Share

Aug 15, 2019

மோத்தி


மோத்தி பாக்க அப்ப இருந்த நடிகர் ரவிச்சந்திரன் மாதிரி இருப்பான்.
எம்.ஜி.ஆர் ரசிகன். எம்.ஜி.ஆருக்கு பிரியாணி செய்து கொண்டு போய் கொடுத்ததை சொல்வான்.
நாகப்பட்டணத்தில ரஜுலா கப்பல் சிங்கப்பூரிலிருந்து வந்து கொண்டிருந்த காலத்தில் செழிப்பான வாழ்க்கை வாழ்ந்தவன்.
கொண்டாட்டமான வாழ்க்கை.
திருநெல்வேலியில் பிரபலமான ஒரு வியாபாரி மகளை கூட்டிக்கொண்டு வந்து விட்டான். ஜோதி. அவள் தான் முதல் மனைவி.
இரண்டாவது மனைவி முஸ்லிம் பெண். மூன்றாவது மனைவி யாரென்றால் அந்த இரண்டாவது மனைவியின் தாய்.
இரண்டாவது மனைவியோடு வீட்டுக்குள் நுழைந்த அவளுடைய அம்மா சக்களத்தியாகி விட்டாள்.
இந்த மூன்று பேரையும் ஒரே வீட்டில் தான் வைத்திருந்தான் என்பது பெரிய அதிசயம் என்றே கருத வேண்டும்.
இது தவிர நாகையிலேயே பர்மாக்காரி ஒருத்தி மோத்திக்கு பிள்ளை பெற்றிருக்கிறாள் என்று ஊரே சொல்லும்.
சிங்கப்பூருக்கு அடிக்கடி ரஜுலா கப்பலில் போய் வருவான். அங்கே ஒரு சீனாக்காரி அவனுக்கு. அவளுக்கும் ஒரு குழந்தை கொடுத்திருக்கிறான் என்பார்கள்.
ஆள் ரொம்ப கலகலப்பானவன்.
வெளி நாட்டு சாமான்கள் சப்ளை செய்வான்.
அவனுக்கு ஃபேமிலி ஃப்ரண்ட்ஸ் சினிமாக்காரர்களில் உண்டு.
எப்போதும் கவி.கா.மு.ஷெரிஃப் பற்றி சொல்வான். ‘சினிமால பாட்டெல்லாம் எழுதுவாருடா. ரொம்ப பெரிய மனுசன். மனுசன்னா அவரு தான் மனுசன்.”
எம்.ஆர்.ராதா மகன் வாசு இவனுக்கு நல்ல பழக்கம்.
அவருக்கு வெளி நாட்டு ஜாமான்கள் மோத்தி சப்ளை செய்வான். மோத்தி வீட்டுக்கே எம்.ஆர்.ஆர் வாசு வந்ததுண்டு.
பள்ளிப்படிப்பு திருச்சி செயிண்ட் ஜோசப்ஸ். அப்போதும் அப்பா கஸ்டம்ஸில் அதிகாரியாக நாகையில் இருந்தார். லீவுக்கு வரும்போது மோத்தி தான் தோஸ்த். ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். ’டேய், மோத்தி’ என்று தான் கூப்பிடுவேன். ’டேய் தொர’ சந்தோஷமா கலகலப்பா மோத்தி சிரிப்பான்.
மூணு,நாலு பொண்டாட்டிக்காரன நான் எப்போதும் “டேய், மோத்தி”ம்பேன்.
அவன் முதல் மனைவி என்னை சினிமாவுக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கிறாள். ஜோதி அக்கா. நெல்லை ஜோதி ஸ்டோர் ஓனர் மகள். இவளுக்கு குழந்தை கிடையாது.
ரெண்டாவது பொண்டாட்டிக்கு தலப்பிரசவம் வீட்டிலேயே நடந்தது.
அவள் பிரசவ வலி தாங்க முடியாது அய்யோ, அம்மா என்று குரலெடுத்து அழுத போது ’தொர அழுகய பார்றா’ன்னு குலுங்கி குலுங்கி சிரித்தான் மோத்தி. நான் அப்போது அவன் வீட்டில் இருந்தேன்.
” தொர, எம்.ஆர்.ஆர் வாசு இந்த இடத்தில ஒக்காந்து எத்தன தடவ சாப்பிட்டுருக்கான் தெரியுமாடா?”
”டேய் மோத்தி, அடுத்த தடவ வாசு வந்தா சொல்லுடா. நான் பாக்கணும்.”
குழந்தை பிறந்து விட்டது. குவா,குவா. ஆம்பள குழந்தை.
”தொர, கொழந்தைக்கு நீ தான் பேர் விடணும். ஒரு முஸ்லீம் பேரா வைடா”
நான் “ அப்துல் ஹமீது”
அந்த பேரில் தான் அந்த குழந்தை வளர்ந்தான்.
”அப்பா, உங்க மகன் தொர தான் எம்பிள்ளைக்கு பேர் வச்சான்” என்னுடைய அப்பாவிடமே கலகலவென்று சிரித்தவாறு சொல்வான். மட்டுமல்ல. ஊருக்கே இதை தம்பட்டமாக சொல்வான்.
அவனை “டே மோத்தி”ன்னு நான் கூப்பிடுவதில் ரொம்ப பெருமையும் சந்தோஷமும் அடைந்தவன். “ தொர, என்ன ‘டேய் மோத்தி’ன்னு தான் கூப்பிடுவான்.” பாக்கிறவர்களிடம் எல்லாம் என்னை காட்டி சொல்லி குரலெடுத்து குலுங்கி சிரிப்பான்.
ஜோதி அக்கா தன்னை மோத்தி குடி போதையில் அடித்ததாக ஒரு நாள் என்னிடம் சொன்னாள்.
“ஏண்டா அக்காவ அடிச்ச”ன்னு அவனுக்கு கன்னத்தில் பளார் பளார்னு நாலு கொடுத்தேன்.
வலிக்கும்படியான அடி தான். ஆனால் மோத்தி சிரித்துக்கொண்டே “இனிமே அடிக்க மாட்டன்டா”
’ என்னய தொர இன்னக்கி அடிச்சிட்டான்.’ என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமெல்லாம் அன்று சொல்லிக்கொண்டிருந்தான். மறு நாள் பத்து பேர் பெரியவர்களே என்னிடம் கேட்டார்கள். “மோத்திய அடிச்சியா, அவன் சொல்றான்”
பெரிய படிப்பெல்லாம் மோத்திக்கு கிடையாது. ஆனால் ஆங்கில அறிவு உண்டு. சில அபூர்வமான வார்த்தைகளை பிரயோகப்படுத்துவான்.
”தொர, மதார் ஒரு லோஃபர்” பன்னிரெண்டு வயதில் நான் மோத்தி சொல்லி தான் Loafer முதல் முறையா கேட்டேன்.
(நம்ப பாசமலர் பீம்சிங் டைரக்ட் செய்த தர்மேந்திரா இந்தி படம் ”Loafer”லாம் அப்புறந்தான்.
இப்ப Loafer shoe நான் வைத்திருக்கிறேன்.)
மதாரும் கூட மோத்தி வயசு தான். மதாரையும் ’டேய், மதார்’ என்பேன்.
ஒரு தடவை அப்பா அடித்த போது கடலில் விழப்போகிறேன் என்று ஓடினேன். மதாரை அப்பா என்னை பிடிக்க சொல்லி அனுப்பினார்.
மதார் தான் சமாதானப்படுத்தி மீண்டும் என்னை வீட்டுக்கு அழைத்து வந்தவன்.
கரூருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆன போது மதார் தேம்பி, தேம்பி அழுதான்.
அதன் பிறகு அப்பா கரூர், மதுரையை அடுத்து நாகைக்கு மீண்டும் ட்ரான்ஸ்பரில் வந்த போது நான் கல்லூரி படிப்பு முடித்திருந்தேன்.
மோத்தியை அவனுடைய முஸ்லிம் மனைவி தலாக் சொல்லி விலகி இன்னொருவனை திருமணம் செய்து கொண்டு விட்டாள். அவள் அம்மா (மோத்தியின் மூன்றாவது மனைவியும் மாமியாருமானவள் இறந்து விட்டாள்)
ஜோதி இடையில் ஒருவனோடு ஓடி போய் விட்டாள்.
மீண்டும் அவள் நாகைக்கே திரும்பி (இரண்டாவது மனைவியின் மகன்) அப்துல் ஹமீதை மகனாக ஏற்றுக்கொண்டு மோத்தியை மறுதலித்து விட்டாள். அப்துல் ஹமீதுக்கு தன் தாயையும் பிடிக்கவில்லை. அப்பாவையும் பிடிக்கவில்லை. அம்மாவின் புதிய கணவனையும் பிடிக்கவில்லை. அவன் அப்பாவின் முதல் மனைவி ஜோதியைத்தான் ’அம்மா’ என்று ஒட்டிக்கொண்டான்.
மோத்தி இப்ப சாப்பாட்டுக்கே வழியில்லாத Loafer. எப்படியோ கள்ளசாராயம் அவனுக்கு கிடைத்துக்கொண்டிருந்தது.
எங்கள் வீட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்து மோத்தி “பசிக்கிது, சாப்பாடு வேணும்” என்று ஒப்பாரி.
நான் வெளியே வந்து பார்த்தேன். நல்ல போதையில் மோத்தி. அவனுக்கு சாப்பாடு வீட்டில் என் அம்மாவிடம் வாங்கி வந்து கொடுத்தேன்.
”இனிமேல் குடித்து விட்டு எங்க வீட்டுக்கு வரக்கூடாது. சாப்பாடு வேண்டுமென்றால் குடிக்காமல் வாடா”
ஆள் எப்படி நடிகர் ரவிச்சந்திரன் போல இருப்பான். இப்ப பிச்சைக்கார கோலம்.
மறுபடியும் குடித்து விட்டு திண்ணைக்கு வந்து “சாப்பாடு வேண்டும்” என்றான்.
நான் அடித்து விட்டேன்.
“இருடா, அப்பா கிட்ட சொல்றேன்.” என்று கஸ்டம்ஸ் ஆஃபிஸ் போய் “தொர என்ன அடிச்சிட்டாம்ப்பா” என்று அழுதிருக்கிறான்.
ரோட்டில் எங்கே பார்த்தாலும் அவனை சாப்பிட வைப்பேன்.
”டேய் தொர, என்ன நீ அடிச்சில்ல. ஏன்டா சின்னப்பயலா இருக்கும்போதே நீ என்ன கன்னத்திலே அடிச்சவன் தான?” என்று மழலையாக போதையில் உளறுவான்.
என் திருமணத்திற்கு பிறகு ஒரு முறை சின்ன டூரில் காரில் நாகை வந்தேன்.
மதார் ஓடி வந்து அழுதான். “ தொர, நீ தான்டா என் தம்பி, நீ தான்டா நல்லவன்”
மோத்தி பரிதாபமான தோற்றத்துடன். மிகவும் மெலிந்து மோசமான நிலையில்.
மதார், மோத்தி இருவருமே என் மனைவியிடம் “நாங்க வளத்த புள்ளமா ஒன் புருஷன். டேய்னு தான் கூப்பிடுவான்” என்று பெருமையாக சொன்னார்கள்.
என் மாமனாரிடம் மோத்தியை காட்டி “மாமா, மோத்தியும் உங்கள மாதிரி எம்.ஜி.ஆர் ரசிகன் தான். இவன் மூனு பொண்டாட்டிய ஒரே வீட்டில வச்சி குடும்பம் நடத்துனவன்”
என்று நான் சொன்ன போது,
மிகவும் அனுபவசாலியான அவர் அவனை ஆச்சரியமாக பார்த்து விட்டு “என்ன மாப்ளே சொல்றீங்க. இவனா? நிஜமாவா? மூனு பொண்டாட்டிய ஒரே வீட்டில வச்சிருந்தானா? நம்பவே முடியலயே, அது முடியவே முடியாதே.ஏம்ப்பா மோத்தி, ஒன் மேல எனக்கு ரொம்ப மரியாத வர்துடா. நீ ரொம்ப பெரிய ஆள்டா”
மோத்தி ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டான் என்பது பார்த்தாலே அப்போது தெரிந்தது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.