Share

Aug 24, 2012

பாலமுரளியின் திரை இசைப் பாடல்கள்


பின்னனிப் பாடகி பி.சுசிலா விழா. சிலமாதங்களுக்கு முன் நடந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
பாலமுரளி கிருஷ்ணா சுசிலாவுடன் இனணந்து “தங்கரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது நேரினிலே, மரகத தோரணம் அசைந்தாட, நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட பாட”
பாலமுரளி கிருஷ்ணா அனாயசமாக அதிக சிரமப்படாமல் பாடினார்.
”மாங்கனி கன்னத்தில் தேனூற
இருமைவிழி கிண்ணத்தில் மீனாட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் மேனி தள்ளாட ஆட
தங்கரதம் வந்தது வீதியிலே”

அதே சமயம் சுசிலாவும், சௌந்தர் ராஜனும் பி.பி.ஸ்ரீனிவாஸ் மூவரும் பாடியபோது முதுமை காரணமாக ரொம்ப சிரமப்பட்டு பாடினார்கள். அது ஒரு குறையாகத்தெரியவில்லை. குழந்தையின் மழலை போல யாழைவிட குழலைவிடவும் ரசிக்கத்தக்கதாய் நெகிழ்த்தியது.
சுசிலா,டி.எம்.எஸ் இருவரும் பாடிய ’ நான் மலரோடு தனியாக “ பாடலில் டி.எம்.எஸ் ”என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்” என்று தளர்ந்து போன நடுங்கும் குரலில், ஓடுவது போன்ற பாவனையுடன் பாடியது ரசிக்கத்தக்கதாக இருந்தது.

முதியவர் தான் என்றாலும் கூட பாலமுரளி மட்டும் இயல்பாக நன்றாக பாடினார்.

https://www.youtube.com/watch?v=8boZ15p_B2w

பாலமுரளி கிருஷ்ணா கர்நாடக சங்கீத பாடகர் என்பதால் தான் அந்த விசேசப்பயிற்சி அவரால் இந்த ’தங்கரதம் வந்தது’ஆபோகி ராகப்பாடலை இந்த வயதிலும் நன்றாக பாட முடிந்திருக்கிறது.ஸ்ரீதரின் ‘கலைக்கோயில்’ படத்தில் இடம்பெற்றப்பாடல்.

பாலமுரளி சினிமாவுக்காகப் பாடிய பாடல்களில் மிகப்பிரபலமான திருவிளையாடல் பட “ ஓரு நாள் போதுமா,இன்றொரு நாள் போதுமா” பாடல் காட்சியில் டி.எஸ்.பாலைய்யாவின் நடிப்பு  அந்தப் பாடல் மிகப் பிரபலமாக காரணம்.
’சாது மிரண்டால்’ படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரனுக்காக அவர் பாடிய பாடல்
“ அருள்வாயே நீ அருள்வாயே திருவாய் மலர்ந்து அருள்வாயே”

”சுபதினம்” என்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படத்தில் முத்துராமனுக்கும் புஷ்பலதாவுக்கும் ஒரு பாடல்.  ரொம்ப நல்ல டூயட் பாடல். பாலமுரளி -சுசிலா பாடியது.
”புத்தம்புது மேனி இசைத்தேனி தூங்கும் மலர் மஞ்சமோ”

”கண்மலர்’’ (கிருஷ்ணன்) பஞ்சு வின் தம்பி ’பட்டு’ இயக்கிய படம். ஜெமினி,சரோஜாதேவி,சௌகார் ஜானகி, நாகையா நடித்த படம். இந்தப் படத்தில் “ பாமாலை அவர் படிக்க பூமாலை நான் தொடுக்க வாழ் நாள் நடந்ததையா நடராஜா” என்ற எஸ்.ஜானகி பாடலுக்கு ஒரு தொகையறா பாலமுரளி பாடியிருந்தார் கேதார் கௌளை ராகத்தில். படத்தில் வி.நாகையா தொகையறாவுக்கு நடித்தார்.

”அம்பலத்து நடராஜா
உன் குணத்தை காட்டுதற்கு
என் குலத்தைத் தேர்ந்தெடுத்ததேனையா
உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டினிலே
கண் மறைக்கும் விளையாட்டு ஏனய்யா”

”கவிக்குயில்” படத்தில் ரீதிகௌளை ராகத்தில் பாலமுரளியின்
“ சின்னக்கண்ணன் அழைக்கிறான் ராதையை,பூங்கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடி சின்னக்கண்ணன்அழைக்கிறான்”

https://www.youtube.com/watch?v=LLpYjs0kkGg

கண்ணதாசன் மூன்றாம் திருமணம் செய்துகொண்டதைத்தொட்டு பின் எழுதிய பாடல் பாலமுரளி பாடியது. பாலசந்தரின் ‘நூல்வேலி’ படத்தில் இடம் பெற்றது. ஒரு நாள் வீட்டில் கண்ணதாசன் தன் பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலை மட்டும் மீண்டும்,மீண்டும் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டிருந்தாராம்.

“மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி
காரியம் தவறானால் கண்களில் நீராகி
மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
மனசாட்சியே”

சமீபத்தில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல்பாண்டியராஜின் ’பசங்க’ படத்தில்
”அன்பாலே அழகாகும் வீடு”

பாலமுரளி கிருஷ்ணாவின் திரைப்படபாடல்கள் தனியாக வெளியிடப்பட்டிருக்கிறதா?

3 comments:

  1. சிகரம் திரைப்படத்தில், S.P.B இசையில் பாலமுரளிகிருஷ்ணா ஒரு பாடல் பாடி இருப்பார். "பாஞ்சாலி கதறுகிறாள்.. பரந்தாமன் வரவில்லை.." என்று. அருமையான பாடல்.

    ReplyDelete
  2. சின்னக்கண்ணன் அழைக்கிறானை போன டிசம்பர் ராஜாசார் கச்சேரியில் பாடினார்,நடுக்கம் இருந்தது,ஆனால் நல்ல குரல் இன்னும்

    ReplyDelete
  3. --------------
    மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
    ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி
    காரியம் தவறானால் கண்களில் நீராகி
    மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
    மனசாட்சியே
    ---------------
    என்ன ஒரு அழகான பாடல் அவரின் தெய்வீகக் குரலில்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.