கெட்ட ஆவிகளும் குடியானப்பயல்களும்
- R.P. ராஜநாயஹம்
மதுரை மேலச்சித்திரை வீதியில் ஒரு ரெடிமேட் ஷோ ரூம் இருந்தது. அந்த கடைக்குப்போயிருந்தேன். அந்த முஸ்லீம் சகோதரர்கள் என் நண்பர்கள் தான்.
நான் போன நேரத்தில் ஒரு அஜரத் அங்கு வந்தார். அவர் துவா செய்து விட்டு அகமதைப் பார்த்து சொன்னார்.” இங்க நெறைய கெட்ட ஆவிகள்.” மீனாட்சியம்மன் கோவிலைக்காட்டி சொன்னார். ”நம்மவங்க கடைகள் இதனால் பாதிக்கப்படக்கூடாது.இதுக்காக நாங்க தினமும் பள்ளிவாசலில் துவா பண்ணுறோம்.”
அவர் என்னையும் முஸ்லீம் என்றே நினைத்து பேச ஆரம்பித்தார். நான் திருநீறு குங்குமம் பூசாமல் இருந்ததால் என்னையும் பாய் என்று நினைத்து விட்டார்.
அருவருப்பாக மீண்டும் கோபுரத்தை பார்த்து விட்டு ”குடியானப்பயல்கள்’’ என்றார்.
காஃபிர் என்றே இந்துக்களைப்பற்றி குறிப்பிட்டுப் பேசுவார்கள் என்பது தெரிந்ததே.
குடியானப்பயல் என்ற வார்த்தையும் இந்துக்களை குறிக்கும் என்பது தான் தெரியாததே!
அகமது,முகமது,இஸ்மாயில் எல்லோருக்கும் தர்மசங்கடம்.
அஜரத் அவர்களைப் பார்த்து கேட்டார்.” நம்ம மாதிரி அசல் மொசல்மானுக்கும் இந்த குடியானப்பயல்களுக்கும் என்ன வித்தியாசம்?”
அவர்கள் என் இருப்பு காரணமாக பதில் சொல்லத்தயங்க,
அஜரத் திரும்பி என்னைப் பார்த்து
‘’ சொல்லுங்கத்தா. நீங்க சொல்லுங்க. நம்ம மாதிரி அசல் முசல்மானுக்கும் இந்த குடியானப்பயல்களுக்கும் என்னத்தா வித்தியாசம்?”
ஒரு வழியா சிரமப்பட்டுஅகமது’அஜரத்து,அஜரத்து’ என்று வாய் விட்டுக் கூப்பிட்டு ஜாடை செய்து
நான் ஒரு குடியானப்பயல் என்பதை
விளக்கும் படியானது.
அஜரத் முகம் வெளிறி பின் சற்று இறுகி, அவர்களை கோபமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு(‘சீ நீங்கள்ளாம் முசல்மான் தானா? குடியானப்பயலோடெல்லாம் பழகும் பச்சைத்துரோகிகள்.’) வெளியேறினார்.
இஸ்மாயில் என்னைப் பார்த்து நெளிந்து சிரித்தான்.
முகமது ‘மனசுல வச்சுக்காதீங்க’ என்றான்.
இந்த சம்பவம் 35 வருடங்களுக்கு முன்பு நடந்தது.
முன்னர் ஒரு தடவை ஒரு முஸ்லீம் பார்பர் அவர்களுக்கு மாடியில்முடி வெட்டும்போது ’எனக்கும் முடி வெட்டிக்கொள்ளட்டுமா’என
நான் சகஜமாய் கேட்டபோது
‘ இவர் முசல்மானுக்கு மட்டும் தான் முடிவெட்டி சேவ் பண்ணுவார்’’ என்று அகமது சொன்னது ஞாபகம் வந்தது. ரொம்ப ஆச்சாரமாய் நாவித தொழில் பார்க்கும் அந்த பார்பரை ஆச்சரியமாய் பார்த்தேன்.
‘கூன் பிறையை போற்றிடுவோம்
குர் ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்
நானும் உண்டு நீயும் உண்டு
நபிகள் நாயஹம் முன்னிலையில்’
’அணையா விளக்கு’ படத்தில் மு.க.முத்து சொந்தக்குரலில் பாடிய இந்தப் பாடலை
நான் என் முஸ்லிம் நண்பர்களை சந்திக்கும்போது பலமுறை பாடியிருக்கிறேன்.
‘ ராஜநாயஹம், நீங்க எங்க மார்க்கத்தில் பிறந்திருக்க வேண்டிய ஆள். ’ என்று நெகிழ்வார்கள்.
உறவினர்கள் போலவே முசல்மான்கள் நட்புடன், உண்மை அன்புடன் மற்ற மதத்தவர்களுடன் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மதவெறியர்கள் எல்லா மதத்திலும் உண்டு. அவர்கள் தான் மற்ற மதத்தினரை
தங்கள் Convictions காரணமாக அவமானப் படுத்துவார்கள்.
Convictions are more dangerous than lies.
........................
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=_gHYH7y4d40
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.