Share

Sep 12, 2012

அயதுல்லா

நல்ல இருட்டு. இரவு 7 மணி.
 நான் அறையில் நுழைந்து லைட்டைப் போட்டால் அங்கே விட்டத்தைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக்கிறான் அயதுல்லா.

“டே என்னடா பலத்த சிந்தனை.”

“எனக்கிருக்கிற வலிமைக்கும் வல்லமைக்கும் இருநூறு வருஷம் வாழ்ந்திடுவேனோன்னு எனக்கே சந்தேகமாயிருக்கு.

உதவி இயக்குனராக பெரிய கமர்சியல் டைரக்டரிடம் இருந்தான் அயதுல்லா.
கல்வியறிவு கிடையாது. குள்ளமானவன்.அயதுல்லாவை நடிகர் மஹாராஜா,ஸ்ரீகுமரன் போன்ற நடிகர்கள் எப்போதும் க்ளாப் பாய் என்றே கிண்டல் செய்வார்கள்.
கையில் எப்போதும் ஒரு குடை. பேண்ட் போடுவான்.ஆனால் உள்ளே ஜட்டி போடவே மாட்டான்.ரொம்ப அசௌகரியம் என்பான்.

அந்த பெரிய டைரக்டரிடம் இருக்கிற மற்ற அசிஸ்டண்ட், அசோசியேட் போன்றவர்களை கொடைக்கானல் ஷூட்டிங் போகிற போது எப்படியாவது பில்லர் ராக்கில் இருந்து உருட்டி தள்ளி விட்டு விட்டால் தன் எதிர்காலம் மிகுந்த பிரகாசமாகிவிடும் என்று சொல்வான்.

  சிவாஜிக்கு தம்பியாக நடிகன் மஹாராஜா நடித்த படத்தில் இவன் ஒர்க் செய்தான். அவனை பார்க்கும்போது அவனை போக விட்டு ”இருடி ஒன் சிங்காரத்த குலைக்கிறேன்”
என்று பொருமுவான்.
பெரிய ரௌடி போல என்று நினைத்து விடக்கூடாது.

”யாராவது என் சட்டைய ஏத்திப்பிடிச்சாங்கன்னு வை. ஐயா அவன் டேய்ன்னு கைய ஓங்கிட்டான்னு வை. நான் அவன் கால்ல விழுந்துருவேன்யா.மன்னிச்சிக்கய்யான்னு கால்ல விழுந்துருவேன்.ஆனா ஒன்னு அவன் தூங்கும்போது கல்லத் தூக்கி மண்டையில போட்டுருவேன்.”

சிவாஜி ஷூட்டிங் சமயத்தில் இவனை “ டேய், துளுக்கப்பயலே!” என்று அழைப்பார்.

அவன் கஞ்சா அடிக்க வாங்கி வைத்திருக்கும் சார்மினார் சிகரெட் அட்டைகளை தூக்கி எறியவே மாட்டான். எப்போதும் அதை பிரித்து அதற்குள் பல திரைக்கதைகள் எழுதி வைப்பான்.
”யோவ் இங்க பார்யா! “ அந்த சிகரெட் அட்டைகளை (ரப்பர் பேண்ட்போடப்பட்டு வைத்திருப்பான்) தூக்கி போடுவான். கதைகளை படிக்க தரவே மாட்டான். என்றாலும் சினிமாவாக எடுக்கப்போகிற அந்த கதைகளின் தலைப்புகள் சிகரெட் அட்டைகளிலிருந்து வாசித்துக் காட்டுவான்.

உயிரா? பாசமா?

மானமா? பணமா?

சாவா?வாழ்வா?

உறவா? பகையா?

அழகா? அறிவா?

குணமா? மனமா?

தங்கையா? தாயா?

அன்னையும் மனைவியும்

ஏழையின் வாழ்வில் நிம்மதி ஏது?

கணவனை இழந்த பூவும் பொட்டும் இல்லாத  கைம்பெண்

சொத்தை இழந்த நல்லவன்

எப்படியோ வாழப்பிறந்த  அப்பாவி விபச்சாரி

வாழ்ந்து கெட்ட வியாபாரியும் திடீர் பணக்காரனும்

கல்யாணம் பண்ணியும்  திருந்தாத ஸ்திரிலோலன்

குடிகாரன் வாழ்வு சீரழியும்

குடிகாரனால் தவிக்கும் குடும்பம்

இப்படி நூற்றுக்கணக்கான சார்மினார் சிகரெட் அட்டைகள்-தலைப்புகள் கதைகளுடன்.

“யோவ்! இன்னும் ரெண்டே வருஷம்.ஃபீல்டயே அயதுல்லா கலக்கப் போறான்.”
பக்கத்தில் நிற்கிற புரடக்சன் அசிஸ்டண்டாய் இருந்துவிட்டு படத்தயாரிப்பாளர் ஆக ஆசைப்பட்டுக்கொண்டிருக்கும் பி.சி.ஆர் ‘அயதுல்லா பாய்க்கு மூளை ரொம்ப ஜாஸ்தி’ என்று ரகசியம் சொல்லும் பாவனையில் தன் தலையின் பக்கவாட்டில் கை வைத்து சொல்வான். அயதுல்லா பேசும்போது இவன் முகத்தில் பரவசத்தை  பார்க்கவேண்டும்.

“எனக்கிருக்கிற வலிமைக்கும் வல்லமைக்கும் எரனூறு வருசம் வாழ்ந்திடுவேனோன்னு எனக்கே சந்தேகமாயிருக்கு.முதல் நூறு வருசம் தெரிஞ்ச ஆளுங்களோட. அடுத்த நூறு வருசத்த நினைச்சா கொஞ்சம் கவலையாயிருக்கு.ஏன்னா சொந்தபந்தம், தெரிஞ்வன்,ஆகாதவன் எல்லாம் மண்டையப் போட்டப்புறம் முற்றிலும் புதிய ஜனங்களோட வாழப்போறத நினைச்சா தான் கொஞ்சம் டென்சனாயிருக்கு... ஆனா ஒன்னுய்யா! இந்த நடிகன் மஹாராஜால்லாம் ஃபீல்டுல பெரிய ஆளானான்னு வச்சுக்க.. நான் மருந்த குடிச்சி செத்துருவேன்யா. ச்சீ அவன்லாம் ஒரு ஆளாய்யா.”

என் பெரியம்மா மகன்  என்னை பார்க்க வந்திருந்தார்.
அயதுல்லா பேச ஆரம்பித்தால் வாயிலிருந்து பூச்சிகளாக பறந்து வெளி வரும்.
லேசான முன் வழுக்கை கொண்ட என் பெரியம்மா மகனிடம் சொன்னான்.
” என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்காங்க.ஒங்களை மாதிரி தான் அவனும் அரை மண்டைப் பய”

அயதுல்லாவிடம் குடிப்பழக்கம் உண்டு.
இரவு சாப்பாட்டுக்குப் பிறகு கஞ்சா சிகரெட் குடித்துக்கொண்டே ஒரு சீப்பு வாழைப்பழம் சாப்பிடுவான். புது ட்ரெஸ் -ஜட்டி மைனஸ் போட்டுக்கொண்டு தான் படுப்பான். ஐந்து நிமிடத்திற்கொரு முறை எழுந்து ’ஒன்னுக்கு’ போவான்.
அப்புறம்  ஒரு மணி நேரம் கழித்து இரவு பூரா அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒன்னுக்குப்போவான்.

எவ்வளவு காசு கையில் இருந்தாலும் செலவழித்து விட்டு மாதத்தில் பல நாட்கள் பிறரை எதிர்பார்ப்பான்.பெரும்பாலும் அவன் ஊரில் இருந்து அவனைப் பார்க்க வருபவர்களிடம் இருந்து கறந்து விடுவான்.

அடையாறில்   ஒரு பத்து பேர் இவனை விரட்டிக்கொண்டு வருகிறார்கள். இவன் ஓடி வந்து நகர ஆரம்பித்து விட்ட ஒரு பஸ்சில் தொற்றியதை அந்த பஸ்சில் அவனுக்கு தெரிந்த ஒருவர் பார்த்து விட்டு வந்து என்னிடம் சொல்லி விட்டார்.

”டேய் அயதுல்லா! ஏன்யா அடையாறுல்ல என்ன பிரச்னை.”

“என்னப் பாத்ததுமே கூடி கூடி பேசினாங்கெ. திடீர்னு ஒருத்தன் ’ங்கோத்தா இவன் அடையாறு ஆலமரத்த வெட்டத்தாண்டா வந்துருக்கான்’னு என்னைப் பாத்து கத்துனான்.ஊரே திரண்டு வெரட்ட ஆரம்பிச்சிட்டாங்கே.”


விஜயகுமார் படம் இயக்கி படம் டப்பாவானதால் ஒய்ந்து போய், மஹாராஜாவை வைத்து தேங்காமூடி படம் எடுத்து  தவித்து தக்காளி வித்துக்கொண்டிருந்த ஒரு டைரக்டர் இவன் வாய் சவடால் பார்த்து விட்டு பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னார்: ”சொல்ல முடியாதுங்க. இவனையே மாதிரி தான் பாரதிராஜா இருந்தான். கிறுக்கன்னு தான் நினைச்சோம்.இப்ப அவன் எவ்வளவு பெரிய ஆளாயிட்டான்.பார்த்தீங்கள்ள.”

பின்னால் கதாநாயகனாக நல்ல ரவுண்டு வந்து இப்போது அரசியல்வாதியாகியுள்ள ஒரு நடிகன் அப்போது எனக்கு அறிமுகம்.நான் தங்கியிருந்த மேன்சனில் அவன் நடித்துக்கொண்டிருந்த படக்கம்பெனி ஆபிஸ் இருந்தது.அங்கு வரும்போது என்னைப் பார்க்க வருவான்.அப்போது பாரதிராஜா படங்களில் சின்ன,சின்ன ரோல் செய்துகொண்டிருந்தான்.

” கேபி! உன்னை பார்க்கறதுன்னா ஒரு நாள் முழுசா வேணும். சும்மா வந்து எட்டிப் பாத்துட்டு போகமுடியாது.” என்பான் என்னிடம்.

மந்தவெளி பஸ்சில் அவனை ஏற்றி விட எதிரே தி.நகர் பஸ் ஸ்டாண்ட் போனால் பேசிக்கொண்டே’ அடுத்த பஸ்ஸில் ஏறலாம்’ என்று பேச்சு சுவாரசியத்தில் கடைசி பஸ்ஸும் போய்விட்டது.

‘சரி. வா என் ரூமுக்கு போகலாம்.காலையில் வீட்டுக்கு போகலாம்’ அழைத்து வருகிறேன். என் ரூம்மேட் அயதுல்லா விசயமறிந்தவுடன் என்னை “ராஜநாயஹம், ஒரு நிமிசம்” என்று தனியாக கூப்பிட்டு “ யோவ், இவன் இன்னைக்கி இங்க தங்கறான்னா இப்பவே நான் ரூமை காலி பண்ணிக்கிறேன்யா.யோவ், என்னய்யா பிக்காலி பயலோடல்லாம் பழகுற. உனக்கு பிரதாப் போத்தன், பானுசந்தர், சுமன் இவனுங்களெ அறிமுகப்படுத்தறேன். அவனுங்களோட பழகுய்யா.டீசண்டான ஆளுங்கள பழகுறது தான்யா ஒனக்கு நல்லது” என்றான். நல்ல வேளை அந்த நேரத்தில் ஒரு நண்பர் பைக்கில் வந்தவுடன் அந்த நடிகன் “கேபி, நான் இவரோட மந்தவெளி போயிடறேன்” என்று கிளம்பிவிட்டான்.

ஒரு நாள் அயதுல்லா பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தான்.”இன்னைக்கு நேரம் சரியில்ல. அருணா லாட்ஜுக்கு தற்செயலா போயிருந்தேன்.அங்க ஒரு ரூம்ல நடிகன் ஸ்ரீகுமரன் இருந்தான்.  வா அயதுல்லான்னான்.இன்னும் மூனு பய. சரின்னு உக்காந்து பேசிக்கிட்டிருக்கேன். திடீர்னு ஸ்ரீகுமரன் ஒரு தேங்காய உடைச்சான். புதுப் பட பூஜைன்னான். அவனே தான் கதாநாயகன்.அவனே தான் டைரக்டர்னான். படத்துப்பேரு “தலையில துண்டு”. சரி. எல்லாருக்கும் கஷ்டம். இவன் கஷ்டம் வெளியில தெரியுது.ஆனா அவன் கஷ்டத்த திடீர்னு எனக்கு பகுந்து கொடுக்கிறானே.”


பின்னால் பத்து வருடம் கழித்து நான் புதுவையில் இருக்கும்போது நேரு வீதியில் நடைபாதையில் அயதுல்லாவை பார்த்தேன். அவன் கூட ஒரு ஆள்.
’டே! அயதுல்லா!’
என்னைப் பார்த்து விட்டு அவனோடு இருந்த ஆளிடம் சொல்லி விட்டு ஓடி வந்தான்.

’என்னய்யா இப்ப செய்யற!’

“யோவ்! அங்க நிக்கிறான் பாரு! அவன் தான்யா எனக்கு இப்ப பத்து நாளா முக்கியம். அவன் தயவுல தான் இன்னைக்கு இந்த ஊரில இருக்கேன். அவனோட தான் இன்னிக்கி மெட்ராஸ் போகனும்”

”மெட்ராஸ் ல வாழ்க்கை எப்படி ஓடுது?”

“ உனக்கு பி.சி.ஆர் ஞாபகமிருக்கில்ல. அவன் ஏங்கூட தான் இருக்கான். அப்புறம் முத்து லட்சுமியோட தம்பி ஒருத்தன் என் கண்ட்ரோல்ல தான் இப்ப இருக்கான். இவனுங்க ரெண்டு பேரையும் நல்ல விலைக்கு வித்துட்டேன்னு வச்சுக்க.அப்புறம் நான் தாய்யா மெட்ராசில ராஜா!“
எதிர் ப்ளாட்பாரத்தில் நின்ற ஆள் இவனை எரிச்சலோடு பார்ப்பதை அறிய முடிந்தது.

அவனை அவ்வப்போது பார்த்துக்கொண்டே பேசிய அயதுல்லா “யோவ்! ஒரு அம்பது ரூபா கொடு...... தேங்க்ஸ்.வர்ரேன்யா. இப்ப அவன் காணாம போயிட்டான்னு வச்சுக்க.எஸ்கேப் ஆயிட்டான்னு வச்சுக்க.அவ்வளவு தான். அப்புறம் அயதுல்லா பாவம் அனாதை தான்” என்று சொல்லி விட்டு ட்ராபிக் அதிகமாயுள்ள அந்த நேரு வீதியில்  எதிர் நடைபாதையை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
9 comments:

 1. உங்களை சந்திக்க விருப்பம்.

  ReplyDelete
 2. உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் ஜோதிஜி.

  ReplyDelete
 3. என்னுடைய மின் அஞ்சல் முகவரி

  texlords@gmail.com

  உங்க மின் அஞ்சல் கூட தெரிவதில்லையே?

  ReplyDelete
 4. எனக்கும்தான் சார்... ஜோதிஜி...நீங்க போகும்போது சொல்லுங்க ..நானும் வரேன்!!

  ReplyDelete
 5. ஜயா,

  சென்னையிலா இருக்கிறீர்கள்?

  ReplyDelete
 6. என்ன ஒரு நடை நேர்த்தி...

  ஜயா,

  சென்னையிலா இருக்கிறீர்கள்?

  ReplyDelete
 7. காவேரி கணேஷ்! நான் திருப்பூரில் இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. i like to meet you. pls send yr wish or call me on my mobile 98425 33709

   Delete
 8. இந்த மாதிரி அலப்பர கோஷ்ட்டிக நெறயாபேர் இருக்காங்யளே மதுரேல

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.