கமல் ஈகோ பார்க்காமல் ரஜினியுடன் கூட்டு சேரத்தயார்.
ரஜினி இன்னும் respond பண்ணவில்லை.
ஒரு வேளை இருவரும் கூட்டணி அமைத்தாலும்
இவ்விருவரின் ரசிகர்கள் எப்படி சுமுகமாக ஏற்று இணைந்து தேர்தல் பணியாற்றுவார்களோ?
என்னுடைய மாப்பிள்ளை ஒருவர்
ரஜினியின் தீவிர ரசிகர்.
அவரிடம் கிண்டல் செய்ய வசதியாக
நான் கமலின் தீவிர ரசிகர் என்கிற மாதிரி
ஒரு முரட்டு முகமூடியை அணிந்து கொண்டு தான் சற்று மிகையான பாவனைகளுடன்
பேசுவது வழக்கம்.
அப்போது ’மைக்கல் மதன காமராஜன்’ படம் வெளியாகியிருந்தது.
கடை வீதியில் பஸ் ஸ்டாண்ட் ஒட்டி இருந்த அவருடைய கடையில் அவரை சந்தித்த போது
“ அத்தான், வாங்க, உள்ள வாங்க”
“ மாப்பிள்ள, எங்காளு ( கமல்) படம் ரிசல்ட் பத்தி ஏதாவது கேள்விப்பட்டீங்களா? யாராவது படம் பாத்திருப்பாங்களே” பரிட்சை ரிசல்ட் கேட்க தவிக்கும் மாணவ சிறுவன் போல நான் கேட்டேன்.
உடனே அவர் முகம் சற்று சோகமாக மாறியது. நான் எதிர் பார்க்கிற நல்ல ரிசல்ட் கிடையாது என்று அர்த்தம்.
ஒரு பெரு மூச்சு விட்டு “ உள்ள வாங்களேன். சொல்றேன்”
நான் சற்று அவசரமாக பதற்றத்துடன் “ என்ன மாப்பிள்ள?” என்றேன்.
”சிவகாசி,ராஜபாளையம் இரண்டு ஊர்களிலும் போய் படம் பார்த்துட்டு வந்துட்டாங்கே…. உங்க ஆளு ஒர்த்தன் (ஒரு கமல் ரசிகன் என்று அர்த்தம்) இப்பத்தான் வந்து அழுதுட்டு போறான்.”
சற்று நிறுத்தி விட்டு கடைக்கு வந்திருந்த கஸ்டமர்களை கவனிக்க ஆரம்பித்து
காசு வாங்கிப்போட ஆரம்பித்து விட்டார்.
என்னை அவர் இடையிடையே பார்க்கும்போதெல்லாம் நான் முகத்தில் -----’சீக்கிரம் சொல்லுங்க மாப்பிள்ள’ ------- பாவனையில் தவிக்க ஆரம்பித்தேன்.
கஸ்டமர்களை அனுப்பி விட்டு திரும்பி
“ எத்தான், நீங்களே சொல்லுங்க…
ஒர்த்தன் பேரு மைக்கலாம்.
இன்னொருத்தன் பேரு மதனாம்.. இன்னொருத்தன் காமன்..
நாலாவது ஆளு ராஜனாம்…
இதெல்லாம் என்ன நல்லாவா இருக்கு? சொல்லுங்க நீங்களே சொல்லுங்க?”
பதில் இப்படி வரவேண்டும் என்பது இந்தக்கேள்வியில் உள்ள கொக்கி - “ ஆமா நல்லாவே இல்லையே ”
நான் பதிலே சொல்லாமல் நகத்தை கடித்தேன்.
அவர் எனக்கு ஆறுதல் சொல்லும் பாவனையில் பெருந்தன்மையுடன் “ எத்தான், ராமராஜன் படம், விஜயகாந்து படம் எல்லாம் ஓடும்போது
உங்காளு படம் ஓடுனா எங்களுக்கு ( ரஜினி ரசிகர்களுக்கு) என்ன வேண்டாம்னா இருக்கு”
என் கவலையான முகத்தை அவரும் வரவழைத்துக்கொண்ட இறுக்கமான முகத்துடன் பார்த்து சொன்னார் “ உங்காளு சரியில்லை அத்தான். நான் நடு நிலையா சொல்றேன் பாத்துக்கங்க”
நடு நிலையாம்.
அவர் எதிர் பார்த்த படி நான் முகத்தை ரொம்பத்தொங்க போட்டுக்கொண்டு
“ எனக்கு என்னன்னோ வருது மாப்பிள்ள “
ரஜினி ரசிகரான மாப்பிள்ள “ நீங்க ரஜினி ரசிகரா மாறுங்க அத்தான். என் ஃப்ரெண்ட்ஸ் எத்தன கமல் ரசிகங்க நான் சொல்லி ரஜினி ரசிகரா மாறிட்டாங்கெ தெரியுமா”
“ மாப்பிள்ள, நான் அனுமார் மாதிரி மாப்பிள்ள. மறந்தும் புறம் தொழ மாட்டேன். மாட்டவே மாட்டேன்.”
”புரியலத்தான்…”
”நான் எப்பவும் கமல் ரசிகன் தான்.
மாறவே மாட்டேன்.”
“ ச்சே, உங்களயெல்லாம் திருத்தவே முடியாதுத்தான்..”
என்னுடைய மாப்பிள்ளையாவே இருந்தாலும் இந்த ரஜினி ரசிகரோட சேந்து நான் எப்படிங்க தேர்தல் பிரச்சார வேலை பாக்க முடியும்?
..
..................
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.