Share

Aug 23, 2019

என்னை மாதிரியே, என்னை மாதிரியே


’எம்பியார் டபுள் ராக்கெட்ல
நடிச்ச படம் பாத்திருக்கியா?’
”நம்பியாருக்கும் எம்பியாருக்கும் கத்திசண்ட எந்த படத்தில?”

இப்படி தான் அப்ப எங்க பக்கத்து வீட்டு அஞ்சு வயசு ராதாக்ரிச்சு அடிக்கடி கேட்டுக்கிட்டே இருப்பான்.
Double act என்பது அவன் அகராதியில் டபுள் ராக்கெட். எம்.ஜி.ஆரை மழலையாக எம்பியார் என்பான்.
எம்.ஜி.ஆர் நடிச்ச நீரும் நெருப்பும் படத்தில ஒரு எம்.ஜி.ஆர அடிச்சா இன்னொரு எம்.ஜி.ஆருக்கு வலிக்கும். இப்படியே காதல் சமாச்சாரமும்.

நாகேஷ் ஒரு பழைய படத்தில் பேசுகிற டயலாக்
இது போல
“ எனக்கு பசிச்சா இவன் தான் சாப்பிடுவான்.
எனக்கு விக்கல் வந்தா இவன் தான் தண்ணி குடிப்பான்.
நான் சாப்பிட்டா இவன் தான் ஏப்பம் விடுவான்.
நான் செத்தா இவன தான் குழியில வக்கனும்.”
எனக்கு இந்த நாகேஷ் வசனம் ஞாபகம் வர காரணம்
போகன் சங்கரின் இந்த கவிதை

” என்னை மாதிரியே
இருக்கிறீர்கள் நீங்கள்
என்னை மாதிரியே
சிந்திக்கிறீர்கள் நீங்கள்
என்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள்
என்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள்
எனக்குப் பதிலாக
எனது கல்லறையை நிரப்ப
உங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இது தான்.”
சாரு நிவேதிதா ஞாபகம் வருகிறது. யாராவது அசட்டு வாசகன் “சார், நான் நினைக்கிறத நீங்க எழுதுறீங்க. என்ன மாதிரி தான் நீங்க.” இந்த அர்த்தம் தொனிக்க சாருவிடம் தத்து பித்துன்னு உளறினால் அவருக்கு கோபம் ஏற்பட்டு பொங்கி விடுவார்.
போகன் சங்கரிடம் யாரோ இப்படி அடிக்கடி சொல்லியிருப்பார் போல. அல்லது பலராகவும் இருக்கலாம்.
’போகன் நீங்க என் கவித மாதிரி தான் எழுதுறீங்க.நான் நினக்கிறத நீங்களும் நினைக்கிறிங்க. என்ன மாதிரியெ, என்ன மாதிரியெ’ தகுதியற்ற ஒரு மடக்கவிங்கன் இப்படி அடிக்கடி அனத்தியெடுத்ததால் அவனை கல்லறையில் வைக்க தேர்ந்தெடுத்திருக்கிறாராயிருக்கும்.
ஒரு யூகம் தான்.

இப்படி சந்தர்ப்பங்களில் எனக்கு எப்போதும் ஞாபகம் வருகிற விஷயம்.
’ஒரு நல்ல கவிஞனை சித்திரவதை செய்ய சுலபமான வழி உண்டு. அவனுடைய கவிதையை விரிவாக விளக்கி பொழிப்புரை எழுதுவது.’ என்று சொல்வார் நஸ்ஸிம் நிகோலாஸ் தாலிப் என்ற லெபனான் நாட்டு தத்துவ மேதை.
இவர் எழுதிய ’கறுப்பு அன்னப்பறவை’ (The Black Swan) புத்தகம் முக்கியமானது.
விளக்க பொழிப்புரை கவிதையின் வாசகன் எழுதுவது இல்லாமல் இன்னொன்று,
அந்த கவிஞனையே ’நீயே சொல்லு, நடந்தது என்னவென்று நீயே சொல்லு’ன்னு விளக்கச்சொல்லி கேட்பதும் அபத்தம்.
”நீ எழுதுன்னது இன்னொருத்தர் எழுதுன்னது போல தன்னென்னு சொன்னால் அவனுக்குக் கடும் கோபம் வரும்.தான் சுயம்.கொச்சு என்னுதுன்னு காமிக்க தலைகீழா நின்னு தண்ணி குடிப்பான்”ன்னு பாருக்குட்டி சொன்னதை போகன் இன்னக்கி சுட சுட எழுதியுள்ளதை பார்க்கலாம்.

To be a poet is a condition, not a profession. – Robert Frost
..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.