Share

Sep 22, 2012

இரண்டு நடிகைகள்

Nov 1, 2008

சரோஜா தேவி

சரோஜா தேவி! The most poetic Actress!

எஸ் எஸ் ஆர் சமீப குமுதம் ஒன்றில் சரோஜா தேவி அவருடைய திருமண பத்திரிகை கொடுக்க வந்த போது ' என்ன சரோஜா ? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம் என்று இருந்தேன். இப்படி செஞ்சிட்டியே !' என்று ஜோக் அடித்ததாக குறிப்பிட்டிருந்தார் .

இது பரவாயில்லை.சிவாஜி கணேசன் சரோஜா தேவியின் மாப்பிள்ளையிடமே " நான் சரோஜாவை கல்யாணம் செய்யலாம் என்று நினைச்சிகிட்டு இருந்தேன். நீங்க முந்திட்டீங்க " என்று விவஸ்தையில்லாமல் ஜோக் அடித்து இருக்கிறார். இதை சரோஜதேவியே ஒரு பேட்டியில் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

டி ஆர் ராமண்ணா கூண்டுக்கிளி , புதுமைபித்தன் படங்களில்
தான் இயக்கிய பி.எஸ் சரோஜாவை இரண்டாவது திருமணம் செய்தார்.

பின்னர் தன் படத்தில் நடித்த இ.வி சரோஜாவை மூன்றாவது மனைவியாக்கி கொண்டார்.

அடுத்து ராமண்ணா 'மணப்பந்தல் ' படத்தில் சரோஜா தேவியை கதாநாயகியாக புக் செய்தவுடன் அவருடைய அக்கா டி ஆர் ராஜகுமாரி பதறி போய் ' டே உனக்கும் சரோஜா என்ற பேருக்கும் ரொம்ப வில்லங்கம் உண்டு . இவளையும் கல்யாணம் பண்ணிடாதே. சத்தியம் செய் ' என்று சொன்னதாக சொல்வார்கள்.

சரோஜா தேவி என்ற புனை பெயரில் யாரோ ஒரு ஆள் ஆபாச கதைகள் எழுதி அந்த காலத்தில் "சரோஜா தேவி புத்தகம் " ரொம்ப பிரபலம் .சிறுவனாய் இருக்கும்போது நீதி போதனை வகுப்பில் 'வாடாமல்லி ' என்ற சரோஜாதேவி புத்தகம் படிக்கும் போது நீதி போதனை ஆசிரியரிடம் மாட்டிகொண்டேன்.

பின்னர் அதே ஆண்டு பள்ளியிறுதி ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழாவில் நான் ' நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ! நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே !' பாடலை ஆர்கெஸ்ட்ரா வில் பாடினேன்.
  வில்சன் சார் 'டே, நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே' பாட்டை பாட நம்ம ஸ்கூல்லே வேற பயலே இல்லையாடா? என்னடா இவன் பாடுறான். devil quoting the bible!' என்று விழா முடிந்தவுடன் கிண்டல் பண்ணினார்.


சரோஜா தேவி கொஞ்ச நாள் முன் முன்னாள் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா விஷயத்தில் ஏன் பயங்கரமாக மூட் அவுட் ஆகி அழுது அழுது கண்ணீர் வற்றி சிரமப்படவேண்டியிருந்தது.
கிருஷ்ணாவின் இதயம் நிறைந்த இங்கித நினைவுகளில் சரோஜாதேவி!
  எவ்வளவோ வதந்திகள் நடிகைகள் பற்றி வரத்தான் செய்யும். இவர் அதைப்பற்றி ரொம்ப வேதனை பட்டிருக்க தேவையில்லை.

சாவித்திரியை மயிரிழையில் மிஞ்சி விட்டவர் சரோஜாதேவி. இவருக்கு கிடைத்த சான்ஸ் அப்படி.

எம் ஜி ஆர் கூட நடித்தவர்களில் எல்லோரையும் விட பொருத்தமாய் அமைந்த நடிகை சரோஜா தேவி மட்டுமே. நாடோடி மன்னன் துவங்கி அரசகட்டளை வரை.

சிவாஜியின் மணியான அத்தனை படங்களிலும் 'பாக பிரிவினை ' துவங்கி ஆலயமணி ,புதிய பறவை என்று எத்தனை படங்கள்.

ஜெமினி கணேசன் படங்கள் 'கல்யாண பரிசு ' முதல் ' பணமா பாசமா ' வரை.ஜெமினியை 'அண்ணா' என அழைப்பார் சரோஜா தேவி.

இப்படி Platform சரோஜா தேவி தவிர பிற நடிகைகளுக்கு கிடைக்கவில்லை. அதனால் ஏனைய நடிகைகளின் பொறாமைக்கும் உள்ளானவர்.
 சாவித்திரி பல சிக்கல்களை தன் வாழ்வில் சந்தித்து சிரமத்திற்கு உள்ளாகி தன் முடிவுகள் பலவற்றினால் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்தி கொண்டதால் அவரை சரோஜா தேவி ஓவர் டேக் செய்தார்.

சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா மூவரும் தமிழ் திரையின் குறிப்பிடத்தக்க சாதனையாளர்கள். நடனம் அவ்வளவாக தெரியாவிட்டாலும் தங்கள் நளினமான பாவனைகளால்,நடிப்பால் பத்மினியையே மிரட்டியவர்கள்.

பத்மினியின் நடிப்பில்மிகை, செயற்கை தனம் இருந்தது.

அறுபதுகளை தமிழ் திரையுலகில் முழுமையாக ஆக்கிரமித்தவர் சரோஜா தேவி. அதற்கு பின்னர் இவர் அளவுக்கு வேறு யாருக்கும், எந்த நடிகைக்கும் மேடை கிடைத்ததில்லை.
அபிநய சரஸ்வதி, கன்னடத்து கிளி.

இவருக்காக ஐம்பதுகளில் திரைப்பட சான்ஸ் தேடிய பத்மா சுப்ரமணியத்துக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். சில முயற்சிகள் சீரிய முயற்சிகள் என காலம் காட்டுகிறது !

....................

Oct 6, 2009நடிகை விஜயகுமாரி

நடிகை விஜயகுமாரி பேட்டி சமீபத்தில் கலைஞர் டி வி யில் பார்க்க நேர்ந்தது . இளமை இவரிடம் எப்படி இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
அவர் காலத்து சரோஜா தேவியை விட இப்போது ரொம்ப அழகாக தெரிகிறார்.
 கே ஆர் விஜயா தொப்பையும் ,தோற்பையுமாக கழன்று போய்விட்டார்.
பின்னால் வந்த ஜூனியர் நடிகை 'கலர்' காஞ்சனா இப்போது முழுக்கிழவி. ராஜஸ்ரீ யும் உருக்குலைந்து போன நிலை.
இவ்வளவு ஏன் இவர் கதாநாயகியாய் நடித்த ஜீவனாம்சம் படத்தில் அறிமுகமான லக்ஷிமியை இப்போது கமலின் ' உன்னைப்போல் ஒருவன் ' படத்தில் காண சகிக்கவில்லை.
 இன்று கடந்த சிலவருடங்களுக்கு முன் வந்த நடிகைகளே எத்தனை பேர்
குண்டி, கை,நெஞ்சி,மூஞ்சி சுருங்கி வத்திப்போய் அல்லது ஊதிப்பெருத்து யாளி போல விகாரமாக தோற்றமளிக்கிறார்கள்.

ஆனால் விஜய குமாரி அப்படியே இளமையுடன் இருக்கிறார்!

'எங்க வீட்டுக்காரர் ' என்று எஸ்.எஸ். ஆர் பற்றி இன்னமும் குறிப்பிடுவது சோகம் தான். அவர் எப்போதோ முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டு தாமரை செல்வி என்ற பெண்ணை மணந்து பிள்ளை குட்டி என்று ஒதுங்கி விட்டார். அல்லது விஜயகுமாரி ஒதுங்கிகொண்டதால் மூன்றாவது திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார் என்று கூட சொல்லலாம்.
 இலட்சிய நடிகருடன் வாழ்வு கசந்து பிணக்கு ஏற்பட்டதை, பின்னால் பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அவருடைய தலைவர் சி.என். அண்ணாத்துரையிடம் நேரில் தான் விளக்கியதைப்பற்றி அந்த காலத்தில் ஒரு பேட்டியில் நடிகை விஜய குமாரி கூறியிருந்தார்.

விஜயகுமாரி மகன் ரவி நடிகர் விஜயகுமார் மூத்த மகளை (மஞ்சுளா மகள் அல்ல)திருமணம் செய்து விவாகரத்து செய்து விட்டார்.

நிம்மதி இல்லை என்று நடிகைகள் எப்போதும் சொல்வதை டி வி பேட்டியில் விஜயகுமாரி அடிக்கடி சொன்னார் .'தலையில் குத்து ,முதுகில் குத்து , நெஞ்சில் ஏகப்பட்ட குத்து 'என்று அதை அப்படி தன் கையால் குத்தி செய்து காட்டினார்.
பிரச்னைகள் !The intray is never finished. யாருக்குமே தான் உயிர் உள்ளவரை!

சினிமாவில் செயற்கைத்தனம், நாடகத்தனம் விஜயகுமாரியிடம் உண்டு. இயல்பாக துருதுருப்பு,படபடப்பு அதிகம் உள்ளவர் என்பதால் கொஞ்சம் மிகை நடிப்பு. பத்மினி கூட கொஞ்சம் மிகையாகத்தான் நடிப்பார்.

பூம்புகார் படம் பற்றியும் கண்ணகி சிலைக்கு மாடல் தான் தான் என்பதிலும் விஜயகுமாரிக்கு மிகுந்த பெருமிதம்.


இவர் பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர்.
ஸ்ரீதர் " கல்யாண பரிசு ".
கே .எஸ் . கோபாலகிருஷ்ணன் முதல் படம் " சாரதா " விஜயகுமாரி படங்களில் மாஸ்டர் பீஸ்!

பி . மாதவன் முதல் படம் " மணியோசை " யில் விஜயகுமாரி தான் கதாநாயகி .

ஆரூர் தாஸ் இயக்கிய முதல் படம் "பெண் என்றால் பெண் " படத்திலும் நடித்துள்ளார்.

அன்று பேட்டி கொடுக்கும்போது அவர் நினைவில் வர மறுத்த படம் "ஜீவனாம்சம் ". மல்லியம் ராஜகோபால் இயக்கிய முதல் படம் . அதிலும் இவர் கதாநாயகி.

இன்னொன்று இவர் நடித்த கதாப்பாத்திரங்கள் பெயர் அப்போது படங்களின் பெயராக வைக்கப்பட்டிருக்கிறது.

சாரதா,
சாந்தி,
ஆனந்தி,
பவானி
போன்ற படங்கள்.

கற்பகமும் இவருக்கு வந்தது தான். ஆனால் எஸ் எஸ் ஆர் தனக்கு கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே கற்பகமாக விஜயகுமாரி நடிக்க அனுமதி தரமுடியும் என்று பிடிவாதம் பிடித்ததால் கே.ஆர். விஜயா என்ற நடிகை கற்பகமாக தமிழ் திரையில் அறிமுகமானார் !
கே எஸ் ஜி " இந்த விஜயா இல்லாவிட்டால் இன்னொரு விஜயா " என்று சவால் விட்டு கே ஆர் விஜயாவை நடிக்க வைத்தார்.

எம்.ஜி.ஆருக்கு காஞ்சித்தலைவன் படத்தில் தங்கையாக நடித்திருக்கிறார்.
விஜயகுமாரியுடன்  ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்த போது எம்.ஜி.ஆர் மறுத்தார். அவர் சொன்ன காரணம் “ விஜயகுமாரி என் தம்பியின் மனைவி. அதனால் ஜோடியாக நான் நடிக்கக்கூடாது.”


இலட்சிய நடிகை என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள விஜயகுமாரி கொடுத்த விலை இப்படி மிக அதிகம்.


சாவித்திரி, சரோஜாதேவி, பத்மினிபோன்றவர்கள் பிறமொழியில் இருந்து தமிழுக்கு வந்து அளப்பரிய சாதனை புரிந்தார்கள். அவர்களிடையே தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை விஜயகுமாரி ஓரளவு சாதனை புரிந்தவர்.


மனோரமா எப்போதும் தமிழக முன்னாள் இந்நாள் முதல்வர்களுடனான தன்னுடைய rapport பற்றி பெரிதாக சொல்லிக்கொள்வார்.
ஆனால் விஜயகுமாரி தான் இப்படி பெருமைப்பட்டுக்கொள்ளும் முதல் தகுதி கொண்டவர்! வி. என்.ஜானகி யின் கிச்சன் கேபினட் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். எஸ்.எஸ்.ஆர் அவர்களின் அப்போதைய அரசியல்,சினிமா அந்தஸ்து காரணமாக அண்ணாத்துரை, கருணாநிதி, ஜெயலலிதா அனைவரும் இவர் வாழ்வில் முக்கியமானவர்கள்.

பல வருடங்களுக்கு முன் மணியனின் 'இதயம் பேசுகிறது ' வாரப் பத்திரிகையில் இவர் தன் வாழ்க்கை தொடரை பரபரப்பாக எழுதினார் . அப்போது அவர் நெஞ்சில்,தலையில்,முதுகில் விழுந்த குத்துகள் பற்றி நிறைய குறிப்பிட்டார். பகீரங்கமாக.
அவற்றில் ஒன்று : எஸ் . எஸ் .ஆர் எடுத்த மணிமகுடம் திரைப்படம் பற்றியது . வெளிப்புற படப்பிடிப்புக்கு கொடைக்கானல் சென்ற
எஸ். எஸ்.ஆர். இவரை அந்தப்படத்தில் நடித்த போதும் சென்னையில் ஒதுக்கி விட்டு விட்டு அந்த படத்தில் நடித்த மற்றொரு நடிகையுடன் சென்றார் என்கிற விஷயம்.2 comments:

 1. வாழையடி வாழை' படத்தில் டூயட் பாட்டு " ஹல்லோ ! ஸ்வீட்டி அல்லோ !"

  மதுரை தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் சிரித்து விடுவார்கள்.
  "டே ..என்னடா பாடுறே " என்று கத்துவார்கள்.

  அன்பு ராஜநாயகம் சார்
  வாழையடி வாழை திரை படத்தில்
  'ஹலோ ஸ்வீட்டி ஹலோ ' பாடலை சீர்காழி பாடுவதாக குறிப்பிட்டு இருந்தீர்கள் .மேலும் ரசிகர்கள் கிண்டல் செய்ததாக அருமையாக எழுதி இருந்தீர்கள் . உங்கள் எழுது நடைக்கு நான் ஒரு ரசிகன் . இருந்தபோதிலும் இந்த 'ஹலோ ஸ்வீட்டி ஹலோ ' பாடலை சீர்காழி பாடினாரா என்று ஒரு சிறு சந்தேகம் . வாழையடி வாழை திரைப்பட டைட்டில் கார்ட் இல் கீழ்கண்டவாறு போட்டு இருந்தார்கள்

  படத்தின் டைட்டில் கார்டு இல்

  சீர்காழி கோவிந்தராஜன்
  s .v கிருஷ்ணமுர்த்தி
  L .R .ஈஸ்வரி குழுவினர்
  M R விஜயா

  என்று உள்ளது

  நீங்கள் சொன்ன 'அங்கமெல்லாம் தங்கமோ ' பாடல் சீர்காழி குரல் தனியாக தெரிகிறது . சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளவே இந்த கேள்வி .தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம்
  என்றும் அன்புடன்

  கிருஷ்

  ReplyDelete
 2. மிகை நடிப்பு என்பதுதான் அப்போதெல்லாம் விதியாக இருந்தது. எனவே பத்மினி, விஜயகுமாரி நடிப்பை இதன் காரணமா குறைத்து மதிப்பிடமுடியாது.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.