிறார்.
“You will be suspended and dismissed. You don’t know who I am?”
அப்போதைய தமிழக அமைச்சர் வி.ராமையாவின் கார்.
மாண்பு மிகு ராமையா தான் என் பெரியப்பாவிடம் மிக கடுமையாக நடந்து கொண்டவர்.
பெரியப்பா ரொம்ப துடியான சாமி. யாருக்குமே பயப்படுவது அவர் வாழ்க்கையில் இருந்ததே இல்லை. கனிவாக அவர் மந்திரியிடம் பேசிப்பார்த்தும் பிரயோஜனப்படவில்லை.
ராமையாவும் பெரியப்பாவும் ஆங்கில சம்பாஷணை காரசாரமாக.
“You will get your dismissal order immediately” ராமையாவின் கார் கிளம்பி விட்டது.
பெரியப்பாவின் பக்கத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டரும் (அப்போது கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்சைஸில் சப்- இன்ஸ்பெக்டர் போஸ்ட் இருந்திருக்கிறது.) சிப்பாயும் சிலையாக உறைந்து நின்றிருக்கிறார்கள்.
சிப்பாய் மெதுவாக “ உங்க மேல எந்த தப்பும் கிடையாது சார். நியாயமே இல்லாம அவரு உங்கள அவமானப்படுத்திட்டாரு. இப்ப இவரு மந்திரி. எவ்வளவு காலம் இவுங்க ஆட்டம். அந்தக்கால அரசர்கள் மாதிரியே தான் காங்கிரஸ்காரங்க எல்லாம் நெனச்சிக்கிட்டு இருக்காங்க. அடுத்த வருஷம் இவரெல்லாம் காணாம போயிருவாரு பாருங்க”
மத்திய அரசு உத்தியோகம் என்றாலும் அப்போது காங்கிரஸ் தான் மத்தியிலும் மாநிலத்திலும்.
ஒரு விஷயம் இந்த நிகழ்வில் தெளிவாக தெரிகிறது.
மந்திரி காருக்கு முன்னால பத்து கார், பின்னால பத்து கார் என்பதெல்லாம் அப்போது இருந்திருக்கவில்லை. இப்போது இருப்பது போல மாநிலத்திற்கு நிறைய மந்திரிகள் அன்றெல்லாம் இல்லை. ஒற்றை இலக்கத்தில் தான் அமைச்சர்கள்.

(காங்கிரஸ் மந்திரி கார் தனியாக வந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை என தோன்றுகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் பற்றிய முக்கிய விஷயம். தொண்டர்களை 1950களில் 1960களில் அவர்கள் மதித்ததில்லை. அரசராக பாவித்து மேடையில் கூட சுல்தான்கள் போல தலையணை திண்டு போட்டு உட்கார்ந்தவர்கள். கார்களில் போகும் போது தொண்டர்கள் முன்னும் பின்னும் வர இந்த பூர்ஷ்வாக்கள் சம்மதிப்பார்களா என்பதுடன் அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு கார் ஏது? அதனால் தான் ராமையாவின் கார் தனியாக வந்திருக்கிறது. கழகங்களின் ஆட்சியில் தொண்டர்கள் மந்திரி என் ஃப்ரண்ட், எம்.எல்.ஏ என் ஃப்ரண்ட் என்று தோளில் கை போட்டு பெருமைப்பட்டுக்கொள்ள முடிந்தது)
டிபார்ட்மெண்டில் விசாரணை நடந்திருக்கிறது.
கஸ்டம்ஸ் கலெக்டர் கடைசியில் Official report எழுதியிருக்கிறார்.
“Our honourable minister should apologize to my Inspector”
கலெக்டரும் அப்போது மத்திய அரசாங்கத்துக்கு கூட பயப்படவில்லை.

’போலீஸ் கேஸை Contest செய்ய முடியும். ஜெயிக்க முடியும்.ஆனால் கஸ்டம்ஸ் கேஸை Contest செய்து ஜெயிப்பது சிரமம்’ என்று ஒரு saying உண்டு.

சிப்பாய் தீர்க்கதரிசனம் அடுத்த வருடமே (1967) பலித்து விட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வி. தி.மு.க.ஆட்சி ஆரம்பம்.
தமிழகத்தில் காங்கிரஸ் அதன் பின் கட்டெறும்பாகிப்போனது சரித்திரம்.


http://rprajanayahem.blogspot.com/2017/04/blog-post_27.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.