Share

Sep 20, 2012

ஜெயந்தன்


ஜெயந்தன்  எழுத்து பற்றி கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா பரவசமாகச் சொன்னார்:"வசமான கை!"

’சம்மதங்கள்’,‘அரும்புகளை’ போன்ற சிறுகதைத்தொகுப்புகள், ’பாவப்பட்ட ஜீவன்கள்’ நாவல்.’முறிவு’ என்று ஒரு குறு நாவல்.

ஜெயந்தனின்’நினைக்கப்படும்’ நாடகத்தில் குழந்தைக்கு பாலூட்டும் ஒரு பெண் சொல்வாள் : அப்பனும் மகனும் மொடாக்குடியனுக!


ஜெயந்தன் ’குணா’ என்று ஒரு சிறுகதை குமுதத்தில் எழுதினார். அதில் அசோகமித்திரனின் ‘உண்மை வேட்கை” சிறுகதைத் தொகுப்பை பற்றி எழுதியதை படித்து விட்டு அந்த புத்தகத்தை உடனே வாங்கி முதன் முதலாக நான் அசோகமித்திரனை படிக்க ஆரம்பித்தேன்.

இன்றைக்கு இருபத்து நாலு வருடங்களுக்கு முன்(14-12-1988) ஜெயந்தன் எனக்கு எழுதிய கடிதம் மீண்டும் வாசித்த போது வெகுநேரம் செயலோயச் செய்துவிட்டது.

மறைந்த ஜெயந்தனை நான் அந்தக்காலத்தில் சித்தப்பா என்று தான் அழைப்பேன். சொந்தக்காரரோ என்று நினைத்து விடவேண்டாம்.இன்று அப்படி ஒரு வாசகன் உறவு கொண்டாடமுடியுமா என்று தெரியவில்லை.

ஜெயந்தன் எப்படி ராஜநாயஹம் பற்றி மதிப்பிட்டார்: ’வாசீக கலாநிதி’ என்ற ஒரு பட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் உண்மையில் அதன் பொருள் தெரியாது. ஆனால் உங்களுக்கு ‘ வாசகக் கலாநிதி’ என்ற பட்டம் கொடுப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை.மனுஷன் இப்படியா படித்திருப்பீர்கள்! அவ்வளவு விபரம் கொண்டவராகக் கருதப்படாத என் முதலாளியம்மா கூட (உலக வழக்கில் இந்த முதலாளியம்மாவை என் மனைவியென்று சொல்வார்கள்.உங்கள் அருமை சித்தி தான்!) வியந்து போய்,”இவரென்ன இவ்வளவு படித்திருக்கிறார்,பேசாமல் பத்திரிக்கைகளுக்கு எழுதச்சொல்லுங்கள்,அல்லது புத்தகம் போடச்சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். நான் தான் ”வேண்டாம் வேண்டாம்,அது ஏற்கனவே குதிக்கிற சாமியாக இருக்கிறது, நாம் வேறு சாம்புராணி போட்டு விடவேண்டாம்.முதலில் வாழ்க்கையில் செட்டில் ஆகட்டும். அப்புறம் எழுதட்டும்.இவ்வளவு படிப்பும் சிந்தனையும் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் தன் உருக்கொள்ளாமல் எப்படிப் போகும்” என்று சொல்லி விட்டேன்.’

தன்னுடைய அந்தரங்கமான விஷயங்களைக்கூட என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
“மனசுக்கு புத்தியில்லை.
ஓடி ஓடிப்போகிறது
அவள் பின்னால்.
மூளை கூப்பிடக் கூப்பிட.
இழுத்து வந்து
செருப்பால் அடித்து
கட்டிப் போடுவதே இங்கு
தொழிலாய்ப் போச்சு”

’மேலே உள்ள கவிதை கூட  சமீபத்தில் என் சிறுகதை வகுப்புக்கு வந்த அம்மாள்-மாணவி ஒருவரின் உபயம் தான்.(வெட்கக்கேடு,வெளியே சொல்லி விடாதீர்கள்)’

அவர் அன்று எழுதினார்-” நமது ஒழுக்க நியதிகள் இயற்கையோடு ஒட்டியிருக்கவில்லை.எதிர்நீச்சல் போடப்பார்க்கின்றன. எதிர்நீச்சல் எந்தவகையிலும் புத்திசாலித்தனம் அல்ல.நமது எல்லா தோல்விகளுக்கும் துயரங்களுக்கும் இது தான் காரணம்.குறைந்த பட்சம் நாம் நமது ஒழுக்க நியதிகளை ‘இயற்கையை ஒட்டி’ என்கிற அளவுக்கு குறைத்துக்கொள்ளவேண்டும்.”


அப்போது அவர் எழுதிக்கொண்டிருந்த ‘மனுஷி’ நாவல் பற்றி எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட விஷயம்:
“Extra Marital relationship க்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன- காதலில் இருந்து-why not என்ற கேள்வி வரை. ஒரு சுவாரசியமான விஷயம். எனது அவ்வளவாக படிக்காத கதாநாயகி இந்த why not என்ற கேள்வியை எப்படிக் கேட்பாள்?
 அசோகமித்திரன் அவர்களோடு பேசும்போது சொன்னேன்:அவள் சொல்கிறாள்,”அதா...அதென்னா பெரிய விஷயம் கொழுந்தனாரே.”
அசோகமித்திரன் கொஞ்சம் வியந்து போன மாதிரி தான் இருந்தது.’அப்படியே சொல்றாளா?’என்றார். பின்பு ‘எழுதுங்கள்.இது ஒரு யுனிவர்ஸல் தீம் என்றார்.அதோடு ஒரு யோசனையும் சொன்னார்.’இனிமேல் இந்தக் கதையை யாரிடமும் சொல்லவேண்டாம்.ஏனென்றால் ஒரு கதையை இரண்டு மூன்று தடவை சொன்னீர்கள் என்றால் அவ்வளவு தான் கதையென்று உங்களுக்குள் தீர்மானமாகி விடும். இந்த நாவலில் நிறைய in roadsற்கு வழியிருக்கிறது.அவ்வளவையும் எழுதுங்கள் ‘ ”

அவர் ‘உட்கார்ந்து ‘ எழுதிய கவிதை ஒன்று பற்றி எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்-”அது நான்காயிரத்து நானூறு வரிகள் கொண்டது, ஒரு நவ காவியம். புதுக்கவிதையில் மிக நீண்ட படைப்பு இதுவே என்று நண்பர்கள் சொல்கிறார்கள்.எழுதி சரியாக மூன்று வருடமாகிறது. திலீப்குமார்,பரிக்‌ஷா ஞாநி,புவியரசு (புவியரசு முன்னுரை தந்திருக்கிறார்) எல்லாம் அதைப் பிரசுரம் செய்யலாம் என்று சொல்லியும் எனக்குள் ஏனோ தயக்கம்.இன்னும் அதை சரியாகச் செய்ய வேண்டுமோ என்று.ஆச்சு, 3 வருஷம் ஆகிவிட்டதால்,அதை எழுதும்போதிருந்த ஜெயந்தன் இப்போது இல்லாததால்,இப்போது என்னால் அதை மூன்றாவது மனிதன் படைப்பாக பார்க்க முடியும் என்பதால்...”

ஜெயந்தனுக்கு  பழனியில் கா.தங்கத்துரை என்று ஒரு தீவிர வாசகர் இருந்தார்.
அந்த நேரத்தில் தங்கத்துரை  என்னிடம் சொல்வார்.”அவருக்கு சாகித்ய அகாடமி விருது விரைவில் கிடைக்கும். அப்போது தான் ஜெயந்தனை நேரில் சந்திப்பேன்.”
http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_10.html

1 comment:

Note: Only a member of this blog may post a comment.