Share

Nov 21, 2014

ருத்ர தாண்டவம்


“அவள் அப்படித்தான்” ரிலீஸான காலத்தில் அதை நான் பார்க்கவில்லை.பார்க்க கிடைக்கவேயில்லை.
 சென்னையில் மிட்லண்ட் லியோ தியேட்டரில் காலைக் காட்சியாக ஒரு வாரத்திற்கு திரையிடப்பட்டபோது முதல் நாள் பார்த்தவன் தொடர்ந்து மூன்று நாட்கள் அதே காலைக்காட்சிக்கு போய்விடுவேன். ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் மூன்று நாட்கள் தொடர்ந்து பார்த்தேன். அதன் பிறகு இன்று வரை எத்தனை தடவை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே கிடையாது.
அவள் அப்படித்தானை மிகவும் நேசித்தேன் என்றால் ருத்ரையாவின் கிராமத்து அத்தியாயத்தை மிகவும் வெறுத்தேன்.
சந்திர ஹாசனின் நடிப்பு மிகவும் மோசம்.
குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாயிருக்குமோ! – குழம்பிப்போனேன்.

அவள் அப்படித்தான் - அனந்து, வண்ண நிலவன், சோமசுந்தரேஷ்வர், கமல்,ஸ்ரீப்ரியா இவர்களின் சாதனை, அந்தப்பாடல்கள் இசையமைத்த இளையராஜா என்ற கூட்டு முயற்சியில் ருத்ரையா குளிர் காய்ந்திருக்கலாம்?? 
அதற்குப்பின் ருத்ரையா மீண்டு தன்னை நிரூபிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை.
சினிமாவில் தோற்றுப்போன மனிதர் என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள்.
அம்மைத்தளும்புகள்(?) கொண்டமுகம்,சுருட்டை முடி(?), ஏறிய நெற்றியுடன் ருத்ரையா ஒரு ரஜினி படத்தின் நூறாவது விழாவுக்கு நடிகர் சங்கக் கட்டிடத்திற்கு வந்திருந்த போது தள்ளி நின்று பார்த்திருக்கிறேன்.


வண்ண நிலவன் எழுதிய கட்டுரையை தி இந்துவில் படித்தேன்.  ருத்ரையாவின் தி.ஜா.அம்மா வந்தாள் கனவு. அதற்கு திரைக்கதை வண்ண நிலவனே எழுதியிருக்கிறார். வண்ண நிலவனிடம் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து ஜானகிராமனிடம் கொடுக்க டெல்லிக்கு அனுப்பியிருக்கிறார். அந்தப்பட முயற்சி கை கூடவில்லை என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஜானகிராமன் பெற்றுக்கொண்ட பணத்தை டெல்லியிலிருந்து ஓய்வு பெற்று சென்னைக்குத் திரும்பிய பின் ஜானகிராமன் கொடுத்துவிட்டார். அதற்குள் பத்து பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன என்று வண்ண நிலவன் சொல்வது நினைவுக்குழப்பம்.
ருத்ரையாவை 1976ல் வண்ண நிலவன் சந்தித்திருக்கிறார். 1977ல் திரைப்படக்கல்லூரியிலிருந்து ருத்ரையா வெளியே வந்திருக்கிறார்.
தி.ஜானகிராமன் எழுத்தில் ருத்ரையாவுக்கு ப்ரேமை. அப்புவாக கமலை நடிக்கவைக்க ஆசைப்பட்டு அம்மாவந்தாள் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அந்த முயற்சியில் தி.ஜாவுக்கு வண்ண நிலவன் மூலமாக அதே வருடம் பணம் கொடுத்திருந்தால் கூட அவர் பணத்தை திருப்பிக்கொடுக்க பத்து பதினைந்து வருடங்கள் எப்படி ஓடியிருக்கமுடியும். ஐந்தே வருடத்தில்1982ல் தி.ஜா இறந்து போய்விட்டார். ஒரு வினோத நிகழ்வு. Coincidence! தி.ஜா சென்னையில் இறந்த தேதி கூட ருத்ரையா இப்போது சென்னையில் இறந்து போன நவம்பர் பதினெட்டாம் தேதி தான்!
கிராமத்து அத்தியாயத்தில் மட்டுமல்ல. வெளி வராமல் போன மற்றொரு முயற்சி ‘ராஜா என்னை மன்னித்து விடு’ படத்தில் கூட சுமலதாவுடன் சந்திர ஹாசன் தான் கமிட் ஆகியிருந்தார். அதற்கு கமல் வேண்டும் என்று ருத்ரையா ஆசைப்பட்டிருக்கலாம் தான். ஆனால் கமல் தான் கழுவுகிற மீனில் நழுவுகிற ஆளாயிற்றே.
பின்னால் கமல் நினைத்தால் ருத்ரையாவிற்கு கிராமத்து அத்தியாயம் தோல்விக்குப்பின் மீண்டும் ஒரு வாய்ப்பு தந்திருக்க முடியாதா?

சமீபத்தில் கூட கமல் ஹாசனை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததாக வண்ண நிலவன் சொல்கிறார்.


இது தான் சினிமா ! மாய புதிர் கோட்டை!


எழுத்தாளர் அம்பையின் பெண்ணிய பார்வை ருத்ரையாவின் அவள் அப்படித்தானையும் குதறியது அபத்தம்!

இவ்வளவு நாளும் சொல்லாத ஒரு விஷயத்தை ருத்ரையாவிற்கு அஞ்சலியாகவேனும் சொல்லி விட விரும்புகிறேன்.
மகேந்திரனின் உதிரிப்பூக்களை விட ருத்ரையாவின் அவள் அப்படித்தான் மிகவும் உயர்ந்த உன்னதம்!
..........
  

4 comments:






































  1. you are the only person strips out the Cinema Hero's . thanks for ur sharing

    ReplyDelete
  2. கிராமத்து அத்தியாயத்தை குமுதம் ஒரு பிடிபிடித்துவிட்டு, இப்படியேல்லாம் ஒரு படமெடுத்து அது ஓடுமென்று நினைக்க, ருத்ரையா என்ன பெரிய கொம்பனா என்று முடித்திருந்தது. அடுத்த வார குமுதத்தில் (அதிகம்போனால் ஓரிரு வார குமுதத்தில்) நடுப்பக்கத்தில் “நான் பெரிய கொம்பன் தான்” என்று ருத்ரையா பதில் முழுக்க பிரசுரமாயிருந்தது. இன்றும்கூட எனக்கு அது முக்கியமான கடிதமென்று தோன்றுகிறது. அழகான ஆணும் பெண்ணும் தான் காதலிக்க வேண்டுமா/காதலிக்கின்றார்களா. கதாநாயகர்கள் தைரியமானவர்களாகத்தான் இருக்க வேண்டுமா (படத்தில் நாயகன் தன் தந்தைக்கு பயந்து காதலை தொலைத்து விடுவான்) என்பது மாதிரி ஆரம்பித்து எழுதப்பட்ட கடிதம். எனக்கு சரியாக ஞாபகமில்லை. குமுதத்தில் தெரிந்தவர்கள் இருந்தால் தேடுவது எளிது, கிராமத்து அத்தியாயம் வந்த வார/அடுத்த வார/ஒரு மாத குமுததிற்குள் கிடைத்துவிடும். அது மிகவும் முக்கியமான இன்றும் பயன்படக்கூடிய ஒரு கடிதமாக இருக்கும்.
    செல்வக்குமார்

    ReplyDelete
  3. ----இவ்வளவு நாளும் சொல்லாத ஒரு விஷயத்தை ருத்ரையாவிற்கு அஞ்சலியாகவேனும் சொல்லி விட விரும்புகிறேன்.
    மகேந்திரனின் உதிரிப்பூக்களை விட ருத்ரையாவின் அவள் அப்படித்தான் மிகவும் உயர்ந்த உன்னதம்!---

    இது எனக்கும் தோன்றிய ஒரு எண்ணம். மேலும் சரியான கருத்து.

    ReplyDelete
  4. ஆனந்த விகடனில் பஞ்சு அருணாச்சலம் எழுதும் திரைத்தொண்டர் புராணம் - இந்த வாரம் , ருத்ரய்யா பற்றி வந்திருக்கிறது. நீங்கள் படித்திருப்பேர்கள் என்று நம்புகிறேன்.

    http://www.vikatan.com/anandavikatan/2016-aug-10/serials/121957-thiraiththondar-panchu-arunachalam.art

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.