Share

May 30, 2020

தி. ஜா. கருத்தரங்கமும் திருப்பூர் கிருஷ்ணனும்

1989 
புதுவை பல்கலைக்கழகத்தில் 
தி. ஜா. கருத்தரங்கம் நடந்த போது அந்த ஊரில் பிரமுகர், தியேட்டர்கள், கல்யாண மண்டபம் போன்றவற்றிற்கு அதிபதி ஒரு பெரியவர். 
அவர் புரவலர். அந்த நிகழ்ச்சிக்கு நிதி தந்திருக்கலாம். விழா மலரை இந்திரா பார்த்தசாரதியிடம் இருந்து நான் பெற்ற போது பார்த்தார். ராஜநாயஹம் ஒரு இளைஞன் என்று கண்டு கொண்டார். 

விழா ஆரம்பித்த பிறகு அதன் பின்னர் வந்த திருப்பூர் கிருஷ்ணன் அந்த புரவலர் தான் ராஜநாயஹம் என்று நினைத்திருக்கிறார். 

அப்புறம் புரவலர் பேச எழுந்த போது தான் நான் இல்லை என்பதை புரிந்து கொண்டாராம். 

ராஜநாயஹம் என்ற பெயர் பெரியவர் என்பதாக தன்னை கருத வைத்து விட்டதாக விழா முடிந்த பிறகு திருப்பூர் கிருஷ்ணன் கூறினார். 

நான் தான் முதல் கட்டுரை வாசித்தேன். திருப்பூர் கிருஷ்ணனும் வாசித்தார். 

முன்னதாக புரவலர் பேசும் போது 'ராஜநாயஹம் போன்ற இளம் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜானகிராமன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் என்பது புரிகிறது' என்றார். 

உடனே எழுதப்பட்ட ஒரு காகிதத்தில் இருந்து சிரத்தையாக வாசித்தார். 'ஜானகிராமன் பெரிய எழுத்தாளர். அவருக்கு மனைவி இரண்டு.' - pause.. 
இந்திரா பார்த்தசாரதி உடனே என்னைப் பார்த்து அதிர்ச்சியை தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கி வெளிப்படுத்திய காட்சி இப்போதும் மறக்க முடியாதது. 

புரவலர் தொடர்ந்தார் '.. மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' 

'அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' என்று எழுதிக்கொடுத்ததை அப்படி விபரீதமாக வாசித்திருக்கிறார். 

என்னிடம் ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு ' நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் புதுமைப்பித்தன்,
 கு. ப. ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி, க. நா. சு துவங்கி அழகிரி சாமி, லாசரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்ராம், 
கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என்று கோணங்கி வரை  படித்தவன் நான். யாரை படித்தாலும் தி. ஜானகிராமன் தான் விசுவரூபம் எடுத்து தெரிகிறார் 'என்று பயமறியா இளங்கன்றாக சொன்னேன். 
கிராவும், இ. பாவும் விழாவில் இருந்தார்கள். 

திருப்பூர் கிருஷ்ணன் கேட்ட கேள்வி கூட நினைவிருக்கிறது.' அன்பே ஆரமுதே குறைப்பட்டுப் போன நாவல் என்று எப்படி சொல்கிறீர்கள் ' என்றார். அவருக்கு பிடித்த பெண் பாத்திரம் அன்பே ஆரமுதே ருக்மணி. 
தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல்களில் அன்பே ஆரமுதே மட்டும் பாதிக்கப்பட்டது என்பது 
என் துணிபு. 

விழா முடிந்ததும் இந்திரா பார்த்தசாரதியுடன் திருப்பூர் கிருஷ்ணனும், நானும் அவர் வீட்டுக்கு சென்றோம். இந்திரா மாமியின் அன்பான உபசரனை. 

வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திருப்பூர் கிருஷ்ணன் என்னிடம் சொன்னார் :
" நீங்கள் கருத்தரங்கில் ஜானகிராமன் தான் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார் என்று சொன்ன விஷயம் கி. ரா வையும் இ. பா. வையும் புண்படுத்தியிருக்கும் "

திருப்பூர் கிருஷ்ணன் 'தமிழின் தரமான எழுத்தாளர்களை விரல் மடக்கி எண்ண ஆரம்பித்தால் முதல் விரலையே ஜானகிராமனுக்காக தான் மடக்க வேண்டியிருக்கும்" என்று கணையாழியில் எழுதியிருந்ததையும் கூட முன்னதாக நான் வெளியிட்டிருந்த தி. ஜா. நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 

நான் வெளியிட்டிருந்த அந்த நினைவு மதிப்பீட்டு மடல் பார்த்து விட்டுத் தான் துணை வேந்தர்
 இந்த கருத்தரங்கம் நடத்த ஆணையிட்டார். 

திருப்பூர் கிருஷ்ணன் சென்னை சென்ற பிறகு இந்த புகைப்படம் அனுப்பி வைத்தேன். 

அன்போடு பதில் கடிதம் எழுதினார் 
'என் மனைவி ஜானகியிடமும், குழந்தை அரவிந்தனிடமும் புகைப்படத்தில் உங்களை காட்டி 
"இவர் தான் ராஜநாயஹம் "என்று சொன்னேன்"

.... 

http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_3967.html?m=0

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.