Share

Apr 2, 2019

இயக்குநர் மகேந்திரன்


1989ம் வருடம். தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை படமாக்க வேண்டும் என்ற வேட்கையில் பல காலமாக இருந்த மகேந்திரன் அதற்கான முயற்சியில் தி.ஜாவின் மூத்த மகன் சாகேதராமனை சந்திக்க சென்னை வரும்படி சொன்னார். 

சாகேதராமன் இது குறித்து மணிக்கொடி சிட்டியிடம் ஆலோசனை கேட்டார். தன்னுடன் மகேந்திரனை சந்திக்க சிட்டி உடன் வரமுடியுமா? என்று கேட்டார். நாவலை படமெடுக்க மகேந்திரனிடம் என்ன தொகை கேட்கலாம் என்று அவருக்கு குழப்பம் இருந்திருக்கிறது. சிட்டி “ monetary groundsல் நீ பேச வேண்டியிருப்பதால் நான் வர விரும்பவில்லை” என்று சொல்லி விட்டார். இதை அப்போது சிட்டி என்னிடம் தெரிவித்தார்.
சாகேதராமன் டெல்லியில் இருந்து சென்னை வந்து மகேந்திரனை சந்தித்தார். முப்பதாயிரம் தொகை நாவலுக்காக தரப்பட்டிருக்கிறது.
இதையும் சிட்டி என்னிடம் சொன்னார்.

அப்போது மகேந்திரனுக்கு விநியோகஸ்தர்களிடம், ஃபைனான்சியர்களிடம், தயாரிப்பாளர்களிடம் பெரும் மதிப்பு ஏதும் இருந்திருக்கவில்லை. அவரால் மோகமுள் படத்தை இயக்கவே சூழல் வாய்க்காமல் போய் விட்டது.
அதன் பின்னர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் மோகமுள் வெளி வந்த போது அந்தப் படத்தை மகேந்திரன் பார்க்கவில்லை.
அவருடைய மன அவசம். “ நான் திரைப்படமாக உருவாக்கியிருக்க ஏங்கியிருந்த ஒரு நாவல் தி.ஜானகிராமனின் மோகமுள். அதை எப்படியெல்லாம் காட்சிப்படுத்த வேண்டும் என்று எவ்வளவு திட்டம் தீட்டியிருப்பேன். அந்த காவியத்தை இன்னொருவர் இயக்கத்தில் பார்க்க என் மனம் ஒப்பவில்லை.”
அலெக்ஸாண்டர் என்ற மகேந்திரன்.

 நாம் மூவர், சபாஷ் தம்பி,  பணக்காரப்பிள்ளை படங்களுக்கெல்லாம் கதை பங்களிப்பு இவருடையது தான். ஜம்பு இயக்கிய பாலன் பிக்சர்ஸ் படங்கள். 
 சோ திரைக்கதை வசனம் எழுதிய நிறைகுடம் படத்தின் மூலக்கதை மகேந்திரன் தான்.
இவர் வசனம் எழுதிய வெற்றிகரமான நாடகம் ’தங்கப்பதக்கம்’ திரைப்படமானது.
மகேந்திரன் ஒரு ஜர்னலிஸ்ட். சோவின் துக்ளக் பத்திரிக்கையில் பணி புரிந்திருக்கிறார்.
அவர் ஒருமுறை சொன்ன ஒரு ஆங்கில வாக்கியம். அவரே யோசித்து சொன்னாரா? ஒரு மேற்கோளா? தெரியவில்லை.
“ Life is like a snooker game. You hit one. That ball hits another. Ultimately some other ball gets into the pocket.”
பாரதிராஜாவுக்கும் பாக்யராஜுக்கும், எஸ்.பி.முத்துராமனுக்கும் இருந்த கமெர்சியல் வேல்யு மகேந்திரனுக்கு இருந்ததில்லை. கை கொடுக்கும் கையாக ரஜினி தந்த வாய்ப்பும் சோபிக்கவில்லை.
ரொம்ப காலம் கழித்து கே.பாலச்சந்தர் “ உனக்குப்பிடித்த இயக்குநர்?” கேள்விக்கு
“மகேந்திரன்” என்று ரஜினி உடனே, உடனே சொன்னதை எல்லோரும் பார்க்க முடிந்தது. பாலச்சந்தர் “ பாத்தியா? என் பேர சொல்ல மாட்டேங்கிற.”
ரஜினி இன்னும்  கூட  கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விட்டிருக்கலாமே. IFS and BUTS.
ரொம்ப வருடங்களுக்கு முன் ’விண் நாயகன்’ என்ற பத்திரிக்கையில் அனைத்து ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணன் என்பவர் ‘ரஜினிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி.ஜானகிராமன். அவருடைய எல்லா நாவல்களையும் ரஜினி படித்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மை தானா?

கமலும் மகேந்திரனும் ஏன் இணையவில்லை. 
கமலின் நிராகரிப்பா? மகேந்திரனின் புறக்கணிப்பா? அல்லது இணைந்து செயலாற்ற நினைத்தும் ஈடேறவில்லையா?
மகேந்திரனின் உறவினர் தான் ராஜேஷ். தன்னை மகேந்திரன் நிராகரித்து புறக்கணிப்பதாக வருத்தப்படாமல் இருந்திருக்க முடியாது. நடிக்க வாய்ப்பு ரொம்ப காலம் கழித்து ’மெட்டி’யில் தான் கொடுத்தார்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் எத்தனை முறை சலிக்காமல் பார்க்க முடிந்திருக்கிறது. இன்று கணக்கெடுக்க முடியவில்லை. ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே கூட.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.