Share

Sep 10, 2012

பிரமிள்


மைலாப்பூர் கற்பகம் லாட்ஜ். மாடியில் ஒரு டீலக்ஸ் ஃபேமிலி ரூம்.நான்,என் மனைவி,மகன் கீர்த்தி மூவரும் இருக்கிறோம் சின்னவன் அஷ்வத் அப்போது பிறந்திருக்கவில்லை. வருடம் 1989.மார்ச் மாதம் 27ம்தேதி.
காலிங்பெல் சத்தம்.கதவு தட்டப்படுகிறது. கதவைத்திறக்கிறேன். பிரமிள் நிற்கிறார்.கூடவே கைலாஷ் சிவன் பிரமிளின் அடியாராய். பின்னாலேயே ஜெயந்தன்.’வாங்க வாங்க’ என வரவேற்கிறேன்.

பிரமிளையும் ஜெயந்தனையும் தனித்தனியாக சந்திப்பது தான் என் திட்டம்.

உள்ளே வந்த ஜெயந்தனையும் பிரமிளையும் உட்காரச்சொல்கிறேன். இருவரும் உட்கார்வதற்கு முன் கைலாஷ் சிவன் சந்தோஷமாக ஒரு சேரில் உட்கார்கிறான்.  என்றாலும் பிரமிள் இருப்பதால் ரொம்ப பவ்யம்,ரொம்ப,ரொம்ப அடக்கம்.எனக்கு பிரமிளும் ஜெயந்தனும் ஒன்றாக வந்திருக்க முடியுமா? என்ற குழப்பம். குழப்பம் உடனே முடிவுக்கு வந்தது. ”சார் யார்?” பிரமிளைப் பற்றி ஜெயந்தன் கேட்டார். ஓ! அப்படியானால் இருவரும் ஒரே நேரத்தில் கதவைத்திறந்தவுடன் நின்று கொண்டிருந்தது மிக தற்செயல் தான்.
நான் ஜெயந்தனிடம் பிரமிளை அறிமுகப் படுத்தினேன். “ இவர் தர்மு சிவராம்!”

 ”அடடே. ராஜநாயஹம். பிரமிளா? நான் அந்த காலத்தில் மதுரை காலேஜ் ஹவுஸில் தங்கியிருந்த வெங்கட்சாமிநாதனையும் இவரையும் சந்தித்திருக்கிறேன். எவ்வளவு காலம் ஆகிவிட்டது!” என்கிறார் ஜெயந்தன்.

நான் பிரமிளிடம் “இவர் எழுத்தாளர் ஜெயந்தன்!” என்று சொல்கிறேன். பிரமிள் எரிச்சலாகி,சலிப்புடன் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டார்.ஜெயந்தனை சந்திப்பதை பிரமிள் விரும்பவில்லை.கைலாஷ் சிவன் பிரமிளின் மனமறிந்து ஜெயந்தனை மேலும் கீழும் பார்த்தான். உடனே எனக்கு ஒரு பதற்றம்.ஜெயந்தனுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்தும் வேதனை.
நான் சூழ்நிலையின் இறுக்கத்தை குறைக்க கேமராவை எடுத்தேன்.

பிரமிளை ஃபோகஸ் செய்தேன். பிரமிள் “ என்னை போட்டோ எடுக்கக்கூடாது.” என்று ஆவேசமாக விரல் நீட்டி எச்சரித்தார். ஜெயந்தனை ஃபோகஸ் செய்தேன். அவர் அவமானத்தை மறைத்துக்கொண்டு சந்தோஷமாக உட்கார்ந்தவாறே ‘எடுங்கள்’ என்றார்.
நான் வெயிட்டரை உள்ளே அழைத்தேன். “மூன்று பாஸந்தி, மூன்று ஸ்பெஷல் தோசை,சாப்பிட்ட பின் டிகிரி காஃபி கொண்டுவா.” என்றேன்.
ஸ்வீட்,டிபன் காபி சாப்பிட்ட பின் பிரமிள் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.
ஜெயந்தன் இயல்பாக சொன்னார்.” இலக்கிய சிந்தனை அமைப்பில்  சிறந்த சிறுகதை தேர்ந்தெடுக்க அழைக்கப் பட்டிருந்தேன். நான் பிரமிளின் ‘லங்காபுரி ராஜா’வை அந்த ஆண்டிற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அங்கே மற்றவர்கள் இந்துமதி கதையை சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தார்கள். நான் என் எதிர்ப்பைத் தெரிவித்து வெளியேறிவிட்டேன். அதன் பின் இலக்கியசிந்தனை பக்கமே திரும்பிக்கூட பார்க்கவில்லை”
பிரமிள் இப்போது நட்புடன் சிரித்து ஜெயந்தனைப் பார்த்தார். கைலாஷ் சிவனும் குறிப்புணர்ந்து புன்னகை சிந்தினான்.
ஜெயந்தன் உட்கார்ந்திருக்க அவர் பின் பிரமிள் நின்று கொண்டு இருவரையும் புகைப்படம் எடுக்கச்சொன்னார். கைலாஷிடம் கேமராவை வாங்கி பிரமிள்,ஜெயந்தனோடு என்னை சேர்த்து புகைப்படம் எடுக்கசொல்லி உத்தரவிட்டார்.கைலாஷ் சிரமேற்கொண்டான்.


அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த கண்ணாடி முன் பிரமிள் நின்று கொண்டு, வித்தியாசமாக, புகைப்படம் எடுக்கும் நானும் கண்ணாடியில் தெரியுமாறு புகைப்படம் எடுக்கச் சொன்னார்.


அப்படி ஒரு விஷேச புகைப்படம் எடுத்தேன். என் மகன் கீர்த்தியை தூக்கிக்கொண்டு இரண்டு புகைப்படங்கள் என்னை எடுக்கச் சொன்னார்.


(பின்னால் இந்த புகைப்படத்தை ரொம்ப காலம் கோணங்கி தன் பர்ஸில் வைத்துக்கொண்டான். “இரண்டு குழந்தைகள்” என்று காட்டுவான்.)

அவருடைய லங்காபுரி ராஜா, ஆயி, சாது அப்பாத்துரையின் தியானதாரா,ஸ்ரீலங்காவின் தேசீயத்தற்கொலை போன்ற நூல்களில் கையெழுத்து போட்டார்.

தொடர்ந்து இலக்கிய உலகில் அவர் எதிர்கொண்ட துரோகங்கள் குறித்து பிரமிள் பேசினார்.மௌனி...லா.ச.ரா...சுந்தர ராமசாமி..வெங்கட்சாமிநாதன்..

“பாரதி தாசன் எப்போதும் பாரதியை ஐயர் என்றே குறிப்பிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்
‘ பாரதி ஒருத்தர் தான் ஐயர்! மத்தவன்லாம் பாப்பான்!’ ” பிரமிள் இதை சொல்லிவிட்டு ரசித்து ஹா..ஹா..என்று சிரித்தார்.

நான்கு வயது கீர்த்தி கதவை திறந்து திறந்து சாத்த ஆரம்பித்தான். கதவின் சத்தத்திற்கு பிரமிள் முகத்தில் இடி விழுந்த மாதிரி எக்ஸ்பிரஷன். பிரமிள் குழந்தையை தன்னிடம் வருமாறு அழைத்து “ இதனால் உனக்கு என்ன பிரயோஜனம்.ஏண்டா இப்படி செய்கிறாய்” என்றார். கீர்த்தி “போடா” சொன்னான்.
எனக்கு பயம். மதுரை சௌராஸ்டிரா காலேஜ் புரொபசர் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாய்ப் போயிருந்த பிரமிள் அவருடைய குழந்தை சேட்டை செய்த போது அடி வெளுத்து விட்டார்.
 இங்கே கீர்த்தியோ பிரமிள் பேசுவதைக் கேட்டு விட்டு அவரைப் பார்த்து விவரம்புரியாமல் சிரிக்கிறான். ’டேய்’ சொல்கிறான். கொஞ்ச நேரத்தில் கீர்த்தியும் பிரமிளும் ஜாலியாக விளையாட ஆரம்பித்தார்கள்.

(கீர்த்தியை சிட்டி மடியில் வைத்து கொஞ்சியிருக்கிறார்.அவர் இறப்பதற்கு முந்திய வருடம் கூட ஆசி வழங்கினார். கி.ரா. கீர்த்தியுடன் விளையாடியிருக்கிறார். அவன் சிரிப்பை விவரித்து, தனக்கு அவன் கைகொடுத்த அழகைப் பற்றி கடிதத்தில் கூட குறிப்பிட்டிருக்கிறார். இந்திரா பார்த்தசாரதி ஆசி வழங்கியிருக்கிறார்.)என் ’டேட் ஆஃப் பர்த். விசாரித்த பிரமிள் ரொம்ப சீரியஸாக என் பெயரை R.P.RAJANAYAHEM என்று 37 எண் வரும்படி மாற்றிக்கொள்ளச்சொன்னார்.
’நான் 21 தேதியில் பிறந்தவன். 37ல் மாற்றிக்கொள்ளச்சொல்கிறீர்களே.’

‘ஜே.கிருஷ்ணமூர்த்தி( J.Krishnamurti) 12 தேதியில் பிறந்தவர். கருணாநிதி( M.Karunanidhi) 3ம் தேதி பிறந்தவர்.இருவருக்கும் 37ல் தான் பெயர். அதனால் 21ல் பிறந்த உங்களுக்கும் 37 கைகொடுக்கும். 3 வரிசையில் பிறந்தவர்களுக்கு 37 அதிர்ஷ்ட எண்’ பிரமிள் ஆணித்தரமாக  சொன்னார்.
சம்பிரதாயமாக சொல்லவில்லை.கிளம்பும் வரை R.P.Rajanayahem என்று பெயர் மாற்றம் குறித்து வலியுறுத்தியவர் கடைசியாகக் கூட அதையே சொன்னார்.

அன்று முதல் நான் அவர் சொன்ன பெயரில் தான் இருக்கிறேன். பிரமிள் யாருக்குத்தான் பெயர் மாற்றி வைக்கவில்லை. ஆனால் அவர் சொன்னபடி பெயரைஅப்படியே மாற்றிக் கொண்டவர்கள் என்னைப் போல் எத்தனை பேர்?

அவர் கிளம்பியபின் ஜெயந்தன் கிளம்புமுன் பிரமிள் பற்றிச் சொன்னார். ’ இவர்களுக்கு மூளை ஒரு பக்கம் கூர்மையாகும்போது இன்னொரு பக்கம் பழுதாகிவிடும்.”

கொஞ்ச நேரத்தில் கைலாஷ் சிவன் மீண்டும் இரைத்துக்கொண்டு வந்தான்
.” ராஜநாயஹம்,பிரமிளை பஸ் ஏற்றி அனுப்பி விட்டேன். ஒரு விஷயம்.பிரமிள் மூன்று நாளாக எதுவும் சாப்பிட இல்லாமல் பட்டினி. ”
 எனக்கு கோபம். என்னிடம் இவன் அவர் இருக்கும்போதே தனியாக ரகசியமாக சொல்லியிருக்கவேண்டும்.நான் அவர் புத்தகங்கள் அனுப்பி வைக்கச் சொல்லியாவது கணிசமாக பணம் கொடுத்திருப்பேன்.இன்னும் அவரை நன்றாக சாப்பிடச்செய்திருப்பேன்.பண உதவி நேரடியாக செய்தால்
 ‘ நான் பிச்சைக்காரனா?’ என்று கோபப்பட்டுவிடக்கூடியவர்.

அதன் பின் அவருக்கு,ஜெயந்தனுக்கு அன்று எடுத்த புகைப்படங்கள் அனுப்பி வைத்தேன். பதில் கடிதத்தில் புகைப்படம் எடுத்த நானும் அவருடன்கண்ணாடியில் தெரியும்படி உள்ள படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்க முடியும் என்று அபிப்ராயம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறார்.
பாண்டிச்சேரியில் இருக்கும்போது அவர் ஒரு முறை தனக்கு டைப் ரைட்டர் வாங்க கொஞ்சம் பணம் அனுப்ப முடியுமா? என்று கடிதம் எழுதினார். ஒரு நல்ல தொகை அனுப்பினேன்.
பொங்கல் வாழ்த்து கூட அனுப்பியிருக்கிறார்.Write on your heart that every day is the best day of the year!

புதுவை பல்கலைக் கழக துணைவேந்தர் என் எதிர் வீட்டுக்காரர். அவரிடம் பிரமிளின் நூல்களைக் கொடுத்து, பிரமிளுக்கு ஏதேனும் கௌரவமாக உதவ முடியுமா என்று மிகவும் வேண்டிக்கேட்டேன்.மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்தினேன். அவர் சொன்னார்” கட்டாயம் நான் ஏதாவது செய்கிறேன். அவரை பல்கலைக் கழகத்தில் பயன்படுத்த முடியுமா என்று நீங்கள் சொன்னதிலிருந்து யோசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.”
க.நா.சுவையும் கிராவையும் வருகை தரு பேராசிரியராக ஆக்கியவர். இந்திரா பார்த்த சாரதியை நாடகத்துறை தலைவராக்கி, பின் துனணவேந்தருக்கு அடுத்த பதவியில் அமர்த்தியவர்.பிரபஞ்சனுக்கு நாடகத்துறையில் வேலை கொடுத்தவர்.
பிரமிளுக்கு நேரம் சரியில்லை என்று சொல்வது அபத்தம். யாருடைய உதவியையும் அபத்தமாக்கிவிடும் TROUBLE MAKER என்றே அவரைப் பற்றி வேண்டியவர்கள் கூட அபிப்ராயம் கொண்டிருக்கும் போது என்ன சொல்ல?
என்னையே அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று ரொம்பப்பெரியவர்கள் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர் மீது கொண்ட வெறுப்பு என்பதை விட என் மீது உள்ள அக்கறையினால்.

4 comments:

 1. எனக்கு Rajasundararajan என்று 37 வருகிற மாதிர்தான் பிரமிள் பெயரிட்டார். நான் 4-ஆம் தேதி பிறந்தவன். ஆனால் அவர் எனக்கு எண் கணிதமும் கற்றுத் தந்திருந்தார். அதன்படி, 4-கு 1 ஆக்கமுள்ள எண் ஆகையால் அவர் சொன்னவுடனே ஏற்றுக் கொண்டேன்.

  உங்களுக்கு நேர்ந்த சங்கடம் போலவே, கல்யாணியும் (வண்ணதாசன்) பிரமிளும் என் வீட்டில் சந்திக்க நேர்ந்து, பிரமிள் கல்யாணியோடு பாராமுகமாய் இருந்த சம்பவத்தை எனது "நாடோடித்தடம்" நூலில் எழுதி இருக்கிறேன்.

  ReplyDelete
 2. பிரமிளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றிய இவ்வளவு விரிவான தகவல்களை இப்போதுதான் அறிய முடிகிறது. அவர் பரவலாக வெகுஜனமாக அறிய முடியாததற்கு‍ அவருடைய முரட்டுக் குணமும் ஒரு‍ காரணமாக இருக்குமோ?
  பாபு
  கோவை

  ReplyDelete
 3. என்னே அனுபவங்கள்..

  - @NattAnu

  ReplyDelete
 4. என் தந்தைக்கு இப்படியோர் அவமானம் நடந்திருக்கிறது என்றறியும் போது கோபம் வருகிறது. தன்னை தானே நெறிப்படுத்திக்கொள்ள முடியாதவன் எப்படி எழுத்தாளனாக இருக்கமுடியும் !

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.