மதுரை சுற்று வட்டார ஊர்களில்
நகைக்கடை பஜாருல
"கயிறு போடறது"ன்னு ஒரு Jargon உண்டு.
ஒரு நகையை விற்க வேண்டிய நிலை வரும் போது வாங்கிய கடையில் விற்றுப் பணம் வாங்குவது உடனடியாக நடக்காது.
' ஒரு பதினைந்து நாள் கழித்து வா ' என்று பதில் வரும். பதினைந்து நாள் கழித்து போனாலும் ஏதாவது சால்ஜாப்பு தான் பதில்.
வாங்கிய கடையில் திருப்பிக் கொடுத்தால் நல்ல விலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
ரொம்ப வருடத்திற்கு முன்பு வாங்கியிருந்த நகையென்றால், முந்தைய கடையே இப்போது இல்லை என்று கூட ஆகியிருக்கும்.
அல்லது அது அப்பா கடை. அண்ணன் தம்பி மச்சான் கூட பங்கு. இப்ப நான் பிரிஞ்சி இது
தனி கடை என்பான்.
நகையை விற்க வருகிறவன் தலை போற பிரச்சினையில் இருப்பான். எப்படியாவது, கொஞ்சம் கொறஞ்ச விலையினாலும் கையில பணம் வந்தா தான் ஆச்சின்ற நெலமயில தவி தவிப்பான்.
மற்ற நகைக்கடையில கேட்டு பாக்கலாம்னு நெனப்பான்.
இவன் நகை விக்க வந்த விஷயம் - எவ்வளவு பவுன், யாருன்ற விஷயமெல்லாம் பஜாரில் உடனே உடனே பரவியிருக்கும்.
இங்க தான் "கயிறு போடுறது"
நகைக்கடையில மொதலாளி அந்த நகைய வாங்கி மச்சம் பாக்க கல்லெடுத்து நல்லா ஒரசிட்டு, ஒதட்ட பிதுக்கி சொல்லுவது ' மச்சம் ரொம்ப கம்மியாருக்கே'
விக்க வந்த பாவப்பட்ட ஜீவன் " பாத்து குடுங்க"
ஒரு பவுனுக்கு இவ்வளவு தான் குடுக்க முடியும்.
மீண்டும் நகைய விக்க வந்த அப் 'பாவி'
" பணமொட ஜாஸ்தி. வேற வழியில்லாமத் தான் வந்திருக்கேன் "
முடிவா இவ்வளவு தான் வாங்குற விலன்னு தீர்மானமா கடை பதில்.
இவன் வேதனயோட வெறுத்து எந்திரிச்சி கிளம்பும் போது வெல கொஞ்சம் கூடும்.
விக்க வந்தவன்" நான் தான் சொன்னனே.."ன்னு இழுக்கும் போது 'கயிறு'
பஜாருல எந்த கடைக்குமே கட்டாத அதிக வெலை.
இந்த கடையில கயிறு போட்டு விட்டுடுவாங்கெ.
அந்த வெலைக்கு அந்த நகைய யாருமே வாங்கவே மாட்டாங்க. அவ்வளவு அதிக வெல தர்றேன்னு கயிறு போட்டு விட்டுடறது.
இவன் நிச்சயமா இத விட நல்ல வெல கெடக்கும்ற 'அவிட்டி' யில் மூக்கு வேர்த்து கெளம்பி,
அடுத்த கடைக்குள்ள நொழைவான்.
அடுத்த கட, அடுத்த கடன்னு
வேர்த்து விறுவிறுக்க அலைவான்.
யாருமே இவன் மொதல்ல கேள்விப்பட்ட வெலக்கி ஒட்டிக்கூட வரவே மாட்டாங்களே.
தவிச்சி இப்ப அந்த மொதக்கடைக்கே வந்து சரண்டர் ஆகி "நீங்க தான் நியாயமா வெலை சொன்னீங்க. இந்தாங்க நகய வாங்கிக் கிட்டு பணத்த குடுங்க"
கயிறு போட்டு பஜாருக்குள்ள விட்டாங்கென்னு இவனுக்கு எப்படி தெரியும்.
கயிறு போட்டு விட்ட இந்த மொதலாளி "அடடே, நான் சொன்ன தொகைக்கு இப்ப இன்னொரு ஆளுட்ட பழசு ஒன்ன வாங்கிட்டனே. இப்ப பணம் இல்ல. பதினஞ்சு நாளு கழிச்சி வா. பாப்பம்"
ஓடி, ஓடி மூச்சிறைக்க தவிச்ச மொயல,
கம்பால ஓங்கி தலயில அடிக்கிற கத இது தான்.
....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.