Share

Oct 11, 2020

'அதி மதுர' மதுர தங்கம் தியேட்டர்

 'அதிமதுர' மதுர சினிமா தியேட்டர்கள் ஏராளமாக. 

அவை அனைத்திலும் தங்கம் தியேட்டருக்கு முக்கிய அந்தஸ்து உண்டு. 


மதுரக்காரன் பெருமை பொங்க "ஆசியாவிலேயே பெரிய சினிமா தியேட்டர் 'தங்கம்' தான்டா" ன்னு பீத்துவான். 


சிந்தாமணி இதை விட பழைய தியேட்டர். 

நியு சினிமா, சென்ட்ரல், மீனாட்சி, அலங்கார், தேவி, கல்பனா, சினிப்ரியா, மினிப்ரியா, சக்தி 

இதிலெல்லாம் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும்.


பின்னால தான் ஆரப்பாளையம் குரு, 

நாட்டியா, நடனா, ஷா, சுந்தரம், மதி,

 மாப்பிள்ளை விநாயகர், இப்படி சில தியேட்டர்கள். 


 இங்கயிருந்து படத்த தூக்குனா சந்திரா, தினமணி, கணேஷ், இம்பீரியல், அரசரடி வெள்ளக்கண்ணு, மிட்லண்ட், பழங்காநத்தம் ஜெகதா, செல்லூர் போத்திராஜான்னு, கிருஷ்ணாபுரம் விஜயலட்சுமின்னு, நரிமேடு மூவிலண்ட்ன்னெல்லாம் சில தியேட்டருங்க. 

பழைய கறுப்பு வெள்ளை படங்கள். 

மதுர பழைய பட ரசிகர்கள் ரொம்ப பேரு. 


ரீகல், பரமேஸ்வரி பெரும்பாலும் 

இங்கிலீஷ் படங்கள். 


இந்திப்படங்கள் எல்லா முக்கியமான தியேட்டரிலும் -  தங்கம், சென்ட்ரல், மீனாட்சி, பரமேஸ்வரி, விஜயலட்சுமி, மினிப்ரியா, 


தங்கம் தியேட்டர்ல சிவாஜி பராசக்தி தான் 

முதல் படமா ஓடுச்சின்னு அந்தக்கால பெருசுக சொல்வாங்க. 

எம். ஜி.ஆர் 'கணவன்' ரிலீஸ் அப்ப 

டிக்கெட் கவுன்ட்டர் நெரிசல்ல 

ஒரு பொம்பள செத்து போச்சிம்பாங்கெ. 


அந்த காலத்துல மதுர சனத்துக்கு 

இந்த தியேட்டருங்க தான் வடிகால். 

பீச் பாத்தாங்களா, 

டி. வி. உண்டா? 


தியேட்டர் ஓனர்கள்ள அன்னைக்கி மதுர முழுக்க பிரபலம் சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம், மீனாட்சி தியேட்டர் சௌந்தர்ராஜன் ஆகிய இருவரும் தான். 

( காவல் தெய்வம் படத்தில் அந்த கௌரவ ரோலுக்கு சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரத்தைத் தான் சிவாஜி இமிடேட் செய்திருந்தார். 'சிவாஜி கணேசன்'  பதிவில் இதை குறிப்பிட்டிருக்கிறேன்.) 

நின்னு கவனிச்சி மலப்பாங்கெ. 

"டேய் சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரன்டா" ,

 "அப்பு, மீனாட்சி தியேட்டர் சௌந்தர்ராஜன்டா " 


தங்கம் தியேட்டர் மூடி விட்ட பிறகு, நான் 'ஹோட்டல் டைம்ஸ்' ல தங்கும் போது அறையின் பின் பக்க பால்கனியில் இருந்து பார்த்தால் பக்கவாட்டில் தங்கம் தியேட்டர் மாடி பால்கனி, கீழ் பகுதியெல்லாம் உட்கார்ந்து படம் பார்த்த இடமெல்லாம் பார்க்க கிடைத்தது. 

மனசு பழைய நினைவுகளில், அங்கே ஒவ்வொரு படமும் எந்த இடத்தில் உட்கார்ந்து பார்த்த அந்த ஞாபகங்கள் மேலெழும்பி.. Nostalgia. 


சென்ற வருடம் ஏப்ரலில் மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் பங்கேற்க 

வழக்கறிஞர் அசோக் அழைப்பின் பேரில் 

 உயர்நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களுடன் கலந்து கொள்ள 

மதுரை சென்றிருந்த போது இப்போது சென்னை சில்க்ஸ் ஆகி விட்ட

 அந்த மறைந்த தங்கம் தியேட்டர்

 எதிரேயிருந்த ஹோட்டலில் தான் 

நான் தங்குவதற்கு அசோக் ஏற்பாடு செய்திருந்தார். 


அங்கே பார்த்த ஒவ்வொரு படமும் 

நினைவில் வந்தது. 


தங்கம் தியேட்டரில் 

யாரோடெல்லாம் படம் பார்த்திருக்கிறேன். என்னவெல்லாம் அப்போது நடந்திருக்கிறது.                        மாட்னி ஷோ, ஃ பர்ஸ்ட் ஷோ, 

எத்தனை செகண்ட் ஷோ...!

படம் பார்க்க வராத நாட்களிலும் 

தியேட்டர் முகப்பில் நின்று போஸ்டர்கள் பார்த்தது எல்லாம் வரிசை கட்டி மன நிழல்களாக..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.