Share

Dec 21, 2020

R. P. ராஜநாயஹம் பற்றி பரமசிவம் எஸ்

 பரமசிவம். எஸ் எழுதிய பின்னூட்டம் 


எனது 40 வருட ஆதர்சங்களை விட

 R.P. ராஜநாயஹம் ஏன் இவ்வளவு வசீகரிக்கிறார் என்பதை யோசிக்கிறேன்.


முதலாவது...விஷய ஞானம்.இது நல்ல எழுத்தாளர்களின் பொது அம்சம் எனினும், உலக இலக்கியம், தமிழ் இலக்கியம்,சினிமா, உலக சினிமா,இசை,அரசியல், உலக மற்றும் இந்திய வரலாறு,புராணம்,இதிகாசம், அறிவியல்,இவையெல்லாம் போதாது என்று மிக முக்கியமாக ஜோதிடம் என்று எல்லாத்  தளங்களிலும் சர்வ சகஜமாக நுண்ணிய புள்ளி விவரங்களையும் தேவையான இடத்தில்  எந்த நொடியிலும் சொல்லக்கூடிய  இவரது நினைவாற்றல் வேறு யா....................ருக்குமே அமைந்திடாத ஒன்று.


        கிரிக்கெட் ரசிகர், இசை ரசிகர்,திரைப்பட ரசிகர்களுக்கு நடுவே தம் வாழ்வையே தமக்கான விருந்தாக்கிய மிகச்சிறந்த ரசிகர் ..சலிப்பும் சோர்வும் இல்லை.


எல்லாம் தெரிந்த அகம்பாவம் இல்லை. 

எதுவுமே தெரியாதது போல பாவனை செய்து செயற்கையான அடக்கத்தை முகமூடி ஆக்கி அதையே தனது பிரபல்யத்திற்கான முக்கிய காரணி ஆக்கும் புத்திசாலித்தனமும் இல்லை.


அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அரண்மனை உத்தியோகம் என்று இருக்கும் காலத்தில்..அரசு வேலைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யச் காத்திருப்போர் மத்தியில்  மிக நல்ல வேலையை மிகச் சாதாரணமாகக் கைகழுவியவர்...


பொருளாதார ரீதியான சமூக அந்தஸ்து,புகழ்,வசதியான வாழ்க்கை போன்ற மனிதனுக்குரிய ஆசைகள் எதுவும் இல்லாத வாழ்க்கையை அதன் போக்கில் ஒவ்வொரு நொடியும் ரசிக்கும் ரசனை மிகுந்த துறவி இவர் ..


சிலரைப் பார்த்து இவர் போல வாழ்க்கை அமைந்து இருக்கக் கூடாதா என்ற எண்ணம் எப்போதாவது வந்து போகும் ..ஆனால் இவரது மனோபாவம் நமக்கு அமைந்து இருக்கக் கூடாதா என்ற ஏக்கம்  ராஜநாயஹம் சாரைப் பார்த்து ஏற்பட்டது...

இந்த எளிய ரசனை மிகுந்த வாழ்க்கை யாருக்கும் அமையாது ..இப்படி எல்லோரும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் உலகத்தில் ஆனந்த வெள்ளத்திற்குப் பஞ்சம் ஏது?


இவரது எழுத்துக்கள் எல்லாமே எவ்வகையிலும் அடங்காத புதுவித இலக்கியம் எனவே எனக்குப்படுகிறது..


மேலோட்டமாகப் பார்த்தால் பொழுது போக்குக்கான எழுத்து என்று தோன்றும் ..ஆனால் அந்த நான்கு வரிகளில் எவ்வளவு உழைப்பும் ஞாபக சக்தியும் ரசனையும் அடங்கிக் கிடக்கிறது என்பதை யோசித்தால் பிரமிப்பு மட்டுமே மிஞ்சுகிறது ..


வலிந்து வெளிப்படுத்தப்படும் ஞானம் அதற்கான மதிப்பை இழக்கிறது ..தானாக வெளிப்படும் ஞானம் அதற்கான மதிப்பைப் பெறுகிறது ..ஆனால் தேடி வந்து புரிந்து கொள்ளப்படும் ஞானம் மிக உயரிய மதிப்பைப் பெறுகிறது ..நீங்கள் எந்த இடத்திலும் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளவே இல்லை. உங்களது ப்ளஸ் மைனஸ் இரண்டுமே இதுதான் .. 

இந்த மிக அவசரமாக எழுதப்பட்ட பதிவு..ராஜநாயஹம் சாரைப் பற்றி இன்னும் அறிந்துகொள்ள வேண்டும்.இவரது ஆளுமையை விளக்கவல்லது புத்தகமே...கட்டுரையால் இயலாது...

Paramasivam S


.. 


07.01.2021


Rajanayahem R.p. உங்களது பதிவுகள் தாமாகவே அதற்குரிய மதிப்பைப் பெற்றுவிடுகின்றன .பிரபலம் அடைந்தும் விடுகின்றன ..ஆனால் நீங்கள் பிரபலமடைய வில்லையே? நீங்கள் உங்களை எந்த இடத்திலும் வலிந்து வெளிப்படுத்திக் கொள்வதே இல்லை. இது பிரபல்யத்தையோ பணத்தையோ பெரிதாகக் கருதாத உங்களின் பெருந்தன்மை.  இதைத் தவிர. தங்களின் மேதைமை காரணமாக அமைந்த பரந்த உள்ளம் ஒரு காரணம்.


பணம் மட்டுமே தமக்கான அடையாளமாக எதேச்சையாக அமைந்து அறிவோ அல்லது அறிவின் தேடலோ அமையப் பெறாத சில பேர்  பிரபல்யத்தை அடையத் துடித்தால் என்ன ஆகும் ?இது போன்ற விஷயங்கள் தான் நடக்கும். என் எழுத்தாள நண்பரிடம் ஒருவர் கேட்டாராம். "ஒரே நாளில் நான் பிரபலமாக என்ன வழி?

       "ஏன் பிரபலமாக வேண்டும்?" என்ற எழுத்தாளரின்  எதிர்க்கேள்விக்கு பதிலே இல்லையாம்.


யோசித்துப் பார்த்தால் புகழ் ஆசைதான் காரணம்.


எங்களது கோவில்பட்டி திருநெல்வேலி தூத்துக்குடி ஏரியாவில்  தேங்காயை வைத்துச் செய்யும் சொதி என்கின்ற மிக மிகச் சுவை வாய்ந்த குழம்பு எங்கள் குடும்பங்களில் மிக மிகப் பிரபலம். நண்பர்கள் எங்கள் வீடுகளுக்கு வந்தால் இதை செய்து தரச் சொல்வார்கள். ஆனாலும் பிறரின் வீடுகளில் இதைச் செய்வதே இல்லை ..சொதிக் குழம்பு சாம்பாரைவிட மிகச் சுவை வாய்ந்தது ஆயினும் பிரபல்யம் குறைவு.தங்களைப் போல...


எனவேதான் இந்நிகழ்வுகள் ..தங்களின் பேஸ்புக் பதிவுகள் அனைத்தையும் முறைப்படி புத்தகம் ஆக்குங்கள்.சுஜாதாவின் இடம் காலியாகவே உள்ளது.சொல்லப்போனால் அவரால் தொட முடியாத உயரங்களை உங்களால் தொட முடியும் ..


பிரபலங்களோடு போட்டோ எடுத்து ஒரு போட்டோவில் உலகப்புகழ் அடையத் துடிக்கும் புகழ் வெறியர்கள் அனேகம். (அப்போது அவர்கள் முகத்தில் ஒரு இளிப்பு இருக்குமே... பார்க்க சகிக்காது.)..தங்களிடம் அது கூடக் கிடையாது.சொல்லப்போனால் ஜெமினி கணேசன் அவர்களுடனான போட்டோவில் அவர் முகத்தில்தான் ரசிகக்களை தெரியும்..குருவிமண்டையனுடனும் சரி..ஜெமினிகணேசனுடனும் சரி..அகம்பாவமோ போலியான பணிவோ இல்லாத ஒரே R.P. ராஜநாயஹம் தான்.. 


உங்களின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்யலாம் யாரும்...உங்களைப்போல் ஞாபக சக்தியும் ஞானமும் பல்துறை அறிவும் .வாழ்வை சுமை எனப் பார்க்கும் பொதுப்புத்தி அமைந்த இந்த உலகில் வாழ்வை உங்களுக்கான பரிசாக உங்களுக்கான விருந்தாகக் கொண்டாடும் உங்களைக் காப்பியடித்தல் சிரமம்..


உங்கள் படைப்புகளை முறைப்படுத்துங்கள் சார். அவை மிக மிக மிக மதிப்பு வாய்ந்தவை. ஆனந்தரங்கம் பிள்ளை தான் டைரி எழுதும்போது பின்னாளில் அது தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷமாகும் என நினைத்துப்பார்த்தா எழுதினார்?அந்தத் தகுதி தங்களின் எழுத்துக்கு உண்டு.


தத்துவம், காதல், அரசியல், வாழ்வியல்,தீவிர இலக்கியம்,அழகியல் எழுதும் எழுத்தாளர்கள் உண்டு.எந்த வகையிலும் சாராத புதிய வகை இலக்கியம் தங்களது எழுத்து.


சினிமா எனும் பூதம் என்னும் புத்தகம் ராஜநாயஹம் என்ற ஞானராட்ஷசனின் பிரம்மாண்டத்தை உணர்த்துவது.அதைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

 அழகான சிலையாக இருந்தாலும் கருவறையில்இருந்தால் தான் மதிப்பு.இல்லாவிட்டால்  பைரவர்கள் காலைத் தூக்கும் பொருளாகிவிடும்.

உங்கள் உயரத்தை நீங்கள் முதலில் உணருங்கள். உங்களது எழுத்தின் தரத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.அவற்றைப் புத்தகமாக்குங்கள்.இது வருங்கால சந்ததியினருக்குத் தங்களின் கொடையாக என்றென்றும் நிலைத்திருக்கும்.





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.