Share

Feb 16, 2021

சரவணன் மாணிக்கவாசகம்

 மகத்தான வாசகர் ஒருவர் சிறந்த எழுத்தாளர் ஆக உருவாகியிருக்கிறார். 

இன்றைக்கு இலக்கிய உலகில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க செய்திருக்கிற சரவணன் மாணிக்கவாசகம். 


சரவணனை அசுர வாசகனாக 

நான் காண வாய்த்தது. 


'சாண்டில்யன் தமிழ் கொஞ்சும் ' என்று என்னிடம் சரவணன் மாணிக்கவாசகம் சொல்லும் போது நான் சாண்டில்யன் முக்கிய பெருங்கதை 

'யவணராணி' கூட படித்ததேயில்லை. கல்கி நாவல்களும் படித்ததேயில்லை. 

இன்று வரை இந்த எழுத்தாளர்கள் விஷயத்தில் அஞ்ஞானம் தான். 


ஒரு கவிதை சரவணன் எழுதியதை படிக்க கொடுத்ததையும் மறக்க முடியவில்லை. 

அது சரவணன் காதலிக்கு எழுதிய ஒரு கவிதை. 

'என்னடி அலைக்கழிக்கிறாய்? 'என்பது முதல் வரி. 

கடுங் கோபத்துடன் எழுதப்பட்ட கவிதை. 

' நீ என்ன பெரிய ஓவியமோ? இவ்வளவு தலைக்கனம் ஆகாதுடி. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? '

சரவணனின் இயல்பான பண்பு காரணமாக கவிதையில் எந்த கெட்டவார்த்தை அர்ச்சனையுமே காணக்கிடைக்கவில்லை. (இன்றும் அதை சரவணன் மெய்ன்டைன் செய்யும் கண்ணியம் காண முடியும்) 


சரவணனுக்கு முதன் முதலாக கொடுத்த புத்தகம் 

' கடல் புரத்தில்' வண்ணநிலவன் நாவல். 

சின்ன புத்தகம். மிரண்டு விடக்கூடாது. 

சரவணன் படித்து விட்டு 'முடிவு சரியில்லை' 

என உதடு பிதுக்கிய போது சொன்னேன். 

'No story ends in the end '

சாண்டில்யன் கதைகள் சுவாரசியமாக முடியும் போல. 

அடுத்து தி. ஜானகிராமன் 'அம்மா வந்தாள்' கொடுத்தேன். அதுவும் ஒரு சின்ன புத்தகம். 

வண்ண நிலவன் ரெயினிஸ் ஐயர் தெரு, எஸ்தர் 

இப்படித் தான் சரவணனுக்கு நவீன இலக்கிய அறிமுகம் ஆரம்பம். 


பெரிய transformation சரவணன் மாணிக்கவாசகத்திற்கு ஏற்பட்டதை காண முடிந்தது.


புதுமைப்பித்தன் அன்று இரவு, காஞ்சனை, பிறமொழி சிறுகதைகள், உயிராசை


ஜானகிராமன் மோக முள், மலர் மஞ்சம், உயிர்த் தேன், சிறுகதை தொகுப்புகள், 

சுந்தர ராமசாமி

 புளிய மரத்தின் கதை, ஜே. ஜே. சில குறிப்புகள், 

பிரசாதம் சிறுகதைகள், 

அசோகமித்திரன் வாழ்விலே ஒரு முறை, உண்மை வேட்கை, விமோசனம் சிறுகதைகள், விடுதலை குறுநாவல், 

கிரா கதவு, கோபல்லகிராமம், வேட்டி, அப்பா பிள்ளை அம்மா பிள்ளை. 

லா. ச. ரா அபிதா, ஜனனி, புத்ர, மீனோட்டம் 

நீல பத்மநாபன் தலைமுறைகள், பகவதிபுரம் கேட், 

ஆதவன் காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் நாவல்கள், இரவுக்கு முன் வருவது மாலை குறுநாவல்கள், சிறுகதைகள். 

கிருத்திகா நேற்றிருந்தோம், 

அம்பை சிறகுகள் முறியும். 


கிருஷ்ணன் நம்பி நீலக்கடல். 

வெங்கட் சாமிநாதன் எதிர் காலத்தின் அங்கீகாரத்தை நோக்கி ஒரு குரல். 

சா.கந்தசாமி சாயாவனம், அவன் ஆனது, 

ஆ. மாதவன் கிருஷ்ண பருந்து, 

ஜெயந்தன் அரும்புகளை, 

ஹெப்சீபா ஜேசுதாசன் மானி, 

ஐசக் அருமைராஜன் கீறல்கள்


முதல் நாள் கொடுத்த புத்தகம் மறு நாள் திருப்பிக் கொடுக்கும் போது அதில் இருந்து பல கேள்விகள் கேட்டு செக் பண்ணும் போது சரவணனின் 'டான் டான்' பதில்கள் திகைக்க வைத்திருக்கிறது. 


என்னிடம் இருந்த அத்தனை நூல்களையும் சரவணன் வேகமாக படித்து முடித்தாகி விட்டது. 

நான் வாங்கிய புதிய நூல்களையும் எனக்கு முன்னரே படிக்கிற வேகம். 

உ.வே. சாமிநாதய்யர் என் சரித்திரம் நான் வாசிக்கு முன்னரே சரவணன் படித்து முடித்த விஷயம் இன்றும் நினைவிருக்கிறது. இது போல பல புத்தகங்கள் சரவணன் படித்த பின்னர் தான் நான் படித்தேன். 

என் கூடவே ஒரு அற்புத வாசகன் படிக்க கிடைத்ததால் நானும் புத்தகங்கள் வாங்கி குவித்தேன். 


ஒவ்வொரு படைப்பாளியின் அனைத்து நூல்களையும் முழுமையாக படித்து விடுவோம். 

மறு வாசிப்பு செய்வோம். 


அப்போது கிடைக்காத மௌனி, கு. ப. ரா, வண்ணதாசன் கதைகள் பிறரிடம் வாங்கி படித்தோம். 


அப்போது அன்னம் நவ கவிதை வரிசை 

கல்யாண்ஜியின் புலரி, வண்ணநிலவன் மெய்ப்பொருள், விக்ரமாதித்யன் ஆகாசம் நீல நிறம்.


கலாப்ரியா மற்றாங்கே, நீலமணி தீர்க்க ரேகைகள்.. 


சரவணன் படித்த என் நூல்களையெல்லாம் அவருடைய தாயாரும் படித்தார். 

அந்தப் பழைய புத்தகங்களில் இன்னும் பில்கள் இப்போதும் இருப்பதை காணும் போது கண்கள் பனிக்கும். 

கடந்த காலங்களில் எவ்வளவு பொருள், நிலம், நகை இழந்திருக்கிறேன். இந்த புத்தகங்கள், பில்கள் பத்திரமாக இருப்பது Irony. 


சரவணன் சொந்த விஷயங்கள் பற்றி பேசப் புகுந்தால் புனைவை

மிஞ்சிய விஷயங்கள். 


இவ்வளவிலும் சரவணன் வாசகனாக இருந்தது அதிசயம். 

வாசிப்பு எப்பேர்ப்பட்ட தவம். 

இன்று உலகின் தலை சிறந்த வாசகர்களில் சரவணனுக்கு முதல் வரிசையில் இடம். 


ஒரு வேடிக்கை. 

2019 புக்ஃபேர்ல எழுத்தாளர் திலீப் குமார் என்னுடன் பேசுகையில் தனக்கு அறிமுகம் இல்லாத சரவணனைப் பார்த்து "மௌனின்னு ஒரு எழுத்தாளர்ங்க" என்றார். 

நான் உடனே, உடனே "சார், சரவணன் மௌனி மட்டுமில்ல, நீங்க உட்பட எல்லா முக்கிய எழுத்தாளர்களையும் எப்போதோ படித்து விட்டவர். உலக இலக்கியங்களின் வாசகர்" என்றவுடன் 

சரவணனிடம் திலீப் சாரி சொன்னார். 


சரவணன் எனக்கு ஈமெயிலில் எழுதி அனுப்பியதையெல்லாம் பார்த்து விட்டு இங்கே ஃபேஸ்புக்கில் எழுத வைக்க பெரும் பாடு பட்டு வற்புறுத்த வேண்டியிருந்தது. 


சரவணன் எழுத்து நிறைய வாசகர்களை ஈர்ப்பது பெருமையாக இருக்கிறது. 

பெரும்பான்மை எழுத்தாளர்களின் நூல்களையெல்லாம் சரவணன் படிப்பதோடு அவற்றைப் பற்றி எழுதுவதால் பரந்த கவனம் பெற்று, இன்று எழுத்தாளர்களின், கவிஞர்களின் நட்புக்கும், அன்பு, அபிமானத்திற்கும் உரியவராக இருக்கிறார். 


Go ahead and make your day, Saravana.


http://rprajanayahem.blogspot.com/2012/11/m.html?m=0

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.