30 வருடத்திற்குப் பின் மீண்டும் ’நடந்தாய்; வாழி, காவேரி!’ படிக்கிறேன்.
லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் 1971ல் வெளியிட்ட நூலை 1983ல் வாங்கிப்
படித்த என்னிடமிருந்து உறவினர் ஒருவர் 1984ல் இரவல் வாங்கிச்சென்று விட்டார்.அப்போது இந்த நூலுக்கு மறு பிரசுரமும்
கிடையாது. அதனால் எங்கும் கிடைக்காது. அவரிடம் படித்து விட்டுத் திருப்பித் தரும்படி
கெஞ்சியும் கிடைக்கவில்லை. இப்போது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்.
2007ல் இருந்து 2011க்குள் நான்கு பதிப்பு வந்து விட்டது!
தி.ஜானகிராமனுக்கு நினைவு மதிப்பீட்டு மடல் பழனியில் நான் ஃபுட் ஆயில் பிசினஸ் செய்து கொண்டிருந்த நேரத்தில் முதல் முறையாக என் பிரத்யேக, வித்தியாசமான இன்லண்ட் லெட்டரில் அச்சிட்டு ஐநூறு பேருக்கு தபாலில் அனுப்பி வைத்தேன். மறு வருடம் பாண்டிச்சேரியில் என் லெட்டர் ஹெட்டில் அச்சிட்டு ஆயிரம் பேருக்கு அனுப்பியிருக்கிறேன்.
பழனியில் இருந்து நான் அனுப்பிய தி.ஜா நினைவு
மதிப்பீட்டு மடலை விஜயா பதிப்பகம் வேலாயுதத்திடம் பார்த்த ஒரு நண்பர்- மறைந்த கல்கண்டு
தமிழ்வாணனின் நண்பராம் – சிட்டியிடம் கொண்டு
வந்து காட்டியிருக்கிறார்.
அதைப் பார்த்து விட்டு சிட்டி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
“ அன்பு மிக்க நண்பர் ராஜநாயஹத்துக்கு, சிட்டி வணக்கம். என்னைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நான் தி.ஜானகிராமனுடன் நெருங்கிப் பழகியவன். தி.ஜா. நினைவின் பலனாக உங்கள் நட்பு கிடைப்பதில் மகிழ்ச்சி.”
அதைப் பார்த்து விட்டு சிட்டி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
“ அன்பு மிக்க நண்பர் ராஜநாயஹத்துக்கு, சிட்டி வணக்கம். என்னைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். நான் தி.ஜானகிராமனுடன் நெருங்கிப் பழகியவன். தி.ஜா. நினைவின் பலனாக உங்கள் நட்பு கிடைப்பதில் மகிழ்ச்சி.”
நான் அந்தக்கடிதத்திற்கு எழுதிய பதிலில் அவர் 1934ல் புரசைவாக்கம் ராக்ஸி தியேட்டரில் Queen Christina படம் பார்த்த போது
பி.எஸ்.ராமையாவிடம் அடித்த ஜோக், 1988ல் வ.ரா.நூற்றாண்டு நிகழ்ச்சியில் சிட்டி அடித்த
ஜோக் பற்றியெல்லாம் குறிப்பிட்டு, சி.என். அண்ணாத்துரையின் பச்சையப்பன் கல்லூரி வகுப்புத்தோழர்
என்பதோடு, மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி எழுதிய அந்தி மந்தாரை, ரப்பர் பந்து, உடைந்த வளையல் போன்ற கதைகளையும்
பற்றி, கு.ப.ராவும் சிட்டியும் இணைந்து எழுதிய ’கண்ணன் என் கவி’ நூல் பற்றி,தி.ஜானகிராமனுடன்
சேர்ந்து அவர் எழுதிய “ நடந்தாய் வாழி காவேரி” நூல்பற்றியெல்லாம் எழுதி விட்டு “ வ.ரா.,
தி.ஜா போன்ற இலக்கிய மகான்களுடனெல்லாம் நெருங்கிப்பழகிய நீங்கள் ஒரு சாதாரண வாசகனான
ராஜநாயஹத்தின் நட்பையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வது என்பது ’காக்கை குருவி
எங்கள் ஜாதி’ என்று சொன்ன பாரதியின் பரந்த மனசு தான்” என்று முடித்திருந்தேன்.
சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரம்
சொல்லியிருக்கிறார். “ அப்பா! எப்படியும் ராஜநாயஹத்துக்கு நிச்சயம் உன் வயசு இருக்கும்.
நீ 1934ல் அடித்த ஜோக்கையெல்லாம் எழுதியிருக்கிறார்.” சிட்டிக்கு அப்போது 80 வயது.
தமிழ்வாணனுடைய நண்பர் சொன்னாராம் ” எப்படியும் அறுபது வயசுக்கு குறையாது.”
கோவைக்கு தன்னைப் பார்க்க வரமுடியுமா என்று கேட்டு சிட்டி கடிதம் எழுதினார்.
நான் கோவைக்குப் போய் அவரைப்பார்த்தேன்.
விஸ்வேஸ்வரம் : ராஜநாயஹம்! உங்களுக்கு எங்க அப்பா வயசு இருக்கும்னு சொல்லிண்டிருந்தேன்.உங்களுக்கு
சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணனும்னு நெனச்சிண்டிருந்தேன். இப்படி இவ்வளவு சின்ன வயசா வந்து
நிக்கிறேளே!
…………………………………………………………………………..
அக்டோபர் 29, 2008
புதுவை தமிழ் துறையில் தி சானகிராமன்
அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக ( இரண்டாம் முறையாக ) ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன் . புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.
க .ப .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.
'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது .என் பெயர் ஆர்பி ராசநாயகம் ! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன் . விழாவுக்கு போனவுடன் இபா 'என்ன ராச நாயகம் , ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார் . கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன் !"என்று பட்டிகாட்டானாக மாறி இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார் . தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள் .
பூனைக்கு யார் மணி கட்டுவது ? நான் எதற்கு இருக்கிறேன் ! பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன்! பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் வேறு அந்த சபையில் .
நான் பேசும்போது இந்த தமிழ் வெறியை குறிப்பிடாமல் விடவில்லை.
I broke the ice!
" தமிழில் 'ஷ் ,ஹ ஜ'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இருக்கிற சிறகை பிய்த்து விட்டு தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம்” - இப்படி தி ஜானகிராமன் சொல்வார். அவர் பெயரையே அவர் படத்திலும் அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக ஆபாசமாக எழுதிவிட்டீர்கள் " என்று என் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தேன்.
அவ்வளவு தான் . தனித் தமிழ் வெறியர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். உடனே க.ப .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார் 'தயவு செய்து எல்லோரும் அமருங்கள் .உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '
தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி ' தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம் . உங்களை கையெடுத்து கும்பிட்டு மன்றாடி கேட்டுகொள்கிறேன் '
விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு பல 'கன்னட' கடிதங்கள் அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள் !
"தமிழ்த் துறை நடத்திய விழாவில் ஒருவன் தமிழை பழிக்கிறான் . எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "
டெல்லியில் இருந்து திஜாவின் மகன் சாகேத ராமன் எனக்கு ஒரு கடிதம் நொந்து எழுதினார்.
"சாணி உலகம் ! இந்த சாணியில் 'சானகிராமன்'தான் நிற்க முடியும். "
………………………………………………………………………………………
செப்டம்பர் 8, 2008
என் கனவில் தி.ஜானகிராமன்
தி.ஜானகிராமனை நான் நேரில் பார்த்ததில்லை
. ஆனால் இன்று கனவில் வந்தார்
.இது வரை கனவில் கூட
வந்ததே இல்லை .
அவரை பார்த்தவுடன் அழுகை வந்தது . என் வாழ்க்கையின் அதிர்ச்சிகள் சோகங்கள் எல்லாவற்றையும் சொல்லி அழுதேன். காலம் கற்பித்த பாடத்தின் அடி தாள முடியாமல் தப்பித்து திருப்பூர் வந்ததை சொன்னேன். ‘ கேளுமையா கதை கேளுமையா வாழ பிறந்தோர் நிலை பாருமையா’ என்றும் வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம் என்று திருப்பூர் வந்த கதையை சொல்லி தேம்பி தேம்பி அழுதேன்.
தொலைத்து விட்ட எல்லாவற்றையுமே அவரிடம் வரிசைப்படுத்தி சொன்னேன். காயங்கள் ,அவமானங்கள் ,சிறுமை எல்லாவற்றையுமே சிறு குழந்தை போல விக்கி அழுதுகொண்டே .........
அவருடைய
' சத்தியமா ' கதையில் வருகிற மாசில்லா
சிறுவன் நான் தான் , அந்த'
பரதேசி வந்தான் ' கதையில் வருகிற பரதேசி
யும் நான் தான் என்றேன்
.
அந்த காலத்தில் தெய்வ நம்பிக்கை இருந்த போது பூஜை அறையில் பிள்ளையார்,முருகன் ,லிங்கம் , விஷ்ணு , ஆண்டாள் படங்களுடன் தி.ஜா படத்தையும் வைத்து கும்பிட்ட கதையை சொன்னேன் . இதை சொன்னவுடன் மட்டும் வேதனையுடன் முகம் சுழித்து " ஏன் அப்படி செய்தீர்கள் " என்று பதறி வருத்தப்பட்டார் .
கனவு எப்போது முடிந்தது .
தெரியவில்லை .
கனவுக்கு அர்த்தம் என்ன ? கடவுளை தூக்கிபோட்டு விட்ட என்னால் தி. ஜா படைப்புகளை புறம் தள்ள முடியவில்லை . தி.ஜா வும் என்னோடு இருக்கிறார் .
ஒரு நாள் என் கனவில் அந்த ரஷ்யனும் வருவான் . வெகு துயரங்களை அனுபவித்தவன் , கரமசாவ் சகோதரர்களை எழுதிய கலைஞன் . இது என் நம்பிக்கை . அவனிடமும் நான் தேம்பி தேம்பி அழுவேன்.
...................................................
http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post.html
http://rprajanayahem.blogspot.in/2008/07/blog-post_23.html
http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_16.html
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.