Share

Apr 5, 2013

அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்குழந்தை நட்சத்திரங்களில் துறுதுறுப்பு, நல்ல எக்ஸ்ப்ரஸன், ரசிகர்களை ஈர்த்த நடிப்பு என்று கலக்கியவர் டெய்சி ராணி. ’யார் பையன்’(1957)படத்தில் டெய்சி ராி சிறு பையனாக டைட்டில் ரோல்! இந்தி குழந்தை நட்சத்திரம்.

களத்தூர் கண்ணம்மா(1960) படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரம் கமல் ஹாசன் பார்த்தால் பசி தீரும்(1962) படத்தில் இரட்டை வேடம்! பாதகாணிக்கை (1962), வானம்பாடி (1963), ஆனந்த ஜோதி (1963) படங்களில் நடித்த பின் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. ஏனோ வாய்ப்பு தான் இல்லையோ அல்லது வேறு காரணமோ. டி.கே.எஸ் நாடகக்குழுவில் பயிற்சி.களத்தூர் கண்ணம்மா படத்தில் கமலுடன் நடித்த தசரதன் ’நானும் ஒரு பெண்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகனாக நடித்திருப்பார். மேஜர் சந்திரகாந்த் படத்தில் நாகேஷுடன் ‘கல்யாண சாப்பாடு போடவா! தம்பி கூடவா!’ பாடலில் நடித்தவர். நினைவில் நின்றவள், வா ராஜா வா என்று நினைவில் நிற்கும்படி நடித்தவர் தான் தசரதன்.

’என்னோடு களத்தூர் கண்ணம்மாவில் நடித்த தசரதன் இன்று நான் காரில் போகும்போது ரோட்டில் நடந்து போகிறார்.’ என்று பல வருடங்களுக்கு முன் கமல் ஹாசன் வருத்தப்பட்டார்.


 காதர் பாசமலரில் துவங்கி, மதராஸ் டூ பாண்டிச்சேரியில் பக்கோடா காதர் ஆக பிரபலமானவர்!தசரதனும், பக்கோடா காதரும் கணக்கே இல்லாமல் பல படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக தலை காட்டினார்கள். இருவருமே இறந்து விட்டார்கள்.
 

கமல் ஹாசனின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் கர்ணன்(1964) படத்தில் மாஸ்டர் ஸ்ரீதர் என்ற பையன் தலை காட்டினான். கமலுக்கும் ஸ்ரீதருக்கும் வயதில் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது. ஒருவேளை கமல் தொடர்ந்து சினிமாவில் நடித்திருந்தால் இந்த ஸ்ரீதர் செய்த ரோல்கள் தான் செய்திருக்க முடியும். கந்தன் கருணை(1967)யில் பாலமுருகனாக நடித்த மாஸ்டர் ஸ்ரீதர் பின் சத்தியம் தவறாதே(1968), தெய்வீக உறவு(1968) என்ற படங்களில் நாடக வசனம் பேசி பக்கா நாடக நடிக சிறுவனாக வளர்ந்து நம்ம குழந்தைகள் (1970) படத்தில் நாடகபாணியிலிருந்து மீள முடியாத, வளர்ந்து விட்ட, வயதுக்கு வந்து விட்ட பையனாக இருந்தான். 

சிவாஜியின் இடத்தைப் பிடிக்கலாமா? எம்.ஜி.ஆர் இடத்தைப்பிடிக்கலாமா? என்று கனவுடன் மாஸ்டர் ஸ்ரீதர் வாலிபனாக சினிமாப் பத்திரிக்கையில் பேட்டி கொடுத்துக்கொண்டு..!

 குட்டி பத்மினி பாசமலர்(1961)படத்தில் குழந்தை சாவித்திரியாகத் தலைகாட்டி, நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) படத்தில் பிரபலம். கமலின் குழந்தை நட்சத்திர வாழ்வு முடிவுக்கு வந்த பின் குட்டி பத்மினி பிஸி! நவராத்திரி(1964) க்கு பின் குழந்தையும் தெய்வமும் (1965). குழந்தையும் தெய்வமும் தான் குட்டி பத்மினிக்கு இன்று வரை சிறந்த படம்! குட்டி பத்மினியும் எதிர் கால கதாநாயகி நான் தான் என்ற பெருமிதத்தில் தான் இருந்தார். சிவாஜி அங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன்.எம்.ஜி.ஆர் அங்கிளுடன் ஜோடியாக நடிப்பேன் என்று தான் பேட்டிகளில் சொல்லிக்கொண்டே! 


நம் நாடு(1969) படத்தில் குட்டி பத்மினிக்கு தம்பியாக நடிகை ஸ்ரீதேவி. துணைவன்(1969) படத்தில் தேவர் அறிமுகப்படுத்திய குழந்தை நட்சத்திரம்.ஆதி பராசக்தி (1971) தெய்வக்குழந்தைகள் (1973) என்று ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக நடித்த முக்கிய படங்கள்.


கற்பகம்(1963) படத்தில் பேபி ஷகிலா குழந்தை நட்சத்திரம். ”அத்தை மடி மெத்தையடி! ஆடி விளையாடம்மா!”
பேபி ஷகிலாவின் பிற படங்கள்- எங்க வீட்டுப்பிள்ளை, இருவல்லவர்கள், எங்க பாப்பா.

ரோஜா ரமணி சிறுவனாக பக்த பிரகலாதா(1967)ல், இருமலர்கள்(1967), என் தம்பி(1968), சாந்தி நிலையம்(1969) போன்ற படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம். மணிரத்தினத்தின் அஞ்சலி(1990)யில் ரோஜாரமணியின் மகன் தருண் தான் ரேவதி - ரகுவரனுக்கு மகன்.

பேபி ராணி நடித்த படங்கள் 
பேசும் தெய்வம்(1967),குழந்தைக்காக(1968), கண்ணே பாப்பா (1969) ஆகியவை.

கமல் குழந்தை நட்சத்திரமாக இல்லாத தமிழ்த்திரையில் ஆக்கிரமித்த மற்றொரு நடிகர் மாஸ்டர் பிரபாகர். பிஸியான குழந்தை நட்சத்திரம். பாமா விஜயம்(1967), இருகோடுகள்(1969) என்று தொடர்ந்த மாஸ்டர் பிரபாகர் கதாநாயகனாக வா ராஜா வா(1969) வில் முக்கியத்துவம்!

 அனாதை ஆனந்தனில் டைட்டில் ரோல் செய்த(1970) மாஸ்டர் சேகர் குடியிருந்த கோவில் (1968) படத்தில் இரட்டை சின்ன எம்.ஜி.ஆர்.
அகத்தியர்(1972) மணிப்பயல்(1973) சொல்லத்தான் நினைக்கிறேன்(1973) வரை பையனாக நடித்தவர் தான் மாஸ்டர் சேகர். இன்று இவர் உயிருடன் இல்லை.

ராமு (1966) படத்தில் அறிமுகமாகி பெற்றால் தான் பிள்ளையா(1967), சபாஷ் தம்பி(1967) ஆகிய படங்களில் நடித்த மாஸ்டர் ராஜ்குமார்.

 குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் Miniature Adults” என்ற மிகையில் தான் நின்றனர். கொழந்தங்க வசனமெல்லாம் ’டயலாக்கா’ பெரிய மனுஷ தோரனையில தான்!

குழந்தை நட்சத்திரங்கள் அனைவருமே எதிர் காலத்தில் திரையில் கதாநாயகன், கதாநாயகிகளாக வலம் வருவோம் என்று நம்பியவர்கள் தான். 

கமல் ஹாசன் பதின்வயதில் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆக இருந்தார்.
மாணவன் (1970) படத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் குட்டி பத்மினியுடன் ஒரு பாடல் காட்சியில் ஆடிப்பாடினார். “விசிலடிச்சான் குஞ்சிகளா! குஞ்சிகளா! வெம்பிப் பழுத்தப் பிஞ்சுகளா! பிஞ்சுகளா!” இந்தப் பாடலில் கமலுக்கு ஒரு குளோசப் ஷாட் கூட கிடையாது.


தொடர்ந்து கமல் டான்ஸ் அஸிஸ்டண்ட் ஆகத்தான் கொஞ்சகாலம். அன்னை வேளாங்கண்ணி(1971)யில் அஸிஸ்டண்ட் டைரக்டர். அதில் ஸ்ரீவித்யாவுடன் நடித்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஜெமினி கணேசன் டைரக்டர் ஸ்ரீதரிடம் கூட்டிக்கொண்டு போனார். கமலைப் பார்த்து விட்டு ஃபோட்டோஜீனிக் ஃபேஸ் கிடையாது என்று அபிப்பராயப்பட்ட டைரக்டர் ஸ்ரீதர் அஸிஸ்டண்ட் டைரக்டராகச் சேர்த்துக்கொள்ளமுடியும் என்று சொன்னாராம். 

குறத்தி மகன் (1972) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வாய்ப்பே இல்லாமல், முக்கிய ரோல் செய்த செயற்கையான நாடக பாணி நடிகர் மாஸ்டர் ஸ்ரீதரைப் பார்த்து “ ராஜா வாழ்க” என்று கோஷம் போட்டுக்கொண்டு நடிக்க வேண்டியதாகிப்போனது. ஆர்.சி. சக்தியிடம் கமல் “ படத்தில என்னை கே.எஸ்.ஜி ஒரு ஓரமாக நிறுத்திட்டாருண்ணே ” என்று தேம்பினார்.

அடுத்து அரங்கேற்றம் (1973) படத்தில் நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. முன்னூறு ரூபாய் தான் கொடுத்தார்களாம். பாலச்சந்தரிடம் முறையிட்டபோது அவர்-“ பின்னால் நல்ல சம்பளம் கிடைக்கும். கவலைப்படாதே” 

சொல்லத்தான் நினைக்கிறேன்(1973) படத்தில் வில்லன் ரோல். அந்தப்படத்தில் ரசிகர்கள் கவனம் பெற்று விட்டார்.
 " அடே! டேய்! களத்தூர் கண்ணம்மாவில நடிச்ச பயடா!”

அவள் ஒரு தொடர்கதை (1974), அபூர்வ ராகங்கள் (1975), மன்மதலீலை (1976) அதன் பின் நடந்ததெல்லாம் சரித்திரம்.


1976 ல் நடிகை ஸ்ரீதேவி கமலுடன் மூன்று முடிச்சு படத்தில் நடித்தார். அபூர்வ ராகங்களில் சுருதி பேதமாக தலை காட்டிய ரஜினி காந்த் மூன்று முடிச்சில் தேள் கொடுக்கு போல வித்தியாசமான வில்லனாக கவனம் பெற்று விட்டார்!

குழந்தை நட்சத்திரங்களில் கமல் ஹாசனும் ஸ்ரீதேவியும் மட்டுமே அகில இந்திய அளவில் நட்சத்திரமாக பிரகாசித்து, சாதித்து விட்டார்கள்.6 comments:

 1. காஜா ஷெரீஃப்..?

  ReplyDelete
 2. தலைப்பு - அந்த நாள் குழந்தை நட்சத்திரங்கள்.
  1969வரை அறிமுகமான குழந்தை நட்சத்திரங்கள் தான் இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ளார்கள்.

  ReplyDelete
 3. இப்போது இவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லையே . உங்களுக்கு தெரிந்திருப்பின், தனி பதிவாக போடுங்களேன்.

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 5. நன்று :-)

  குழந்தை நட்சத்திரங்களின் புகைப்படத்தையும் போட்டிருக்கலாம் :-)

  ReplyDelete
 6. அன்னை வேளங்கண்ணி திரைப்படத்தில் 'தேவமைந்தன் போகின்றான்' பாடலில் இயேசு கிறிஸ்துவாக வருபவர் கமல் ஹாசன் என்று நினைக்கின்றேன். பாடல் youtubeல் கிடைக்கின்றது. சரி பார்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு 1972 ல் நான் ஏன் பிறந்தேன் MGR படத்தில் தங்கப்பன் மாஸ்டருக்கு உதவி நடன இயக்குனர். மாஸ்டர் சேகர், மாஸ்டர் ஸ்ரீதர், இருவரும் திரையில் இறுதியாக வந்ததில் சற்று நின்றது, நல்லதொரு குடும்பம் (1979). இருவருக்கும் வேறு இரு பெண்களுடன் ஒரு பாடல் இருக்கும், செவ்வானமே பொன்மேகமே. கமல்ஹாசன் அப்போது 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் முடித்து, இவர்களால் தொட முடியாத இடத்துக்கு சென்று விட்டார். எனக்குத் தோன்றுவது, இவர்கள் மட்டுமின்றி நிறைய masterகள், இருதலைக்கொள்ளி எறும்பு மாதிரி, படிப்பு மீதும் ஒரு கால் வைத்து நிற்க, கமல் மட்டும் தான் 'உறு மீனுக்காக வாடியிருந்த கொக்கு'.

  செல்வக்குமார்

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.