Share

Apr 16, 2021

சினிமா எனும் பூதம் பற்றி சுப்பாராவ் சந்திர சேகர ராவ்

 R. P. ராஜநாயஹம் சினிமா எனும் பூதம் நூல் பற்றி 

சுப்பாராவ் சந்திர சேகர ராவ் 


"சினிமா எனும் பூதம்

நான் சினிமா அதிகம் பார்ப்பவன் அல்லன். ஆனால், சினிமா பற்றிய தகவல்களை சேகரித்துக் கொள்வதில் மகிழ்பவன். அதிலும் என் பால்ய காலத்து நடிகர், நடிகைகள் பற்றிய விபரங்களை அறிவதில் கூடுதல் மகிழ்ச்சி. எனவே இயல்பாகவே சினிமா கலைஞர்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிப் படிப்பது வழக்கம்.  அந்த வகையில் சமீபத்தில் படித்ததுதான் R.P.ராஜநாயஹத்தின் சினிமா எனும் பூதம் என்ற அற்புதமான புத்தகம்.


தமிழ் சினிமா பற்றி ஏற்கனவே அறந்தை நாராயணனின் தமிழ் சினிமாவின் கதை, திராவிடம் பாடிய திரைப்படங்கள், சினிமாவிற்குப் போன இலக்கியவாதிகள், வாமனன் எழுதிய திரை இசை அலைகள்,   ஜி.ராமநாதனின் வாழ்க்கை வரலாறு, கே.வி.மஹாதேவனின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றைப் படித்ததுண்டு. ஆனால், இந்தப் புத்தகங்கள் எல்லாம் புத்தகம் எழுத வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு, அதற்கான தரவுகளைத் திரட்டி, அதற்காக நேர்காணல்கள் செய்து, தொகுத்து எழுதப்பட்டவை. சினிமா எனும் பூதம் அவ்வாறு எழுதப்பட்டதல்ல.  ஆசிரியர் பின்னட்டைக் குறிப்பில் சொல்லுவது போல, எந்தக் குறிப்புகளின் தேடலுமின்றி, முற்றிலும் அவரது ஞாபக அடுக்குகனை மட்டுமே கொண்டு, அறிந்த திரை ஆளுமைகள் பற்றிய அறியாத சுவாரசிய விஷயங்களை ஆவணப்படுத்தியிருக்கும் நூல். ராஜநாயஹம் தி.ஜானகிராமனின் பரமரசிகனாக, அசோகமித்திரனின் சீடனாக, ந.முத்துசாமியின் மாணாக்கனாக,  Shakespearean Scholar ஆக, இருப்பதால்,  அவரது நினைவுகளின் அடுக்குகளிலிருந்து தெறிக்கும் தகவல்கள் மிக அழகான நடையில், எந்த பாசாங்கும் மேற்பூச்சுமின்றி, ரசிக்கும்படியான தேர்ந்த சொற்களில் வந்திருக்கின்றன.


நான் ராஜநாயஹத்தின் வலைப்பூவிற்கு சப்ஸ்கிரைப் செய்து அவரைப் பல வருடங்களாகப் பின்தொடர்பவன். தினமும் அதிகாலையில் என் மின்னஞ்சலில் அவரது வலைப்பூ கட்டுரை ஒன்று வந்திருக்கும். அதைப் படித்துவிட்டுதான் என் அன்றாட வேலைகளைத் துவக்குவேன். அந்த வகையில் இந்தத் தொகுப்பில் பல கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன் என்றாலும், தொகுப்பாக ஒருசேரப் படிப்பது ஒரு தனி இன்பம்தான்.   புத்தகத்தில் தான் எத்தனை எத்தனை தகவல்கள்…..


ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவிற்கும் 

நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கும் உள்ள உறவுமுறை,

 சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி தேன்கிண்ணம், ஹலோ பார்ட்னர், உங்கள் விருப்பம், கல்யாணமாம் கல்யாணம் என்று காமெடிப் படங்களாக எடுக்கக் காரணம், 


மதுரை தமுக்கத்தில் கமல் – என்னத்த கன்னையா நாடகத்தில் வந்த இரட்டை அர்த்த டைமிங் வசனம்,


 ரத்னமாலா கணேசன் என்ற நாடக நடிகையின் பெயரில் இருக்கும் கணேசன் யார் என்ற அதிர்ச்சித் தகவல் என்று  மிக மிக ரசிக்கும்படியான தகவல்கள்… 


திராவிடர் கழக மாநாடு ஒன்றின் ஊர்வலத்தில் எம்.ஆர்.ராதா குதிரையில் வந்தது 

தொடர்பாக மற்றொரு திகில் செய்தியைத் தருகிறார் ராஜநாயஹம்.


 எஸ்.வி.சகரஸ்ரநாமம் பற்றிய அந்தக் காலத்து வதந்தி என்னை திகைக்க வைத்தது!


 அசோகமித்திரனின் மானசரோவரின் இரண்டு முக்கிய பாத்திரங்களின் ரோல் மாடல்கள் பற்றிய செய்தியும் கூடத்தான்.


ராஜநாயஹத்தின் ஆங்கிலம் பற்றி அவரைத் தொடர்ந்து படிப்போருக்கு நன்கு தெரியும். ஜெமினியின் பல திருமணங்கள் பற்றி  The chain of matrimony is so heavy, it takes two to carry it. Sometimes….. three…. four…. five.. என்று அவரால் மட்டுமே சொல்ல முடியும்.


அதே போலத்தான் சீர்காழி, சிவகுமார், பாலகுமாரன், ஜெய்சங்கர்  பற்றியெல்லாம் மிக வெளிப்படையாக மனதில் பட்டதை  எழுதும் துணிச்சலும் ராஜநாயஹத்திற்கே உரியது.


 #டப்பா படத்தில் நடித்தாலும் ஏதோ வெள்ளிவிழா படத்தில் நடிப்பது போல மிகுந்த உற்சாகமாக பெருமிதத்துடன் நடிப்பார் ஜெய் #


 #வேறு பொழுதுபோக்கே அறியாத அந்தக்கால தமிழ் சினிமா பைத்தியங்களுக்கு ஜெய்சங்கர் படங்கள் பார்த்த போதுதான் சினிமாபடம் கூட போர் அடிக்கும் என்ற விஷயமே தெரிய வந்தது#


#நாகேஷை ஓவர் ஆக்சனில் சிக்க வைத்ததே பாலச்சந்தரின் நாடக பாணி இயக்கம்தான்#


பக்கத்துக்குப் பக்கம் சுவாரஸ்யமான தகவல்களோடு,

 காலையில் எடுத்து, ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்ட அருமையான புத்தகம்.

  கடைசி பாலில் சிக்ஸர் அடித்து நம்மை பரவசமூட்டும் கிரிக்கெட் வீரர் போல் ராஜநாயஹம் ஒரு சிக்ஸர் அடித்துதான் தனது கடைசி கட்டுரையை முடிக்கிறார். அதை அப்படியே தந்து நானும் எனது அறிமுகத்தை முடிக்கிறேன். ஸ்ரீதேவி ஹிந்தி சினிமாவிற்குப் போனது பற்றிய எழுதும் போது அவர் சொல்வது கீழே –


#எங்கள் காலத்தில் அமலாவையும் பாலிவுட் கொண்டு சென்று விடுமோ என்ற கவலையில் ‘அமலாவை இந்தி திரையுலகிற்கு செல்லாமல் தடுப்பது எப்படி?‘ என்று தமிழ்வாணன் ஏதாவது புத்தகம் எழுதி வைத்துவிட்டு செத்திருக்கிறாரா இல்லையா என்று கூட விசாரணை செய்ததுண்டு.#


சினிமா எனும் மாய உலகம் காட்டிய அபத்தங்களின் உச்சத்தை சொல்லும் இந்த நூல் மிகச் சிறந்த வாசகரும், நண்பருமான சரவணன் மாணிக்கவாசகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது.


வாழ்த்துகள் ராஜநாயஹம் சார்!


.. 


சினிமா எனும் பூதம்


R.P.ராஜநாயஹம்


எழுத்து பிரசுரம் வெளியீடு


விலை – ரூ375.00 


...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.