Share

Mar 20, 2013

கம்பரும் ஒட்டக்கூத்தரும்



”கம்பரை ஒட்டக்கூத்தர் என்ன பாடு படுத்தியிருக்கிறார் தெரியுமா?” என்று கி.ராஜநாராயணன் பேசும்போது என்னிடம் கேட்டார். 
நான் ஆர்வமாக “ சொல்லுங்க அய்யா ” என்றேன்.


கம்பராமாயணம் அரங்கேற்றம் செய்யப்படும்போது கம்பர் எழுதிய ’துமி’என்ற வார்த்தையை ஒட்டக்கூத்தர் ஆட்சேபித்திருக்கிறார். துமி என்று தமிழில் வார்த்தையே கிடையாது என்பது ஒட்டக்கூத்தர் வாதம்.

மன்னர் திரும்பி கம்பரைப் பார்த்திருக்கிறார். “ மன்னா! மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள சொல் தான் துமி.” என்று கம்பர் பதில் சொல்லியிருக்கிறார். ஒட்டக்கூத்தர் தமிழில் துமி கிடையவே கிடையாது என்று சங்கு சக்கர சாமி வந்து திங்கு திங்குன்னு ஆடியிருக்கிறார். கம்பரின் காவிய அரங்கேற்றம் நிறுத்தப்பட்டு விட்டது.


மறு நாள் அரசர் நகருலா செல்கிறார். கூடவே கம்பரும் ஒட்டக்கூத்தரும். ஒரு வீட்டில் இருந்து ஒரு வினோத சத்தம். “ இது என்ன சத்தம்” என்று ராஜா கேட்கிறார். கம்பர் உடனே “ மத்தினால் தயிர் கடையும் சத்தம் மன்னா” என்று சொல்லியிருக்கிறார். 
ராஜா இதையெல்லாம் எங்கே கண்டிருக்கிறார். கேட்டிருக்கிறார். “ இந்த சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல இருக்கிறதே! கொஞ்சம் நேரம் நின்று கேட்போமே” என்று சொல்லியிருக்கிறார்.

வீட்டின் உள்ளே குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது. ராஜாவுக்கு உள்ள ஆர்வம் குழந்தைகளுக்கும்! அப்போது ஒரு பெண் பேசுவது கேட்கிறது: பிள்ளைகளா! கொஞ்சம் தள்ளி நில்லுங்க. துமி தெறிக்கும்!
ராஜா : இதோ துமி என்று வார்த்தை இருக்கிறதே!
தயிர்த்துளி குழந்தைகள் உடம்பு மீது தெறித்து விடும் என்று எச்சரிக்கிறாள் என்பதை கம்பர் விளக்குகிறார்.

ராஜாவுக்கு நேற்று கம்பர் ராமாயணத்தில் வாசித்தது சரி தான் என்று புரிந்து விடுகிறது.


தோயும் வெண் தயிர் மத்தொலி துள்ளவும் ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார் என்று சொன்னதும் கம்பன் தான்!

மறு நாள் கம்பராமாயணம் மீண்டும் அரங்கேற்றம்.
கம்பர் நெகிழ்ந்து ராமாயணத்தை ஆரம்பிக்கும் முன் கண்ணில் நீர் மல்க தயிர் கடைந்த பெண்ணை நினைந்து “ சாட்சாத் கலைவாணியே வந்து என் சாகித்யத்திற்கு சாட்சி சொன்னாள்” என்று prologue பாடினாராம்!

கி.ரா. இந்த இடத்தில் நிறுத்தி என்னிடம்” ’தூமை’ என்று பெண்கள் மாதவிலக்கு பற்றி சொல்வதும் இதுவேதான். துளி,துளியாக யோனியிலிருந்து ரத்தம் வெளியேறுவதும் ’துமி’ தான்.” என்று விளக்கம் செய்தார்.

ரசிகமணி டி.கே.சி கம்பராமாயணத்தின் கடைசிபகுதி ஒட்டக்கூத்தர் எழுதி செருகியதென்று ஆராய்ந்து சொன்னார் என்பதையும் கி.ரா. சொன்னார்.

அரசர் அந்தப்புறம் செல்லும்போது ஒட்டக்கூத்தரை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார். அரசருக்கு ராணியைப் புகழ்ந்து ‘அவளே! இவளே! உள்ளத்தில் இருப்பவளே! என்னவளே!பொன்னவளே! உன்னை நினைக்கையிலே உள்ளம் உருகுதடி!’ என்றெல்லாம் கவி பாடத்தெரியாதே. அதனால் புலவர் ஒட்டக்கூத்தரை பள்ளியறை முன் பாட அழைத்துப் போயிருக்கிறார்.

பள்ளியறை கதவு முன் நின்றவுடன் ஒட்டக்கூத்தர் “ நான் பார்வைக்கு சுமாரா இருப்பேன். என் புலமைய ப் பத்தி ராணிக்கு இப்பத் தெரியும் பாருங்க!” என்று ராஜாவிடம் சொல்லிவிட்டு உற்சாகமாக “ ராணி! உங்க கண்ணாலன் ராஜா வந்திருக்கிறார். கதவைத் திறங்க!” என்று ஆரோகணமாகப் பாட ஆரம்பித்திருக்கிறார்.உச்சஸ்தாயி! 

ராணி பயங்கரக்கோபமாகி உடனே,உடனே ரெட்டைத்தாழ்ப்பாள் போட்டாளாம்!

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்!

அன்னைக்கு ராஜாவுக்கு டொக்கு போடுற சான்ஸ் மிஸ்ஸாயிருச்சி!


அரசர் ஒருவேளை கம்பருடன் போயிருந்தால் மகாராணி சந்தோஷமாக கதவைத்திறந்து “ உள்ளே வாங்க!” என்று சொல்லியிருப்பாள். கம்பரை உபசரித்து அனுப்பி விட்டு சயனப் படுக்கைக்கு ராஜாவுடன் சென்றிருப்பாள்.

கம்பர் பெருமை பற்றி, ஒட்டக்கூத்தர் போலித்தனம் பற்றி ராணி தெரிந்து வைத்திருந்தது பெரிய விஷயம்.

  ஔவைபாட்டி நடந்த களைப்பு தீர ஒரு கோவில் வெளிச்சுவற்றில் முதுகைச் சாய்த்து உட்கார்ந்து ரிலாக்ஸ்டாக கால்கள் இரண்டையும் நீட்டியிருக்கிறாள்.
 ’உஷ்’ என்று வாய் குவித்துக் கண்மூடித் திறந்திருக்கிறாள். 
அரசர் வருவது தெரிந்திருக்கிறது. 
உடனே ஒரு காலை மடக்கியிருக்கிறாள். 
அடுத்து கம்பர் வருவதைப்பார்த்திருக்கிறாள். 
உடனே மிகுந்த மரியாதையுடன் இன்னொரு காலையும் மடக்கிக்கொண்டாளாம். 
பின்னால் பார்த்தால் ஒட்டக்கூத்தர் பந்தாவாக வந்திருக்கிறார். ஔவைப்பாட்டி உடனே இரண்டு காலையும் நீட்டிவிட்டாளாம்! ‘ ஒனக்கு எதுக்குடா மரியாதை!’


.........



 தூமை என்பதை முன் வைத்து  கண்ட சம்பவம் ஒன்று.


தெருவில் ஒரு சண்டை. ஒரு கிழவி ஒரு கட்டத்தில் ஒரு இளைஞனைப் பார்த்து உரக்க “ என் தூமையைக் குடிக்கி “ என்று கூவினாள். உடனே அவன் அவளிடம் ’உனக்கு இந்த வயசிலுமா வடியுது?’ என்று கேட்டு விட்டு உடனே, கூடி நின்ற கூட்டத்தைப் பார்த்து ’ விலகு, விலகு, ஒதுங்கு’ என்று அந்தக்கிழவியை நோக்கி முன்னேறி வந்து அவள் முன் மண்டியிட்டு, குழாயில் தண்ணீர் குடிக்க கை குவிப்பது போல குவித்து, 
” ஊத்தாத்தா..ஊத்து…ஊத்தாத்தா..” என்றான்! 


...............................................
 


http://rprajanayahem.blogspot.in/2009/10/amadeus.html

http://rprajanayahem.blogspot.in/2009/04/blog-post_24.html 

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_6727.html

2 comments:

  1. படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன் :) ஐயோ ஐயோ!

    கம்பர் ஒட்டக்கூத்தர் கதைய யார் கட்டி விட்டாங்கன்னு தெரியல. இலக்கியத்துல அதுக்கு ஆதாரமே கெடையாது. ஆனா கம்பருக்கும் ஔவையாருக்கும் பிரச்சனை இருந்திருக்கு. கம்பர் கொஞ்சம் ஷோக்குப் பேர்வழியா இருந்திருக்காரு. அதைப் பாத்து இப்படிப் படாபடோபம் செஞ்சாத்தான் இந்தக் காலத்துல புலவர்கள்னு பாட்டே இருக்கு.

    புகழேந்திக்கும் ஓட்டக்கூத்தருக்கும் போட்டிப் பாடல்கள் உண்டு. ஆனா அவை அவர்களோடதுதான்னு இலக்கிய ஆய்வாளர்கள் எளிதா ஏத்துக்கலை. காரணம் மொழியின் தன்மை வேறுபாடுகள்.

    கம்பரைப் பத்தி கிண்டலா பின்னாளில் வந்த காளமேகம் கூட வாரென்றால் வர்ரென்பேன்னு எழுதியிருக்காரு.

    ஆனாலும் இத்தனைக்கும் மேல சிலப்பதிகாரத்துக்குப் பிறகு பெரிய காப்பியமா நிக்கிறது கம்பராமாயணந்தான். அடுத்தது நளவெண்பாவும் பெரியபுராணமும் கந்தபுராணமும்.

    ReplyDelete
  2. நேத்து கமெண்ட்டு போடுறப்போ ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன். புகழெந்தியும் ஒட்டக்கூத்தனும் இழுத்துட்டுப் போயிட்டாங்க.

    இவ்வளவு சிரிக்கச் சிரிக்க எழுதுறீங்களே... ஏன் ஒரு நகைச்சுவை நாவல் எழுதக்கூடாது?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.