நண்பன் சரவணன் மாணிக்கவாசகத்தின்
இன்றைய பதிவு
"முகநூலை ஆங்கிலப் புத்தகங்களுக்கே பல வருடங்கள் பயன்படுத்தி வந்தேன். அநேகமான ஆங்கிலப் புத்தகக் குழுக்களில் இருந்தேன். புத்தக விமர்சனம் உள்பெட்டி இலக்கிய உரையாடல்கள் என்று காலம் போனது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் தமிழில் எதுவும் படிக்கவில்லை. தமிழுக்கு இந்த முகநூலைப் பயன்படுத்துவதிலும் கூட தயக்கமே இருந்தது. அப்போது நட்பில் இருந்த 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளோருக்குத் தமிழ் தெரியாது. தோழர் R P ராஜநாயஹத்தின் பிடிவாதமே கடைசியில் வென்றது. அவருக்கு அனுப்பும் சிறுபதிவுகளைப் பார்த்து விட்டு, "எல்லாமே வீணாப் போகுதே, முகநூலில் போடு" என்று விடாமல் சொல்வார். அப்படித்தான் உள்ளே நுழைந்தது.
இருபதாயிரம் பேருக்கு மேல் இருந்த ஆங்கிலக்குழுவில் குறைந்தது 100 Likes வரும். இங்கே முதல் பதிவுக்கு RPR மட்டுமே Like. அடுத்த பத்து பதிவுகளுக்கு இன்னொருவரும் சேர்ந்து எண்ணிக்கை இரண்டாகியது. ஆரம்பிக்கு முன்னரே பார்ப்பவர் எல்லோருக்கும் நட்பழைப்பு கொடுக்க வேண்டும் என்ற அறிவுரையின் பேரில் Gender bias இல்லாமல் கொடுத்தால் இனம் இனத்துடன் சேரும் என்பது போல அழைத்தஆண்களில் மட்டும் பத்து சதவீதம் என்னை உடனே ஏற்றுக் கொண்டார்கள். பெண்கள் ஒயின் பக்குவமடையும் காலத்தை எடுத்துக் கொண்டு பின் நட்பில் சேர்த்துக் கொண்டார்கள். அப்படியும் Likeகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில். RPR Moral responsibility எடுத்துக் கொண்டு அவருடைய முகநூல் பக்கத்தில் என் முகநூல் முகவரியைப் போட்டு நன்றாக இருக்கும், படியுங்கள் என்ற விளம்பரம் கொடுத்தார். இன்னொரு நண்பர் முகநூல் என்பது என் வீட்டுக்கு நீ வந்தால் உன் வீட்டுக்கு நான் வருவேன் என்பது போலத்தான் என்று விளக்கம் கொடுத்தார். ஐநூறு நண்பர்கள் சேரும்வரை இதே நிலை தான். அப்புறம் ஒரு ஆறுமாதம் கழித்தே Likes என்பது மதிப்பெண் இல்லை என்ற விஷயஞானம் எனக்கும் கிடைத்தது.
பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் குடிபுகுந்த பெண் ஒருநாள் திடீரென்று கேட்டார். எல்லாம் பெங்காலிப் புத்தகங்களாகப் படிக்கிறீர்களே, ஆங்கிலத்தில் படிப்பதில்லையா இப்போது என்று. சுவாரசியமான தருணங்கள், சுவாரசியமான மனிதர்களை முகநூல் அருகில் கொண்டு வந்திருக்கிறது.
சில சின்னச்சின்ன சங்கடங்களைத் தாண்டி குறையென்று சொல்வதற்கு எதுவுமில்லை. தமிழில் புத்தகங்கள் படிப்பது அதிகமாகி இருக்கிறது, ஆங்கிலத்தில் குறைந்திருக்கிறது.
கலாச்சார இடைவெளி விரிவாகவே உள்ளது. நகைச்சுவை உணர்வு நம்மவர்களுக்கு சற்று குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. பீடாதிபதிகள் ஆங்கிலத்தில் பெரும்பாலும் கிடையாது. இங்கே மூன்று சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டு விட்டாலே அவரிடம் பெறும் இலக்கிய சான்றிதழை வைத்துத்தான் நமக்கு இலக்கியம் தெரிகிறது என்பது வெளியில் சொல்லமுடியும். ஆற்றங் கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே என்ற வாக்கில் இங்கே நம்பிக்கை சற்று குறைவு. தன்னை சாஸ்வதம் என்று நம்பும் எழுத்தாளர்கள், தான் மட்டுமே கெட்டிக்காரன் என்று தீவிரமாக நம்பும் முகநூல் பதிவர்கள்.
வருடாந்திரக் கணக்கு எடுப்பது போல் முகநூல் கணக்கில் கூட்டல் கழித்தலுக்குப் பிறகு கடைசியில் கூட்டல்எண்ணே மீதி இருக்கிறது. சிலரது அன்பு உண்மையில் திக்குமுக்காட வைக்கிறது. முகநூலால் என்னைப் பொறுத்தவரை வாசிப்பு குறையவில்லை. ஆனால் படிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பலபல வருடங்களுக்கு முன் நான் படித்து பிரமித்த ஒருவர் இப்போது என்னைப் பார்த்து பிரமிப்பதாகச் சொன்னதைக் கேட்டபிறகு நாளையில் இருந்து முகநூலே வேண்டாம் என்று போனாலும் அசைபோட இதுபோல இனியதாய் விசயங்கள் நிரம்பியிருக்கின்றன."
...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.