Share

Sep 4, 2019

அரும்பில் குறும்பு


திருச்சி செயின்ட் ஜோசப்'ஸ். பள்ளியில் ஏழாவது படிக்கிற போது ஸ்டடி ஹாலில் படிப்பிற்கான நேரத்தில் என்னுடைய
பிஸ்கட் டின் னில் தாளம் போட்டு பாடிக்கொண்டிருக்கும் போது, ஃபாதர் லூயிஸ் என்னை பார்த்து "கேபி, நீங்கள் என்னுடன் வாருங்கள்."

சிறுவனாயிருக்கும் போதே நான் கண்ணாடி அணிந்திருப்பேன்.
மற்ற மாணவர்கள் கவனிக்கும்படியாக இருக்கும் உயர்ந்த மேடையில் நாற்காலியில் முன்னால் உள்ள மேஜையில் தன் கையில் உள்ள டிக்கன்ஸின் டேல் ஆஃப் டூ சிட்டிஸ் நாவலை ஃபாதர் வைக்கும் போதே நான் அவர் முன் கை கட்டி நிற்கிறேன்.

ஃபாதர் லூயிஸ் அப்போது எம். ஏ. இங்க்லிஷ் செகண்ட் இயர் படித்துக்கொண்டிருந்தார்.

"கேபி, நீங்கள் என்ன எப்போதுமே இப்படி குறும்பு செய்து கொண்டிருக்கிறீர்கள்"

தலை குனிந்து கொண்டு நான்.

"என்ன கேபி, நிமிர்ந்து தயவு செய்து என்னை பாருங்கள். நான் உங்களிடம் தான் பேசுகிறேன் என்பது தெரிகிறதா? "

நான் நிமிர்ந்து அவரைப் பார்த்து தலையை ஆட்டுகிறேன்.

" நீங்கள் இப்படி சிறு பையனாக இருக்கும் போதே இவ்வாறு குறும்பு செய்தால் பிற்காலத்தில் ஒரு பெரிய மனிதனாக வளர்ந்த பின் எவ்வளவு கெட்டவராக நேரிடும் என்பதை எண்ணி உங்களுக்காக நான் மிகுந்த வியாகுலம் அனுபவிக்கிற நிலைக்கு என்னை தள்ளி விட்டு விட்டீர்கள் "

நான் முகம் வெளிறி, எச்சில் விழுங்கி, நடுங்கி..

" கேபி, அமைதியாக படிக்க வேண்டிய நேரத்தில் தாளம் போட்டால் படிப்பு தாளம் போடும்படியான துர் பாக்யம் உங்களுக்கு உண்டாகி விடும் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? "  என்று சொல்லும் போதே தன் வலது கையில் உள்ள வாட்ச்சை கழட்டி அதில் டைம் என்ன பார்த்து விட்டு மேஜையில் வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்து
" நீங்கள் தாளம் போட்டு பாடும் போது உங்களுடைய ஏனைய மாணவ நண்பர்கள் கவனம் சிதறி அவர்களும் கூட பாடத்தை படிக்க முடியாத பரிதாப நிலைக்கு அவர்களை தள்ளுகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் ஒரு கொடியவர் என்பது நிரூபணமாகி விட்டது. உங்களுக்கு நான் எங்கனம் தண்டனை கொடுக்காமல் இருக்க முடியும்? "

" கண்ணாடிய கழட்டுடா"

அரண்டு, உறைந்து போய் நான்.

ஃபாதர் மீண்டும் கடுமையாக குரல் உயர்த்தி "கண்ணாடி ய கழட்டுடா"

கண்ணாடி யை  கழற்றி அவர் மேஜையில் வைத்த  அடுத்த வினாடி என் கன்னத்தில் 'பளீர்' அறை.

http://rprajanayahem.blogspot.com/…/01/a-blundering-boy.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.