Share

Feb 3, 2021

நாத்திகமும் ஒரு சித்தி நிலை தான்

 

எழுத்தாளர் கர்ணன் சென்ற வருடம்

 இறப்பதற்கு முன் என்னுடன் 

செல் பேசிய போது அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மறைந்த இல. பொன் தினகரன் தன்னுடைய நல்ல நண்பர் என்று குறிப்பிட்டார்.


 நாங்கள் அவரை L. P. T. என்போம். 

எல்ப்பிட்டி கம்பீரமாக திருகி விடப்பட்ட மீசையுடன் ஜிப்பா, வேட்டியுடன், தோளில் ஒரு நீளமான துண்டு போட்டுக்கொண்டு, 

கண், மூக்கு திருத்தமாக, ஓவியம் வரைய, சிலையாய் வடிக்க ஆசையுண்டாக்கும் உருவம் கொண்டவர். உயரம் கொஞ்சம் குறைவு தான். 


ஏனோ எனக்கு மதுரையில் யு. சி. ஹைஸ்கூல் முன்புள்ள பிஸியான ரோட்டில் கட்ட பொம்மன் சிலையைப் பார்க்கும் போதெல்லாம் 

பேராசிரியர் இல. பொன். தினகரன் 

ஞாபகம் வரும். 


மீசையைத் தடவிக்கொண்டே சிரித்த முகமாக                  வகுப்பு எடுப்பார். 


ஃப்ளின்ட் ஹவுஸ் முன்னால் நானும், ரவியும், 

என் வகுப்புத் தோழன் முபாரக்கும் நின்று கொண்டிருக்கிறோம். 

தமிழ் பேராசிரியர் எல்ப்பிட்டி ஒரு நண்பருடன் 

ஃபேக்கல்ட்டி அறையில் இருந்து வெளிப்பட்டு வந்து கொண்டிருந்தார். 


எங்களைப் பார்த்தவுடன் 

'அய்யா ' என முகமன் கூறினோம். எல்ப்பிட்டி எப்போதும் ' என்னய்யா ' என்பார். 


அருகே வந்த நண்பரைப் பற்றி அறிமுகம் செய்தார். 

அவர் பெயர் S. D. விவேகி. திராவிடர் கழகம். 

எஸ். தாவூத் இயற்பெயர் என்பதை எங்கள் தமிழ் பேராசிரியர் சொன்னவுடன் ஆர்வத்துடன் நான் கவனித்தேன். 

மிக எளிமையான தோற்றத்துடன் இருந்த விவேகியிடம் ஒரு தேஜஸ் இருந்தது.

 நாத்திகமும் ஒரு சித்தி நிலை தான். 


அந்தக் காலத்தில் ஒரு முசல்மான் திராவிடர் கழகத்தில். பெரும் ஆச்சரியம். எப்படி சாத்தியமாயிற்றோ என்று இன்றும் கூட எண்ணிப்பார்க்க மலைப்பாக இருக்கிறது. 


 முபாரக்கைக் காட்டி விவேகியிடம் எல்ப்பிட்டி சொன்னார் 

'இவர் உங்களைப் போல ஒரு பகுத்தறிவு வாதி தான்.' 


உண்மையில் முபாரக் அப்படியெல்லாம் கிடையாது. ஆனால் ஏனோ ரேசனலிஸ்ட் என்று தான் என்னைப் போலவே சொல்லிக்கொள்வான். 

ரவி தெய்வ நம்பிக்கை இன்று வரை சீரானது. 

நான் இடைப்பட்ட வாழ்க்கையில் ஆத்திகம் கொஞ்சம் பார்த்தவன் தான். 


முபாரக் அப்போதெல்லாம் இப்படி யாராவது சொல்லிவிட்டால் பெருமிதமாக இறும்பூதெய்தி விடுவான். விவேகியின் கையைப் பிடித்து குலுக்கினான். 


நான் தமிழயயாவிடம் 'அய்யா, நானும் பகுத்தறிவு வாதி தான்ய்யா' என்ற போது 

அவர் தன் மீசையைத் தடவிக்கொண்டே

 'ஆ.. கேபி, நீ ஒரு விளையாட்டுப் பிள்ளையய்யா' 


எஸ். டி. விவேகி எழுதிய நூல் ஒன்று அப்போது பிரபலமானது. 'வேதங்களின் வண்டவாளம்'.  திராவிடர் கழக வெளியீடு. 


எல்ப்பிட்டி அடையாளமிட்டார். 


கோரிப்பாளையத்தில் அப்போது திராவிடர் கழக புத்தக நிலையம் ஒன்று உண்டு. இப்போதும் இருக்கிறதா? 


உடனே, உடனே அங்கே போய் அந்த நூலை நானும், முபாரக்கும் வாங்கினோம். 

ரவி ' ஏன்டா இதெல்லாம்' 

ரவி ஒரு புத்தகப் புழு. அந்த புத்தகத்தைப் படிக்காமல் விடவில்லை. 


முபாரக் கேன்சரில் அற்பாயுளில் இறந்த போது முழுமையாக  இஸ்லாமிய முறைப்படி 

பள்ளி வாசலில் தொழுகை நடத்தப் பட்டு தான் அடக்கம் செய்யப்பட்டான். 


முபாரக் மவுத்துக்கு ஆங்கிலப் பேராசிரியரும், மொழியியல் வல்லுநருமான ஃபஸ்லுல்லா கான் வந்திருந்தார் என்பது நன்றாக நினைவிலிருக்கிறது. 


ரவியும் நானும் விம்மி, விம்மி, 

தேம்பித் தேம்பி அழுதோம். 

முபாரக் உடல் இறக்கப்பட்ட குழியில் 

மண் அள்ளிப் போட்டு விட்டு,            

மற்ற யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், 

விறு விறு வேகமாக நடக்க ஆரம்பித்தோம். 


..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.