’சதி லீலாவதி’(1936) எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன்
எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா,
கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ’சதிலீலாவதி’ தான்.
ஆரியமாலா(1941), ஜகதலபிரதாபன்(1944) போன்ற படங்களில் கதாநாயகன் பி.யூ.சின்னப்பா. ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.
மீரா படத்தில் பாலையாவுடன் வரும் தாடி வைத்த இளைஞர் எம்.ஜி.ஆர்.
மீரா படத்தில் நடித்த கதாநாயகி எம்.எஸ்.சுப்புலட்சுமி,ரொம்ப சின்ன ரோல் செய்த எம்.ஜி.ஆர் இருவரும் பின்னால் பாரத ரத்னாவானார்கள்!
எம்.ஜி.ஆர் ஒரு நல்ல ரோல் கிடைத்து கல்கத்தாவுக்கு சூட்டிங் போன போது,பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட ரோல் பாலையாவுக்கு போய்விட்டது. எம்.ஜி.ஆருக்கு ஒரு சின்ன ரோல். அப்போது அவமானம், வேதனையால் துடித்த எம்.ஜி.ஆர் ”நான் ஏன் பிறந்தேன்” சுயசரிதையில்” அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாக செய்திருக்கமுடியாது” என்று எழுதினார்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் விரக்தியில் சாமியாராகப் போய் விட்டார். மாடர்ன் தியேட்டர் டி.ஆர்.சுந்தரம் ‘யார்டா அந்த சாமியார். பாலையா மாதிரி தெரியுதே” என்று ’கண்டு’ அவரை ’பிடித்து’ மீண்டும் திரைக்கு கொண்டு வந்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சித்ரா’ படத்தில் பாலையா கதாநாயகனாக நடித்தார்.ஒரு மலையாளப்படம் ’ப்ரசன்ன’. லலிதா பத்மினியும் நடித்த அந்த மலையாளப் படத்திலும் பாலையா கதாநாயகனாக நடித்தார்.
வேலைக்காரி (1949)படத்தில் பாலையா செய்த பகுத்தறிவாளன் ரோல் தான் பின்னால் எம்.ஜி.ஆர்,சிவாஜி.எஸ்.எஸ்.ஆர் செய்த திராவிட பகுத்தறிவு பாத்திரங்களுக்கு முன்னோடி என்று அசோகமித்திரன் சொல்வார்.
இதில் விசித்திரம் என்னவென்றால் பாலையா ஒரு பழுத்த காங்கிரஸ்வாதி!
1956ல் பாலையா மாமன் மகள் படத்தில் ஜெமினி,சாவித்திரி,சந்திரபாபு, டி.எஸ்.துரைராஜ் ஆகியோருடன் நடித்தார்.
அதே வருடம் மதுரை வீரன் படம்
எம்.ஜி.ஆருக்கு வில்லனாக. ஆக்ரோசமாக கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “ அடடா இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
”அரசே! நாங்கள் ”பின் தொடர்ந்து” போனோம்.ஆனால் அவர்கள் ”முன் தொடர்ந்து”போய்விட்டார்கள்!” என்பார்.
’புதுமைப்பித்தன்’ (1957 )படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். பாலையா குண்டாக கொழுகொழு என்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது.
புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித ’மான’ சாமான்களும் விற்கப்படும் “ என்று பிரித்து வாசிப்பார்.
பதிபக்தி(1958) படத்தில் சந்திரபாபுவை பார்த்து “யார்ரா இவன் குரங்குப்பய.ஒரு இடத்தில நிக்கமாட்டேங்கிறானே!” என்பார்.
குணச்சித்திர நடிப்பில் ரங்காராவ் போல உச்சத்தை தொட்டவர். பாகப்பிரிவினை(1959) படத்தில் பாகப்பிரிவினை செய்யும் செய்யும் காட்சியில் பாலையா,வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி.சுப்பையாவிடம் ஃப்ரேம் செய்யப்பட்ட தாய் தந்தையர் போட்டோவைக்காட்டி பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாவமன்னிப்பு (1961)படத்தில் அவருடைய சிறிய கதாபாத்திரம்.
பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை(1964) படத்தில் அடிக்கும் லூட்டி.
நகைச்சுவை யின் அதிகபட்ச சாதனை
என்ன தான் முடிவு(1965) படத்தில் “ பாவி என்னை மறுபடியும் பிறக்கவைக்காதே,செய்த பாவம் தீரும் முன்னே இறக்கவைக்காதே.” பாடல் காட்சியில் அவருடைய confession.
'திருவிளையாடலில்’(1965) வித்துவ செருக்கை அழகாக காட்டி நடித்த “ ஒரு நாள் போதுமா? நான் பாட இன்றொரு நாள் போதுமா “ என்ற பாடல் காட்சியும் ”என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?” என்று எள்ளி,ஏளனமாக அவர் பேசிய வசனமும் “ பாட்டும் நானே, பாவமும் நானே” பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும். கர்வம்,எகத்தாளம்,மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் கண்ட விசேச பரிமாணம்.
பெற்றால் தான் பிள்ளையா?(1966)படத்தில் ஏட்டு வேடத்தில் அவர் டயலாக்
“ ஆத்திரி குடுக்கை!”
பாமா விஜயம் (1967) ”வரவு எட்டணா, செலவு பத்தனா அதிகம் ரெண்டனா, கடைசியில் துந்தனா’
ஊட்டி வரை உறவு மீண்டும் ’ஸ்ரீதர்- நாகேஷ்-பாலையா’ காம்பினேசன்.
தில்லானா மோகனாம்பாள் 1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். அட்டகாசமான நடிப்பு.
’தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன்.அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான்.பித்த உடம்பா.....தூக்கிடுச்சி!’
அடிமைப்பெண் படத்தில் செங்கோடன் வில்லன் பாத்திரத்தை பாலையா செய்ய ஆசைப்பட்டார். அந்த ரோலை எம்.ஜி.ஆர் தரவில்லை. அசோகன் காட்டுக் கூப்பாடு போட்டு நடித்தார். ஒரு வேளை பாலையா செங்கோடன் ரோலை செய்திருந்தால் அடிமைப் பெண் படம் இன்னும் கௌரவப்பட்டிருக்கும்.
பாலையா காமராஜரின் பக்தர். அவரோடு ஒரு முறை உட்கார்ந்து விருதுநகர் சீனிவாசன் மது அருந்திய போது குடி போதையில் “நான் காமராஜரை தோற்கடித்த சீனிவாசன்” என்று சொன்னபோது “என்ன சொன்ன. இன்னொரு தடவ சொல்லு” என்று பாலையா சொல்ல,மீண்டும் “நான் காமராஜரை தோற்கடித்த சீனிவாசன்” என்று அவர் சொல்ல மீண்டும் மீண்டும் பாலையா
“என்ன சொன்ன. இன்னொரு தடவ சொல்லு” என விடாது கேட்டுக்கொண்டே இருக்க,சீனிவாசன் மிரண்டுபோனாராம்.
தெருவில் யாராவது தன் வீட்டு முன் இரண்டு,மூன்று முறை நடப்பதைப் பார்த்தாலே” துப்பாக்கிய எடுறா” என்று பாலையா ஆவேசமாகிவிடுவாராம்.
பாலையா “ எம்.ஜி.ஆரின் பித்தலாட்டங்கள்” என்று ஒருசிறு நூல் எழுதினார்.
அந்த நூல் படிக்க கிடைக்குமா என்று ஜூனியர் பாலையா (ரகு) விடம் ராசுக்குட்டி சூட்டிங் போது விசாரித்தேன். அவர் பதில்“ என்னிடம் இல்லை. அதன் பிரதி ஒன்று மு.கருணாநிதியிடம் இருக்கிறது.அவரிடம் எப்படி கேட்க முடியும்?”
ஜுனியர் பாலையா சபரிமலை பக்தர். அப்போதும் மாலை போட்டிருந்தார். ஐயப்பன் மகிமை பற்றி பரவசமாக பேசினார். இப்போது ‘அல்லேலூயா’ கிறிஸ்தவராக மாறி பிரச்சாரம் செய்கிறாராம்.
நடிகர் பாலையா திருநெல்வேலி சைவப்பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவர்.அவர் சினிமாவில் நடித்ததில் அவர் குடும்பத்தாருக்கு உடன்பாடு கிடையாதாம்.அவருடைய அக்கா ஒருவர்1992லும் உயிரோடு இருந்தார்.ரகு ஊருக்குபோனால் அத்தை கோபத்தோடு‘கூத்தாடிப்பய மகன்’ என்று திட்டுவாராம்.முகத்தை திருப்பிக்கொள்வாராம்.
பாலையாவிற்கு நிறைய பிள்ளைகள்.
ரகு தவிர பாலையாவின் மூத்த மகன் சாய்பாபா திரையில் நாகேஷுக்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.
’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு,கல்யாணம் பண்ணிக்கொள்ள நேரம் வந்தாச்சு’
’வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்,என்நிலைதனை கெடுத்தவள் மாலதி இந்நாளில்,அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ,இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ’ ஆகிய பாடல்கள் சாய்பாபா பாடியவை தான்.
நடிகை சந்திரகாந்தா வின் உடன் பிறந்த சகோதரர் “வயசாயிடுச்சில்ல அக்கா” சண்முகசுந்தரம். இந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான் கங்கை அமரனின் மனைவி. பாலையாவின் ஒரு துணைவி கூட சந்திரகாந்தாவின் சகோதரி தான். பாலையாவின் மகள் மனோசித்ரா ரகுவரனுக்கு ஜோடியாக ‘ஒரு ஓடை நதியாகிறது’படத்தில் நடித்தார்.
1972ல் பாலையா மறைந்த போது அவருக்கு வயது 58 தான்.ரெங்காராவ் போல இவரும் முதுமையைப் பார்க்காமலே தான் மறைந்தார்.
ஜெமினிகணேசன் இறந்த போது காலச்சுவடு பத்திரிக்கையில் எழுதிய இரங்கலில் நான் கீழ்வருமாறு சொன்னேன்.
“தமிழ்த் திரையில் உக்கிரமான நடிப்பு ஆகிருதிகளாக சிவாஜி கணேசன், எம். ஆர்.ராதா, நாகேஷ் இவர்களைக் குறிப்பிடலாம்.
மென்மையான நேர் எதிர்த் திசையில் சாதித்தவர்கள்
ஜெமினி கணேசன்,எஸ்.வி.ரங்காராவ்,டி.எஸ்.பாலையா ஆகியவர்கள்.”
...................
http://rprajanayahem.blogspot.in/2008/10/carnal-thoughts-9.html
http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html
http://rprajanayahem.blogspot.in/2009/02/blog-post_11.html
பாலையாவின் பையன் இப்போது கிறித்துவராக மதம் மாறிவிட்டார் இல்லையா...
ReplyDeleteபாலைய்யா பற்றிய என் இடுகை.
ReplyDeletehttp://kuttipisasu.blogspot.com/2007/12/blog-post_27.html
பாலையாவின் இயல்பான நடிப்பாற்றல் - நகைச்சுவை கலந்த மேனரிசம் என்று பலவும் இந்தக் காலப் பசங்களுக்குத் தெரியாமல் போகிறது. பாவம்.
ReplyDeleteAntha kaalathil migayane nadippe pothuvaga parka mudiyum. atharku karanangal sollapattathu, avargal medai nadagathil nadithu pazhagiyathal nadippil konjam migai irukkum yenru. anal nadipathe theriyamal antha kathapathiramagave mari nammai avargalin kavanathai eerthavargal miga chilare. athil Rangayya-vum Balaihah-vum muthal idam. arputhamana kalaingargal. ini athupol kalaignanigal kidaika perave mattom yenbathu unmai. MR Radha was the true and real sceen stealer.
ReplyDeleteNice article.
ReplyDeleteஉங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளன. நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நன்றி :-)
ReplyDeleteamas32
//பாலையாவின் பையன் இப்போது கிறித்துவராக மதம் மாறிவிட்டார் இல்லையா..//
ReplyDeleteசாட்டை என்ற புதிய படத்தில் தலைமையாசிரியராக நடிக்கிறார்.
http://tvrk.blogspot.com/2009/03/blog-post_11.html
ReplyDelete