Share

Feb 16, 2009

அன்று நாகேஷை நான் பார்த்த போது


அன்றைக்கு நான் அந்த வாகினி ஸ்டூடியோ செட் ஒன்றில் நுழைந்தேன் . நான் உதவி இயக்குனர் ஆக அப்போது 'அழைத்தால் வருவேன்' பட பூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தேன். பாடல் ரிகார்டிங் முடிந்து நான் அங்கே பக்கத்தில் ஒரு செட் உள்ளே நுழைந்தேன் .
அது ஒரு ராமண்ணா படம் . அவர் கொடி கட்டிய காலம் அல்ல . அஸ்தமன காலம் . ராமண்ணா விடம் ஒரு விஷேச குணம் . டென்சன் இல்லாத இயக்குனர் . இயக்குகிறார் என்பதே அறிய முடியாமல் இருக்கும் . ஜெய் சங்கர் கதாநாயகன் !மக்கள் கலைஞரை ரசிகர் பெருமக்கள் கைவிட்டுவிட்டகாலம் . எவ்வளவு காலம் தான் ஏமாறுவார்கள் மக்கள் . சுதாகர் ,விஜயன் என்று சின்ன பட்ஜெட் படங்கள் போக ஆரம்பித்து விட்டது .ராமண்ணா பிடிவாதமாக அந்த 'குல கொழுந்து ' படத்தை சூட் செய்து கொண்டிருந்தார் . கதாநாயகி ஸ்ரீப்ரியா , அப்புறம் சௌகார் ஜானகி , செந்தாமரை படுக்கையில் . நாகேஷ் அந்த படத்தில் நடிக்கவில்லை . அவர் ஆனால் செட் ட்டுக்கு வந்து கலக்கி கொண்டிருந்தார் . காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் மாமனாராய் நடித்தவர் அந்த படத்தில் ஒரு ரோல் செய்து கொண்டிருந்தார் . பெயர் பிரபாகர் என்று அவரிடம் சிறிது நேரத்தில் கேட்டு தெரிந்து கொண்டேன் .அவரும் நாகேஷும் சாட் பிரேக் நேரங்களில் செய்த ஒரு சிறு காமெடி .
ரயிலில் வரும் கனவான் அரியலூர் ரயில் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட சௌகரிய குறை ஒன்றை பற்றி ஸ்டேசன் மாஸ்டரிடம் அவர் அறைக்கு வந்து கம்ப்ளைன்ட் செய்கிறார் .
பிரபாகர் வேகமாக ஓடி வந்து கிட்டத்தட்ட நாகேஷ் மேலே விழுந்து கோபத்துடன் கேட்கிறார் “ Who is the Station Master”
நாகேஷ் பதறி போய் கூப்பாடு “I is the Station Master ”
பிரபாகர் இந்த ஓட்டை இங்கலிஷ் கேட்டு எரிச்சலாகி “Are you the Station Master?”
நாகேஷ் அதே பதட்டத்துடன் “Yes Sir! Ariyalur Station Master!”
பிரபாகர் டென்சன் ஆகி “Stupid Station Master”
நாகேஷ் நீங்கா பதட்டத்துடன் சத்தமாக “ No sir , Ariyalur Station Master”
இந்த நகைச்சுவை காட்சி அங்கு இருவராலும் பலமுறை நடித்து காட்டப்பட்டது .பிரபாகர் கேள்வி , நாகேஷ் பதில் எல்லாம் மின்னல் வேகத்தில் !

'டே ஜெய் இங்க பார்டா ' நாகேஷ் சொன்னவுடன் பிரபாகர் இயங்க ஆரம்பித்து விடுவார் . 'ஸ்ரீ பிரியா இங்க பார் ' 'ஜானகி ஒன் மினிட் ' மீண்டும் மீண்டும் ..
ராமண்ணா " டே நாகேஷ் ஷூட்டிங் நடத்த விடுடா . நீ ஏன் இப்ப இங்க வந்தே "
உடனே நாகேஷ் " அண்ணா இங்க பாருங்க " உடனே பிரபாகர் “ Who is the Station Master” ராமண்ணாவும் சிரித்து விட்டார் .
நான் பிரபாகரிடம் அப்போது தான் 'உங்க பேர் என்ன சார் " என்றேன் . " பிரபாகர் " என்றார் . நான் அப்போது சர்காஸ்டிக் ஆக சொன்னேன் " இத்துனூண்டு நெத்தியிலே எவ்வளவு எழுதியிருக்கான் பார்த்தீங்களா ? இவ்வளவு காலம் கழித்து உங்க பேரை நான் கேட்டு தான் தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு !" என்றவுடன் பிரபாகர் குஷியாகி அப்போது ஸ்ரீப்ரியா , சௌ கார் உட்கார்ந்திருந்த சோபாவில் உட்கார்ந்து விட்ட நாகேஷிடம் சொன்னார் " டே நாகேஷ் இங்க பார்டா . ஒன் காதலிக்க நேரமில்லை வசனம் ஒப்பிக்கிரார்டா " என்றார் . அப்போது நாகேஷிடம் நான் சொன்ன வார்த்தை " நான் ராஜநாயஹம் ! ஒங்க ரசிகன் சார் !" தமிழ் சினிமா ரசிகனாக அடையாளப்படுத்திகொள்வது அபத்தம் தான் . ஆனால் நாகேஷின் ரசிகன் என்பது மதிப்பு குறைவு கிடையாது .
நாகேஷ் என்னை பார்த்தார் “Be seated . Be seated Please!” என்று எதிரே இருந்த ஒற்றை சோபாவை எனக்கு காட்டினார் .
சமீபத்தில் மறைந்தநடிகர் சிலோன் விஜயேந்திரன்(கவிஞர் கம்பதாசன் பற்றி நூல் எழுதியவர் ) அங்கே அப்போது நடிக்க வாய்ப்பு தேடி வந்திருந்தார் . அவர் என்னிடம் " சார் நீங்க பிரஸ் ஆ ?" நாகேஷ் உட்கார சொல்லவும் நான் Reporterஎன்று அவர் நினைத்து விட்டார் ." இல்லை " என்று அவசரமாக அவரிடம் சொன்னேன்.
....
நான் நாகேஷை சந்தித்த அதே நாளில் தான் அன்று பூஜை போடப்பட்ட ஹிந்து ரங்கராஜன் தயாரிப்பான ' அழைத்தால் வருவேன் ' படத்தில் நாகேஷ் கேட்ட தொகை அதிகம் என சொல்லி அவரை கேன்சல் செய்து விட்டு சுருளி ராஜனைஅதை விட பெரிய தொகை கொடுத்து புக் செய்தார்கள் . நாகேஷின் மார்க்கெட் முடிந்து ,தேங்காய் காமெடி மார்கெட்டும் முடிந்து சுருளிராஜன் காலம் முடியபோகிற வருடம் .'அழைத்தால் வருவேன்' முதல் வாரம் தியேட்டரில் ஓடும்போது அவர் திடீர் மரணம் நிகழ்ந்தது .இந்த படத்தில் இன்னொரு சுவாரசியம் . மற்றொரு ரோலுக்கு சுருளிக்கு அடுத்து அவர் இறந்து சிலகாலம் கழித்து மார்கெட்டுக்கு வர இருந்த கவுண்டமணி கேட்ட தொகை அதிகம் என்று சொல்லி வெண்ணிற ஆடை மூர்த்தி ,என்னத்தை கண்ணையா இருவரை அந்த தொகைக்கு புக் பண்ணி தயாரிப்பு நிர்வாகி சந்தோசமாக சொன்னார் ."எப்படி என் திறமை"
இந்த என்னத்தை கண்ணையா ஐம்பது வருடமாக நடித்து கொண்டிருக்கிறார் .இவ்வளவு காலம் கழித்து வடிவேலுடன் " வரும் ..ஆனா வராது ..." என்று கலக்கி விட்டார் !ஊரே அந்த டையலாக்கை இன்று சொல்லிகொண்டிருக்கிறது . அவரோடு நடித்த நடிகர்கள் எல்லோரும் அமரர் ஆகிவிட்டார்கள் .

4 comments:

 1. அவரோடு நடித்த நடிகர்கள் எல்லோரும் அமரர் ஆகிவிட்டார்கள் ......வெண்ணிற ஆடை மூர்த்தி ??? - i think he is still there, live and kicking.

  ReplyDelete
 2. சுவையான நினைவுகளும், தகவல்களும்

  ReplyDelete
 3. Everybody knows Vennira Aadai Moorthy is alive. Don't mistake and misunderstand my sentence.

  ReplyDelete
 4. நாகேஷ் பற்றிய சுவையான தகவல்கள்..

  நன்றி.

  வாழ்த்துகள்.

  உலக சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும்.

  நிறை / குறை கூறவும்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.