Share

Feb 1, 2021

வண்ணநிலவன் பதிவும் R. P. ராஜநாயஹம் எதிர் வினையும்

 வண்ண நிலவன் பதிவும்

 R. P. ராஜநாயஹம் பதிலும் 


"மோகமுள், தலைமுறைகள்,சாயாவனம்,புத்தம் வீடு,கோபல்லகிராமம் இப்படிச் சில அபூர்வமான நாவல்கள் தமிழில் இருக்கின்றன.ஆனால் மலையாளத்திலும்,வங்கமொழியிலும் இந்த எண்ணிக்கை அதிகம்.தகழி,கேசவதேவ்,உரூபு,வாசுதேவன் நாயர்,வங்கத்துவிபூதி பூஷண்,தாராசங்கர் பானர்ஜி போல எழுதியவர்கள் தமிழில் யாருமே இல்லை. நீலகண்டபறவையைத்தேடி, சோரட் பெருகும் .... ,கினு கோனார் சந்து போன்றோ,அக்னி நதி போன்றோ தமிழில் எந்த நாவலும் இல்லை.டால்ஸ்டாயையும், சமீப காலத்தில் மிக அதிகமாக தாஸ்தாவ்ஸ்கியையும் கொண்டாடுகிறோம்.அவர்களின் தரத்துக்கு ஒரு நாவலாசிரியர் கூட தமிழில் இல்லை. ஜானகிராமன்,நீல.பத்மநாபன் கி.ராஜநாராயணன் எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.ஆனால் சளைக்காமல் இலக்கியம் பேசித்திரிகிறோம்."


- வண்ண நிலவன் 


R. P. ராஜநாயஹம் எதிர் வினை:


இந்தப் பதிவில் நிறைய நான் முரண் படுகிறேன். 

மோக முள் பெரும் சாதனை. அதனோடு நீங்கள் எழுபதுகளில் போடும் பட்டியல் நாவல்களை சேர்த்துள்ளீர்கள். 

டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி இருவரை ஜானகிராமனோடு ஒப்பிடத் தேவை கிடையாது. 


அசோகமித்திரனை விட நீல பத்மநாபனோ,

 சா. கந்தசாமியோ, ஹெப்சீபாவோ தகுதியில் உயர்ந்தவர்கள் கிடையாது. 

அசோகமித்திரன் நாவல்கள் 18ம் அட்சக்கோடு, கரைந்த நிழல்கள், தண்ணீர் நாவல்களை ஒதுக்குவதில் உங்கள் பதிவு குறைப்பட்டு போகிறது.


கடைசி வரி புண்படுத்துகிறது. 


ஞான பீட பரிசு பெற்ற தாராசங்கர் பானர்ஜி, கிஷன் சந்தர் உட்பட எவருமே சாதிக்காததை மோக முள்ளில் தி. ஜானகிராமன் மோக முள்ளில் சாதித்துள்ளார். ஜானகிராமனின் சிகர சாதனை கணிக்கப்படாதது தமிழின் துரதிஷ்டம் என்று 

வெ. சா. ஐம்பது வருடங்களுக்கு முன்பு கூறியது பற்றி இங்கே நினைவூட்டலாமா என்பதற்கே தயங்க வேண்டுமா?


அடக்கத்தோடு உங்கள் கடல் புரத்தில், கம்பா நதி பற்றி எழுதாமல் விடுகிறீர்களா? 


க. நா.சு இப்படித் தான். 

தன்னுடைய மகத்தான படைப்புகளான சர்மாவின் உயில், பொய்த்தேவு, ஒரு நாள், அசுர கணம், வாழ்ந்தவர் கெட்டால் நாவல்களில் ஒன்றைக் கூட தன் பட்டியலில் எப்போதுமே சேர்த்ததேயில்லை.


தோளோடு தோள் நிற்கக் கூடிய இருபது நாவல்கள் தமிழில் இருக்கின்றன. அவை எதனையும் மேலைய இலக்கியங்களோடும், மலையாள, வங்க இலக்கியத்தோடெல்லாம் வைத்து யோசிப்பதை நிறுத்துவது நல்லது. 


தமிழ்ல ஒரு மயிரும் புடுங்கவில்லை என்ற டயலாக் கூட அர்தப் பழசு. மௌனியின் cliche பல இலக்கிய அரசியல் வாதிகளின் தேய்ந்து போன ரிக்கார்டு. 


இந்த மாதிரி ஃபர்னிச்சர்களை ஒடைக்கணும்.


Literary cleverness காட்டியதற்காக சுந்தர ராமசாமியின், இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களை ஒதுக்குவது அராஜக தண்டனை. 


ஆதவன் காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன்.. 

Sailing the same boat என்பீர்கள். 


நகுலனின் நினைவுப்பாதை, நாய்கள், வாக்குமூலம்.... ஓ நகுலனுடையதும் புத்திசாலி எழுத்தோ. 


எம். வி. வெங்கட்ராம் உண்மையைத் தான் இலக்கியத்தில் தேடினார் என்று முப்பது வருடங்களுக்கு முன் நீங்கள் எழுதியதைப் படித்த போது உங்களுக்கு அவரைப் பிடிக்கும் என்று நினைத்தேன்.


அண்ணா, உலக இலக்கியம் படிக்காதவர்களிடம் தான் உங்கள் 'இங்கே காவியத்தன்மை இல்லை' என்கிற வார்த்தை செல்லுபடியாகும். 


I insist ஒப்பிடத் தேவையேயில்லை. ஒப்பிட்டு ஒதுக்குவதே Snobbery. 


வண்ண நிலவன் :

 நீங்கள் தாராளமாக முரண்படலாம்.தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்கள் பல இருக்கின்றன. அவைகளில் காவியம் போல் விரியும் நாவல்கள் இல்லை.


R. P. ராஜநாயஹம் :

இதிலும் முரண் பட வேண்டியிருக்கிறது. 

நாவல்களில் காவியத்தன்மை இல்லாமல் இயல்புத் தன்மை, எளிமை இருக்கக் கூடாதா? 


தலையணை, தலையணையாக, வண்டி, வண்டியா எழுதுனாத்தான் காவியம், ஓவியம் என்ற பிரமை கொண்டவர்கள் இங்கே மமதையோடு உண்டு.


ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ரா விடமெல்லாம் இருக்கிற இலக்கிய உன்னதத்தில் காவியத்தன்மை யைக் காண முடியவில்லை

 என்ற சட்டாம்பிள்ளை உதட்டுப்பிதுக்கல்? 


வண்ண நிலவன் :

தகழியின் கயிறு, சிவராம கராந்தின் மண்ணும் மக்களும் (சிறு நினைவுப் பிசகு)போல் அகண்ட வாழ்வைச் சொல்லும் நாவலைத்தான் காவியம் என்று குறிப்பிட முயற்சிக்கிறேன்


 R. P. ராஜநாயஹம் :

தகழி சிவசங்கரம்பிள்ளை எழுத்தின் இலக்கியத் தகுதி பற்றி மலையாளிகளே சந்தேகம் கொண்டிருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த செம்மீன் நாவல் படித்தேன். முன்னதாக செம்மீன் படம் பார்த்திருந்தேன். 


 சிவராம காரந்தின் முக்கியப் படைப்பு மூக்கஜ்ஜிய கனஸுகளு என்று கன்னடர்கள் பலர் சொல்லுவார்கள். 

அதன் மொழிபெயர்ப்பு 'பாட்டியின் கனவுகள்' படித்திருக்கிறேன். 

அது மோக முள், புயலிலே தோணி 

நாவல்களை நெருங்க முடியவில்லை.


சாதிக்கிறேன் பார்த்தாயா என்ற அகம்பாவமே இல்லாத ஒரு வித அலட்சியம் ஜானகிராமனிடம் ஒவ்வொரு வரியிலும் உண்டு. 

மொத்தமாக சேரும் போது அவருடைய  எளிமையான எழுத்து விஸ்வரூப சாதனையாகிறது.


வண்ண நிலவன் நாவல் சாதனையும் தனித்துவமும் எளிமை, இயல்புத் தன்மை சார்ந்த உண்மை. 


ஒரு காவியம், காப்பியம் என்ற பெருமிதப் பெருமை இல்லாத எழுத்து என்பதில்

 இலக்கியம் சாசுவதத்தன்மையை 

காலம் கடந்தும் காணும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.