Share

Mar 1, 2013

கவிஞர் நீலமணி



கவிஞர் நீலமணி 1936ல் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர்.
பாரதிக்கு தாசன் சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். சுப்புரத்தின தாசன் தான் சுரதா. கவிஞர் சுரதாவை ஆதர்சமாகக் கொண்டு கவிதை எழுதத் துவங்கிய நீலமணியை 1971ல் புதுக்கவிதைக்கு கொண்டு வந்தது ‘கசடதபற’ சிற்றிதழ்.
இவருடைய “தீர்க்கரேகைகள்” என்ற கவிதைத்தொகுப்பு கோமண சைசில் 3 ரூபாய்க்கு சிவகெங்கையிலிருந்து கவிஞர் மீராவின் அகரம் வெளியீடாக வெளி வந்தது.
“உங்கள் கவிதைகளில் நல்ல பஞ்ச் விழறது.ஹைக்கூவெல்லாம் படித்திருக்கிறீர்களா?”
-”இல்லை. என்னைப் பாதிக்கும் நிஜங்களையே கவிதையாக்குகிறேன்.”

”உங்கள் இசம் ?”

-    “ மாமிசம். மனிதனுக்கு எஜமானாகி விடும் எந்த இசமும் என் மரியாதையை இழக்கிறது.”
இப்படி சொன்னவர் நீலமணி.

இவர் கவிதைகளைப் பற்றிய விமர்சனங்களாக அந்த ’கோமண சைசு’ தொகுப்பில் சில வரிகள் இடம்பெற்றிருந்தன.
‘டிராகுலாவின் இராக்காலச் சிந்தனைகள்’
‘மனிதாபிமானமற்ற ஒரு குரூரத்தன்மை கவிதைகளில் பதுங்கிக் கிடக்கிறது.’
‘இவை கவிதைகளே அல்ல.’
‘இவர் கவிதைகள் தனியாகத் தெரிகின்றன’
‘பொதுவாக இவர் அசிங்கங்களை அழகாக்கிப் பேசுகிறார்’
‘ a predominant element of irony, a stinging satire and a ‘hell with you’ nonchalant spirit’
இங்கனமெல்லாம் அபிப்பிராயம் கொண்ட விமர்சகர்கள் யாரென்ற குறிப்பு ஏதும் தொகுப்பில் இல்லை.
ஆனால் சுஜாதா அவருக்கேயுரித்தான தோரணையில் நீலமணி கவிதை பற்றி அன்று அவ்வப்போது குறிப்பிட்டிருக்கிறார்.
வள்ளல் பாரி பற்றி ‘நடந்த மக்களின் தோள் மீதேறிய சிவிகைச் செல்வர் செலுத்திய வரியால் உருவான தேரை முல்லைக்கொடிக்கு நிறுத்தியன்’ என்கிறார்.
‘ காபரேக் காரியைக் கட்டிக்கொண்டேன்.
மியூசிக் இன்றி அவழ்க்க மறுக்கிறாள்’

‘பாதி மதித்-தலைப் பரமன் படைத்த உலகம்
வேறே எப்படி இருக்குமாம்?’

‘ வண்டோடு சம்போகம் செய்து விட்டுக்
குளிக்காமல் கடவுள் தோளேறும் மாலைப் பூ.’

’நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்
என்று விளம்பரங்கள் வற்புறுத்துகின்றன: வாயேன்.’

‘தட்டினால் திறப்பாராம் தாராளக் கடவுள்
சாத்தி வைப்பானேன்?’

‘உடைந்த வளைகளும் நசுங்கல் மலர்களும்
உன் காதல் கதையைச் சொல்லலாம்; ஆனால் –
உடையவே வளைகளா? நசுங்கவே மலர்களா?’

”ஒண்டுக் குடித்தனகூண்டுக் குடும்பி
கண்டு பிடித்தது
ரப்பர் வளையல்”

’கண்ணீரைப் படைத்தது கடவுளின் தவறா?
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல் அழுது வடிக்கும் மனிதனின் தவறா?’

‘செத்துப் படமாகுமுன்
சட்டத்துள் வாழ்வது
எளிதில்லை யார்க்கும்’

’கங்கா- உனது நீர் அமிழ்தென்றால்
உன் முதுகின் மேல்
பிணங்கள் மிதப்பதேன்?’

‘ என்ன வரம் வேண்டும் என்கிறார் கடவுள்.
அது தெரியாத நீர் என்ன கடவுள்?’
இந்தக்கவிதை அவன் – இவன் படத்தில் வசனத்தில் (நீலமணி கவிதையாக இல்லாமல்!) இடம் பெற்றது. என்னுடைய ‘சொர்க்கம் கைலாசம்’ 2008 நவம்பர் பதிவில் இக்கவிதையை நீலமணியின் கவிதையாக மேற்கோள் காட்டியிருக்கிறேன். அதே 2008ல் ‘கண்ணகி’ பதிவில் கீழ்க்கண்ட கவிதையை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
’பாதச்சிலம்பால் பதியை இழந்தவள்
பருவச்சிலம்பைத் திருகி எறிந்தனள்.’

‘அனைவரும் படிக்க விரும்பும் கவிதை:
ரிசர்வ் பாங்க் கவர்னரின் “ ஐ – ப்ராமிஸ் – டு – பே “

’பொய்களை எழுத நாங்கள் போடும் பிள்ளையார் சுழி:
சத்யமேவ ஜயதே.’

“உழைத்தால் உயரலாம் உழைத்தால் உயரலாம்..
அது சரி, யார் உழைத்தால் யார் உயரலாம்?”

”ஊழி வருக ஊழி வருக ஊழி வந்த பின் –
முண்டக்கடவுளே- அடுத்த உலகத்தையேனும்
ஒழுங்காய்ப் படையும்!”

’உலகக் கொடுமை தாள முடியலை.
அன்னையுன் வயிற்றுள் மீண்டும் வந்திடட்டுமா?’

காமம் – ’மிஞ்சுவது கரிதான் என்று தெரிந்தும்
எரியும் மத்தாப்பு.’

துஷ்ட நிக்ரகம் – ’யுகந்தொறும்  தேவன் வந்தவதெரிக்கத்
துஷ்டர்கள் நம்மைத் துன்புறுத்தட்டும்!’
இப்போது நீலமணி உயிரோடிருந்தால் அவருக்கு 77 வயதாயிருக்கும். இவர் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
கவிஞர் ராஜசுந்தர்ராஜனுக்கு ஏதேனும் தகவல் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.

.............................................................

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_2305.html

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_31.html




3 comments:

  1. அன்பின் ராஜநாயஹம்,

    இந்தக் கவிதைப் புத்தகம் தூத்துக்குடியில் நான் இருந்த காலத்தில் என் வீட்டில் இருந்தது.

    ‘காபரேக் காரியைக் கட்டிக்கொண்டேன்.
    மியூசிக் இன்றி அவழ்க்க மறுக்கிறாள்’

    ’நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்
    என்று விளம்பரங்கள் வற்புறுத்துகின்றன: வாயேன்.’

    இந்த வரிகளை உங்கள் பதிவில் வாசிக்கையில் முறுவலிக்காமல் இருக்க முடியவில்லை. சின்ன வயதில் வாசித்தது அல்லவா? இதுதான் என் மண்டையில் ஏறி இருக்கிறது! மட்டுமல்ல, இன்னும் நினைவில் இருக்கிறது!

    நன்றி! ஆனால் கவிஞரோடு எனக்குப் பரிச்சயம் இல்லை. மீரா இந்தப் புத்தகத்தை எனக்கு இலவசமாகக் கூடக் கொடுத்திருக்கலாம். ஒன்றும் ஞாபகம் இல்லை. மீரா உயிரோடு இருந்திருந்தால் கவிஞர் நீலமணியைக் கண்டுபிடிப்பது எளிது. ம்ஹூம்! Brilliant writings! என்ன கொடுமை இவரை மறந்துவிட்டோமே!

    You are amazing, Rajanayahem!

    ReplyDelete
  2. அறிமுகத்திற்கு நன்றி!
    என்ன அழகாக எழுதியிருக்கிறார்? இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை.
    நன்றி மீண்டும்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.