Share

Jan 1, 2015

ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்.தி.மு.க மன்றத்தின் அருகில் குருவி மண்டையனின் சைக்கிள்.
'ஒதுக்குவதும் ஒதுங்குவதும் தான் பிராமணீயம்.
 பிராமணர்களை எப்படி ஒதுக்க வேண்டும், பார்ப்பன அபாயங்கள் என்னன்ன?' – குருவி மண்டையனின் விரிவான லெக்சர் தடை பட்டது.
ரிக்சாக்காரன் லெச்சுமனன் பொண்டாட்டியோட தம்பி மகராஜன் போதையில சவுண்ட குடுத்துக்கிட்டே வந்தவன் சைக்கிள ஒரு ஒதைச்சு தள்ளி விட்டான்.
குருவி மண்டையனின் பார்ப்பன துவேசம் திசை திரும்பி மகராஜன் மேல் பாய்ந்தது. மகராஜன் முதுகில் நாலு சாத்து. 
"டே!குருவிமண்டையா! இருடி,ஒனக்கு இருக்குடி" மகராஜன் புலம்பிக்கிட்டே தான் போனான்.
 
குருவி மண்டையன் உடனே கிளம்பி லெச்சுமனன பாக்க அவன் வீட்டுக்கு போனான். கூரை வீடு. இரவு ஏழு மணி இருட்டு.
“லெச்சுமனா”
“என்னா சொல்லு.”
“ஒன் மாப்பிள மகராஜன் மப்பில என் சைக்கிள தள்ளி விட்டுட்டான். டே என்னடா அப்படின்னா ரொம்ப சலம்புனான். சும்மா ரெண்டு தட்டு தட்டுனேன்.”
“என்ன லெச்சுமனா.. பதிலே சொல்ல மாட்டேன்ற...ஒன் கிட்ட சொல்லனுமென்னு தான் வந்தேன்... என்ன லெச்சுமனா... பேசவே மாட்டேன்ற...”
குருவி மண்டையனுக்கு கொஞ்சம் திகில். “ சரி... நான் வர்றேன்...லெச்சுமனா..”

மறு நாள் குருவி மண்டையன் மன்றத்தில் ” “எங்கள் திராவிடப்பொன்னாடே!கலை வாழும் தென்னாடே!” டி.ஆர்.மஹாலிங்கம் பாடலை (மஹாலிங்கம் சோழவந்தான் பிராமணர்!) உணர்ச்சி பூர்வமாக பாடிவிட்டு“பாம்பையும் பாப்பானையும் பாத்தா முதல்ல பாப்பானத் தான்டா அடிக்கணும். ஆரியனுங்க அயோக்கியனுங்க..” என்பதாக சொல்லி, தான் எத்தனையோ பிராமணர்களை இம்சை அவமானம் செய்த சம்பவங்களை சுவாரசியமாக விளக்கமாகக் கூறிக்கொண்டிருக்கையில்
லெச்சுமனன்,வைகைமணி,ஒச்சு, ஆட்டு மூக்கன் சகிதமாக ஆரப்பாளையம் சல்லிகள் வருகை நடந்தேறுகிறது.
குருவிமண்டையன் லெக்சரைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்த கோழி குணா தான் கேட்டான்“என்ன மாமா?”. 
கோழி குணா லெச்சுமணன் சொந்தக்காரன். குருவி மண்டையனுக்கு ரொம்ப நெருங்கிய நண்பன்.
“ மாப்பிளே! நல்லா கேட்டுக்க! நேத்து இருட்டின நேரத்தில நானும் உங்கக்காவும் கயித்துக்கட்டில்ல வீட்டுக்குள்ள படுத்துருக்கோம். நல்லா கவனிச்சுக்கேளுடா மாப்ள. நான் கொஞ்சம் போதை. உங்கக்கா இப்ப வேணாம்யான்னு சினுங்கிறா. நான் தான் ‘இப்ப வர்ரியா இல்லயாள்ள...’ன்னு மிரட்டிக் கட்டில்ல இழுத்துப்போடுறன். நல்லா கேட்டுக்கடா மாப்ள! கெவினிச்சிக்கேளு...கெவினிச்சுக்கேக்கனும்டா.. நானும் ஒங்கக்காளும் அணைஞ்சிக்கிட்டு இருக்கோம்டா!ஒர்த்தன் வர்ரான்! தீப்பெட்டிய எடுத்து ஒரு குச்சிய கொளுத்தி பாக்கறான்.நான் யார்டாங்கறேன். அதுக்குள்ள குச்சி அனஞ்சிருச்சி. டே.. மாப்ளே! நல்லா கவனிச்சிக் கேளு!”

கோழி குணா ( குணா மேய்கின்ற கோழிகளை கபளீகரம் செய்பவன்) பதறிக்கேட்கிறான்: ‘யார் மாமா அவன்?’
லெச்சுமனன்: “மாப்ளே! திரும்பவும் ஒரு குச்சிய கொளுத்துறாண்டா! கட்டில்ல படுத்திருக்ற என்னையும் ஒங்கக்காவையும் அந்த வெளிச்சத்தில உத்துப்பாக்கறாண்டா... ‘டே! யார்றா நீ’ன்றண்டா நான். சாவகாசமா சட்டையே பண்ணாம அவன் அடுத்த குச்சியைப் பொருத்தி ஒங்கக்கா மூஞ்சி கிட்ட காட்டுறாண்டா..”
லெச்சுமனையும் கோழி குணாவையும் மாறி,மாறிப் பார்த்துக்கொண்டு குருவி மண்டையன்.
கோழி குணா கொந்தளிச்சி “ என்ன மாமா! ஒக்காலி அவன சும்மாவா விட்ட. அவன் யாருன்னு சொல்லு.”
பொறி பறக்க, விழிகளிரண்டும் புருவமாங்கு துடிக்கச்
சினத்தின் வெறி தலைக்க...

குருவி மண்டையன் மூஞ்சில ஒரு அடி அடிச்சி லெச்சுமனன் சொல்றான் “இந்த குருவி மண்டையன் தாண்டா மாப்ள!”
வைகை மணி, ஒச்சு,ஆட்டு மூக்கன் உள்ளிட்ட சல்லிகளெல்லாம் உடனே குருவி மண்டையனை அடி பொறித்து எடுக்கிறார்கள்.
வாயினால் சொல்லிடவும் அடங்காதப்பா! வரிசையில் எழுதி வைக்க வகையும் இல்லை.

அஞ்சு பெர்சன்ட் பத்து பெர்சன்ட் இல்ல..அடி நொறுக்கப்பட்ட சேதாரம் எம்பது பெர்சன்ட்!
 
கோழி குணாவும் கீழே விழுந்த குருவிமண்டையனுக்கு காலால் ரெண்டு எத்து பலமாக கொடுத்தான்.

http://rprajanayahem.blogspot.in/2012/10/blog-post_5.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-34.html

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post_17.html
.....................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.