Share

Dec 14, 2020

ஓவியர் P. கிருஷ்ணமூர்த்தி மறைவு

 ஓவியர் P.கிருஷ்ணமூர்த்தி மறைந்து விட்டார். 


 கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குனராக ஜி.வி.அய்யரின் ஆதி சங்கராச்சாரியா, மத்வாச்சாரியா போன்ற படங்களில் பணியாற்றியவர்.


 பி.வி.காரந்த், பன்ஸி கௌல் நாடகங்களிலும் 

செட் ப்ராப்பர்ட்டி, ஸ்டேஜ் டிசைன் விஷயங்களை கவனித்தவர். 

பதினைந்து மலையாளப்படங்களின் 

கலை இயக்குனர். 

கேரள அரசின் விருது வடக்கன் வீர கதா 

உள்ளிட்ட படங்களுக்கு பெற்றிருக்கிறார்.


பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், பாரதிராஜாவின் நாடோடித்தென்றல், 

சுகாசினி இயக்கிய இந்திரா

 போன்ற படங்களுக்கும் 

கிருஷ்ண மூர்த்தி தான் கலை இயக்குனர்.


ந.முத்துசாமி நாடகங்களிலும் கூத்துப்பட்டறையின் ஆரம்ப கால செயல்பாடுகளில் கலை இயக்குனராக பணியாற்றியவர். ’காலம் காலமாக’, ’நாற்காலிக்காரர்’, ’உந்திச்சுழி’ நாடகங்கள்.


சமீபத்தில் மறு பிரசுரமான ’உந்திச்சுழி’ நாடகத்தை ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு – ’சுந்தர ராமசாமியின் கதா பாத்திரம் ஜே.ஜே’ - ந.முத்துசாமி சமர்ப்பனம் செய்திருக்கிறார்.


1980ல் இந்த நாடகம் எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடந்திருக்கிறது.

 க்ரியா ராமகிருஷ்ணனின் துணைவி விஜயலக்ஷ்மி நடித்தார்.


இந்த நாடகத்தில் முக்கியமான செட் ப்ராப்பர்ட்டி முட்டை! ஒரு பெரிய முட்டை.


ஆர்ட் டைரக்டர் கிருஷ்ண மூர்த்தி மிகுந்த பொறுப்போடு இந்த பெரிய முட்டையை கொசப்பேட்டையிலிருந்து 

எக்மோர் மியூசியம் தியேட்டருக்கு நடந்தே உருட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.


இன்று இதை நினைத்துப் பார்க்கும்போது மலைப்பாய் இருக்கிறது.


கள்ளமின்மையே! உன் பெயர் தான் P.கிருஷ்ணமூர்த்தி!


மியூசியத்திற்குள் முட்டையுடன் நுழைந்த பிறகு தியேட்டருக்குள் அதை கொண்டு வர எப்படியெல்லாம்

 பிரயத்தனப்பட வேண்டியிருந்தது 

என்பதை லலித் கலா அகாடமியில்

 2017 மார்ச் மாத ஆறாம் தேதி மாலை 

ஞாபகமாக விவரித்தார்.                                                              

அன்று கிருஷ்ண மூர்த்தியின் துணைவியார் தங்களின் வறிய நிலை பற்றி உடைந்த குரலில் பேசினார். உறவினர்கள் துரோகம் பற்றி துயரத்துடன் புலம்பினார்.


 கிருஷ்ணமூர்த்தி தன் மடிப்பாக்கம் வீட்டுக்கு 

என்னை வரச் சொல்லி வலியுறுத்தினார். 

எனக்கு கொடுத்து வைக்கவில்லை 


2017, 28 பிப்ரவரி தொடங்கி 6 மார்ச் வரை 

லலித் கலா அகாடமியில்

 அல்ஃபோன்ஸோ,

 P.கிருஷ்ணமூர்த்தி 

இருவரின் ஓவிய கண்காட்சி நடந்தது.


மகத்தான இரு கலைஞர்கள்.

முதல் நாளும், கடைசி நாளும்

 ந.முத்துசாமி, மு. நடேஷ் இருவருடன் போய் இருந்தேன். மறக்க முடியாத நிகழ்வுகள். எம்.டி.முத்துகுமார சுவாமியை சந்திக்கிற வாய்ப்பு லலித் கலா அகாடமியில் கிடைத்தது.

வீர சந்தானத்தையும் அப்போது அங்கே 

பார்த்து பேசினேன். 


 ...............

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.