ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளில் அந்த கவிஞருக்கே பிடித்த கவிதை எது என்று
அறிகிற ஆர்வம் எனக்கு உண்டு.
கவிஞர் ஆத்மார்த்தியிடம் அவருக்கு பிடித்த
தன் கவிதை கேட்டேன்.
அவர் தந்த கவிதை கீழே :
"எப்போதோ முடிவுற்ற மழை
இலை நுனியில் நின்றுகொண்டிருப்பதைப் போல்
அன்னிய தேசத்தில் கொல்லப்பட்டவனின்
பிரேதத்தைப் பெற்றுத் தரச்சொல்லி
ஒரு அலுவலகத்திலிருந்து
இன்னொரு அலுவலகத்திற்கு செல்வதற்காய்
இறங்கி நடக்கிறவர்களின் ஞாபகங்களில்
எஞ்சுகிறது வாதை
தேவாலயத்துக்கு
வழியறியாத பார்வையற்றவனை
அலைக்கழிக்கும் மணிச்சப்தம் போல்
ஒவ்வொரு மாதமும்
நாட்கள் தப்பி வரும் விடாய் குறித்துப்
பகிர்வதற்கு யாருமின்றித்
தன்னுள் குவிந்து
வலியை முகத்தில் தேக்குகிற இளவரசிக்கு
இன்றைக்குப் பெரிய மனசுள்ள யாரேனும்
பேருந்தின் சன்னலோரத்து இருக்கையை
விட்டுத் தந்தால் பேருபகாரம்.
சமீபத்தில் காலமான யாரையாவது
நலம் விசாரித்துவிட்டு மன்னிப்புக் கோருகிறவர்களை
மாத்திரமாவது சந்திப்பினின்றும்
அகற்றித் தருமாறு பிரார்த்திக்கிறார்கள்
அன்புக்குரியவர்கள்.
கருவைக் கலைப்பதற்காக
வேற்றூரின் மருத்துவமனையில்
பொய்ப்பெயர் தந்தவள்
தான் அழைக்கப்படுவதறியாமல்
டீவீ பார்த்துக் கொண்டிருக்கிறாள்
"உன்னைத் தான்...போ !" என்கிறான்
கூட வந்தவன்
திராட்சையை எதிர்பாராதவனுக்கு
ஒயினை அணிவிக்கிறது காலம்.
பலூனை விலை பேசுகையில்
உள்ளேயிருக்கும் காற்றுக்கு மாத்திரம்
காசு தந்து
அபகரித்துச் செல்ல முயல்வது
மத்யமம்.
வெட்டுப்பட்ட பல்லியின்
வாலைப் போல்
துடி துடித்து அடங்குகிறது
செல்பேசி
வட்டி கட்டுகிற தினத்தில் துவங்கி
அதற்கு முன் தினத்தில்
முடிவடைகிறது
ஒவ்வொரு நாளும்.
எல்லா நகரமும்
ஏதோ ஒரு நகரம்"
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.