Share

Dec 19, 2020

மதுர மணி


"அடுக்குக் காசித் தும்பை மலரில் புள்ளிகள் கொண்ட வகை உண்டு. அந்தப் புள்ளிகள் குறைகளல்ல. மலரின் அழகைப் பெருக்குபவை. மணி ஐயரின் கத்தரிப்பு நடை கூட ஒரு தனி அழகாகவே காலப்போக்கில் அமைந்து விட்டது" 


- தி. ஜா 


தி. ஜானகிராமனுக்கு பிடித்த சங்கீத வித்வான்                மதுரை மணி ஐயர் என்பதை நான் தெரிந்து கொள்ள பல வருடங்களாக விசாரித்து, 

திருச்சி ரசிக ரஞ்சனி சபாவில் மெம்பராய் நான் இருந்த போது வையச்சேரி தேவாரம் பாலசுப்பிரமணியம் தான் சொன்னார் : 'ஜானகிராமனுக்கு மதுர மணி ஐயர தான் ரொம்ப பிடிக்கும்.' 


எனக்கும் ஃபேவரிட் மதுரை மணி ஐயர் தான். அதனால் ஆச்சரியம், சந்தோஷம் இரண்டும். 


'நாத லோல' மதுரை மணி ஐயர் பற்றி 

தி. ஜானகிராமன் 1960 ல் எழுதிய கட்டுரை பகுதியாக

உமா சங்கரியின் "மெச்சியுனை..." நூலில் 

இடம் பெற்றுள்ளது. 


தி. ஜா லயித்து எழுதியிருக்கிறார் : "இவ்வளவு சக்தி அவர் சங்கீதத்தில் ஓங்கி நிற்பதன் ரகசியம் என்ன? அவருடைய சுருதி உணர்வும் ஸுஸ்வர கானமும், அழுத்தமாக உள்ளே இழைந்து அமைந்து விட்ட லய உணர்வும் தான்.. 


.. அதன் விச்ராந்தி,  சுருதி, இரண்டிலும் உள்ள நிச்சயமான பிரக்ஞையினால், அவருடைய புகழ் பெற்ற, பிரமிக்க வைக்கிற ஸ்வரகல்பனைகளில் கூட ஒரு அமைதி விரவி நிற்கிறது. 


வெட்டி வெட்டி, கத்தரித்துக் கத்தரித்துப் பாடுகிறார் என்று சிலர் சொல்லலாம். அது ஒரு கலைஞனின் நடை, தனக்காக வகுத்துக் கொண்ட நடை. அது கலைஞனின் உரிமை. ஒரு குறையையே நிறைவாகவும் அழகாகவும் மாற்றி அமைக்கக் கூடிய ஆற்றல் ஒரு மேதைக்கு உண்டு.. 


மதுர மணி ஐயரின் சங்கீதம் உன்னதமானது என்று இன்னொரு வகையிலும் சொல்ல வேண்டும். அது தெய்வத்தின் முன் நிற்கும் ஒரு பரிசுத்த நிலையை, ஒரு ஆனந்த மோன நிலையைப் பல சமயங்களில் உண்டாக்கியிருக்கிறது."


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.