Share

May 12, 2020

பாலகுமார நினைவு

பாலகுமார நினைவுகள்
- R.P.ராஜநாயஹம்

இறந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.
மே பதினைந்தாம் தேதி தானே?

பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள்,               இரும்புக்குதிரைகள்,
என்றும் அன்புடன்,
கரையோர முதலைகள் ஆகிய நாவல்கள் படித்தேன்.

கல்யாண முருங்கை குறு நாவல் ஒன்று ’மணியன்’ மாத நாவலாக வந்ததை வாசித்திருக்கிறேன்.

அந்த பிரபலமான ’சின்ன சின்ன வட்டங்கள்’
சிறு கதை தொகுப்பு கூட.

அப்புறம் பாலகுமாரனை திரும்பிக்கூட பார்த்ததில்லை.

ஒரு கவிதை இரும்புக்குதிரைகள் நாவலில் படித்தது இன்னும் மறக்கவில்லை.

”சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத் தெரியா குதிரை
கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று
கதறிட மறுக்கும் குதிரையை
கல்லென்று நினைக்க வேண்டாம்.”

இன்னும் கூட ஒன்றிரண்டு பாலகுமாரனின் நாவல்களில் படித்தது.
”இந்த உலகத்தில் எதுவுமே சரியில்லை என்று நினைப்பவர்கள் எல்லாம் பாரதியை நினைத்தால் அழத்தான் முடியும்.”

“ நெஞ்சோடு ஒட்டி தேறுதல் சொல்லும் சினேகம் எவருக்குமே வாய்ப்பதில்லை.”

அசல் அதே வார்த்தைகள் அல்ல.
என் நினைவில் நிற்பதில் இருந்து
உருவி எழுதுகிறேன்.

எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்.

தி.ஜா இவருக்கு எழுதிய கடிதம் ஒன்று.
மறக்க முடியாத கடிதம்.

பாலகுமாரன் சில பரிசு பொருள்கள் தி.ஜாவுக்கு கொடுத்த போது எப்படி இதற்கு react செய்வது என்று தெரியாமல் placid ஆக தான் இருந்தது பற்றி, இதுவே பி.எஸ்.ராமையா என்றால் எவ்வளவு உற்சாகமாய் எதிர்வினையாற்றியிருப்பார் என்றெல்லாம் அந்த கடிதத்தில் ஜானகிராமன் எழுதியிருந்தார்.
கல்கி பத்திரிக்கையில் பாலகுமாரன் அந்த கடிதத்தை பிரசுரம் செய்திட வைத்திருந்தார்.

தி.ஜா இறந்த அன்று ஸ்கூட்டரில்
உடனே திருவான்மியூர் வீட்டுக்கு சென்று
தேம்பி அழுத பாலகுமாரன்,

ஒரு நாவலை ஜானகிராமனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் - “ எழுத்துலக பிதாமகன், என்னைப் போன்ற எத்தனையோ ஏகலைவர்களுக்கு மௌன உபாத்யாயர் தி.ஜானகிராமன்.”

இதனை நான் தி.ஜானகிராமனுக்கு
நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்ட போது சேர்த்திருந்தேன்.

திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் அஞ்சலி கூட்டத்தில் என் பெயரை ஒருவரிடம் நான் சொல்ல வேண்டியிருந்த போது,
உடனே பாலகுமாரன் என்னை கூர்ந்து பார்த்தார்.
அவரோடு எனக்கு அறிமுகம் ஏதும் கிடையாது.

 மிகவும் தளர்ந்து போய் இருந்த பாலகுமாரன் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை, தள்ளாடிய அவரை நான் கை பிடித்து நடத்தி மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.

ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார்.
 “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை!”

நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.

பாலகுமாரனும் ந.முத்துசாமியும் மறைவதற்கு
சில மாதம் முன் ஒரு உணவுக்கூடத்தில் சந்தித்துக் கொண்டார்கள்.

அடுத்தடுத்து சில மாதங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து மறைய இருந்த தருணம் அது.

(முத்துசாமி மரணம் அக்டோபர் மாதம்
இருபத்தி நான்காம் தேதி.)

இருவருமே TAFE ல் வேலை பார்த்தவர்கள்.

இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலை.

பேராசிரியர் செ.ரவீந்திரன் கூட அப்போது முத்துசாமியுடன் இருந்திருக்கிறார்.

 பாலகுமாரன் மனம் விட்டு நெகிழ்ந்து முத்துசாமியை கனப்படுத்தி சொல்லியிருக்கிறார்.
“ முத்துசாமி மட்டும் இல்லேன்னா நான் TAFE ல கடைசி வரை க்ளார்க்காவே தான் இருந்திருப்பேன்.”

....

புகைப்படத்தில் ந.முத்துசாமி போட்டிருக்கும் சட்டை அவருடைய பிறந்த நாளுக்கு
ராஜநாயஹம் அளித்த பரிசு.

https://m.facebook.com/story.php?story_fbid=2661287837417999&id=100006104256328

.....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.