பெரியம்மா என்னை ஒரு முறை திருச்சிக்குப் பக்கத்தில் ஏதோ ஊருக்கு அழைத்துப் போயிருக்கிறாள்.
அங்கே ஒரு மடத்து சந்யாசி
தனக்குப் பின்னால் குட்டி அதிபதியாக
ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பட்டம் கட்டினார்.
கிழ சந்யாசி ஒரு பத்து வயதுப்பையனை அதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தார்.
பையன் பளபளவென்றிருந்தான்.
சிறு பிராயத்தின் பூத்தோல்.
அவனுக்கு மொட்டையடித்து,
ஒரு குளத்தில் முழுகச் சொல்லி,
தண்ணீர் காலில் படப் படித்துறையில்
நிற்க வைத்து,
காவித்துணியையும், தண்டத்தையும்
அவனிடம் கொடுத்துத் தீட்சை கொடுத்தார் கிழத்துறவி.
அதைப் பார்த்து விட்டு என்னமோ
எனக்கு அழுகை அழுகையாக வந்தது.
அவன் இனிமேல் வீட்டுக்குப் போகக் கூடாதாம்.
அப்பா அம்மாவைப் பார்க்கக் கூடாதாம்.
விளையாடப் போகக் கூடாது.
சாப்பாடு கிழவர் சொன்னபடி தானாம்.
சினிமா, டிராமாவெல்லாம்
அவன் போகக் கூடாதாம்.
தினமும் மூன்று நான்கு வேளை குளிக்க வேண்டுமாம். கடைக்குப் போக முடியாது.
காசு கொடுத்து பெப்பர்மிட் சாக்லேட் வாங்கித் தின்ன முடியாது.
பள்ளிக்கூடம் போக முடியாது.
காசைத் தொட முடியாது.
இதையெல்லாம் விட அந்தச் சின்னக் குழந்தை மயிரையும் வெள்ளை வேட்டியையும்
நிஜாரையும் இழந்தது என்னைக் குலுக்கிற்று. பெரியம்மாவையும் குலுக்கி விட்டது.
பெரியம்மா சுதாரித்துக் கொண்டு அவன் கரையேறி வந்ததும், வயசைப் பார்க்காமல்,
தெரு மண்ணில் விழுந்து கும்பிட்டாள்.
நானும் கும்பிட்டேன்.
" இது தான்டி அந்தப் பையனோட தாயார்! " என்று தெரு மூலையில் நின்று கொண்டிருந்த
ஒரு அம்மாளை விழுந்து கும்பிட்டாள். கும்பிடும் போதும் கண்ணீர். நானும் விழுந்து கும்பிட்டேன்.
- தி. ஜானகிராமன் 'மரப்பசு' அம்மணி
இந்த மரப்பசு anecdote பல வருடங்களுக்கு முன்பு மளையாள குறும் படமாக தயாரிக்கப் பட்டு தேசத்தின் கவனம் பெற்றது. ஜானகிராமனுக்கு எந்த க்ரெடிட்டும் தரப்பட்டிருக்கவில்லை.
அவார்ட் வாங்கிய படம்.
படத்தில் அந்த பாலகன்
ஒரு நாள் மடத்திலிருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடிப் போய் அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பான்.
தமிழின் முக்கியப் பத்திரிக்கை அந்த படம் பற்றி விசேஷ கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது.
பார்த்தவர்களையெல்லாம் கலங்கி கண்ணீர் விடச்செய்தது.
படத்தின் ஸ்பெஷல் ஷோவில் படம் முடிந்து விளக்கைப் போட்ட போது அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த எல்லோர் கண்களிலும் கண்ணீர்.
அப்போது அந்தப் பால சந்யாசியாக நடித்திருந்த சிறுவன் சூழ்நிலை இறுக்கத்தை நிராகரித்து, வெகு இயல்பான குழந்தைத் தனத்துடன்
அங்கே கலகலப்பாக சிரித்து
விளையாட ஆரம்பித்து விட்டான்.
..
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.