ப. திருமலை என்பவர் எழுதிய மதுரை அரசியல் நூலை சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.
நான் இன்னும் நூலைப் பார்க்கவில்லை.
இந்த புத்தகத்தில்
என்னுடைய மதுரை முன்னாள் மேயர் முத்து பற்றிய பிரபலமான பதிவில் இருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருப்பதாக முத்துராஜன் என்பவர் தகவல் தெரிவித்திருந்ததைப் பற்றி நான் சில நாட்களுக்கு முன் எழுதிய பதிவு இப்போது காணவில்லை. ஃபேஸ்புக்கில் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
நான் எழுதிய 'அரசியல் பிழைத்தோர்' நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.
2012 ம் ஆண்டு எழுதினேன். என் ப்ளாக்கிலும், ஃபேஸ்புக்கிலும் வெளிவந்த பதிவு.
..
என்னுடைய பதிவு கீழே :
இரும்புமனிதர் மதுரை எஸ்.முத்து
- R.P. ராஜநாயஹம்
திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர் என்றும் அண்ணாவின் முரட்டுப்பிள்ளை என்றும் அறியப்பட்டவர் மதுரை எஸ்.முத்து.
அண்ணாத்துரைக்கு எல்லோரும் தம்பிகள். ஆனால் மூன்று பேர் பிள்ளைகள்.
மதுரை முத்து முரட்டுப்பிள்ளை!
அன்பில் தர்மலிங்கம் செல்லப்பிள்ளை!
மன்னை நாராயணசாமி அழுகினிப்பிள்ளை!
மதுரைமுத்து உடம்பில் உள்ள பல தழும்புகளைப் பற்றி மேடையிலேயே குறிப்பிட்டு கட்சியை வளர்க்க அந்தக்காயங்கள் எப்படிப்பட்ட சூழலில்,எங்கே,எப்போது ஏற்பட்டவை என்பதைப்பற்றி விரிவாக பேசுவார்.பேச்சில் சவடால் இருக்கும்.நகைச்சுவை இயல்பாக இருந்ததற்கு காரணம் இவர் வட்டார வழக்கில் இயல்பாய் பேசியது தான்.
தனிப்பட்டமுறையில் அவர் பிரமுகர்கள்,கட்சிக்காரர்கள்,உறவினர்களுடன் பேசும்போது கூட சட்டையை கழட்டி உடம்பில்,முதுகில் அரிவாள் வெட்டு தழும்புகளைப் பார்க்க சொல்லி நிறைய விவரங்கள் சொல்வார்.
அரிவாளால் ஒருவன் தேனியில் தன் தலையை குறிவைத்து வெட்ட பாய்ந்த போது மதுரை முத்து தான் கையால் உடனே தடுத்து தன்னைக் காப்பாற்றியதாக எஸ்.எஸ்.ஆர் சொல்லியிருக்கிறார்.
திமுகவை விட்டு ஈ.வி.கே.சம்பத் பிரிந்தபோது மதுரையில் சண்டியர் முத்துவை எதிர்த்து தைரியமாக மாவீரன் பழ.நெடுமாறன் அரசியல் செய்ததைப் பற்றி கண்ணதாசன் வனவாசம் நூலில் எழுதியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் திமுகவை விட்டு நீக்கப்பட்ட பின் மதுரை திலகர் திடலில் விளக்கக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் க.அன்பழகன்,மதுரை முத்து, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜாங்கம் வாழ்வு அப்போது சில மணி நேரங்களில் முடிய இருந்தது. இந்தக்கூட்டம் முடிந்து திண்டுக்கல் ரோட்டில் காரில் போய்க்கொண்டிருந்த போது மாரடைப்பில் திடீர் மரணம் அடைந்தார்.அதோடு அவர் இறப்பின் காரணமாக நடந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் பிரமிக்கத்தக்க மிகப்பெரிய வெற்றியை அடைந்தார்.
ராஜாங்கம் தன் மரணத்தின் மூலமே எம்.ஜி.ஆரின் வெற்றி சரித்திரத்திற்கு பிள்ளையார் சுழி போடப்பட இருப்பதை அறியாமலே அன்று பேசிய பேச்சு “ நாம் இது வரை அசமந்தமாக இருந்து விட்டோம். இப்போது தான் கட்சியில் ஒரு விறுவிறுப்பு,சுறுசுறுப்பு ஏற்பட்டிருக்கிறது.
I Like this atmosphere very much. அன்று ப்ரூட்டஸ் சொன்னான். ‘We love Caesar. But we love our country more than Caesar.’ அதையே தான் நானும் சொல்கிறேன். எம்.ஜி.ஆரை விட திராவிடமுன்னேற்றக்கழகத்தை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். பல்ப் நல்லாத்தான் எரிஞ்சிச்சி. இப்ப ஃப்யூஸ் போயிடிச்சி.அதான் தூக்கியெறிஞ்சிட்டோம்.
எஸ்.எஸ்.ஆரை ப் பார்த்து ஷூட்டிங் போறீங்களா திமுக மீட்டிங் வாறீங்களா என்றால் ’நான் திமுக மீட்டிங்குக்கு வாறேன்’ என்று தான் சொல்வார். ஆனால் எம்.ஜி.ஆரைப் பார்த்து மீட்டிங் வாறீங்களா என்று கூப்பிட்டால் ‘நான் ஷுட்டிங் போறேன்’ என்று தான் எப்போதும் சொல்வார்.
எனதருமை நண்பன் எஸ்.எஸ்.ராஜேந்திரனை திரையுலகை விட்டு விரட்டியதே இந்த எம்.ஜி.ஆர் தான்.’’
கணக்கு கேட்ட எம்.ஜி.ஆர் மேல் மதுரை முத்துவுக்கு கடும்கோபம்.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப்பட இரண்டு முத்துக்கள் காரணம் என்றே பத்திரிக்கைகள் எழுதின. ஒருவர் மதுரை முத்து,இன்னொருவர் மு.க.முத்து.கருணாநிதி மகனுக்கு கட்சியில் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டது. கணக்கு கேட்கிறார் என்றதும் மதுரை முத்து எம்.ஜி.ஆருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிட்டார். குமுதம் எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் ஆனபோது ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அந்த கேலிச்சித்திரம் இப்படி- அண்ணா படத்தை எடுத்துக்கொண்டு வெளியேறும் எம்.ஜி.ஆரைப் பார்த்து கருணாநிதி சுவற்றிலிருக்கும் மதுரை முத்து படத்தைக் காட்டி சொல்வார்.”என்னை இந்த அண்ணா காப்பாற்றுவார்.”
எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்று செய்தி வந்த மாலைமுரசிலேயே மதுரை முத்து அறிக்கை “ என் உயிர் உள்ள வரை இனி நான் திமுக தான்” - For this relief much thanks என்று அர்த்தம்.
அந்த சூழ்நிலையில் மதுரையில் திமுகவின் முதல் கூட்டம்.
மதுரை முத்து.பேசியது “ டேய்! விசிலடிச்சான். உனக்கு ஒன்னு சொல்றேன். எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு கோழை. படத்தில தான் ஒன் ஆளு வீரன். நிஜ வாழ்க்கையில் பயங்கரமான கோழை.போன பொதுத்தேர்தல்ல தேனிக்கு பிரச்சாரம் கிளம்பற நேரத்தில எம்.ஜி.ஆருக்கு ஒரு மொட்டை கடிதாசி.’நீ தேனிக்கு வந்தீன்னா கொல செய்வேன்’ன்னு எவனோ எழுதியிருந்தான். அதைப் படித்து விட்டு பேயடிச்ச மாதிரி எம்.ஜி.ஆர் முகமே விளங்கல. நான் சரி வாங்க தேனிக்கு கிளம்புவோம்னேன். அதுக்கு என்ன சொன்னான் தெரியுமா? கிழட்டுப்பய சொல்றான்யா-”என் ஃப்யூச்சர் என்னாகுறது?’’( இதை சொல்லும்போது முத்து வளஞ்சு நெளிஞ்சு நிற்கிறார் ) மாட்டேன்னுட்டான்ய்யா! இவனை நம்பி நீ திமுகவ விட்டுப்போகாத. எம்.ஜி.ராமச்சந்திரன் ஒரு பயங்கரமான கோழை.
நான் டீக்கடை வச்சிருந்தேன்.இத கிண்டல் பண்ணுறானுங்க.அந்தக்காலத்தில மெஜுரா மில்லில வேல பார்த்தேன். கட்சியில தீவிரமாயிருந்தேன்னு வேலைய விட்டு டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கெ.அப்ப டீக்கடை தான் வச்சிருந்தேன். இல்லங்கல.அன்பழகன் கூட மதுரை வந்தா என் கடையில டீ சாப்பிட்டிருக்காரு.டேய் விசிலடிச்சான் குஞ்சு! ஒனக்கு ஒன்னு தெரியுமா? ஒன் எம்.ஜி.ஆரு கும்பகோணத்தில அவன் மாமன் கடையில க்ளாஸ் கழுவியிருக்கான் அது தெரியுமா ஒனக்கு? க்ளாஸ் கழுவியிருக்கான்டா! (க்ளாஸ் கழுவுவது போல ஆக்சன் செய்து காட்டுகிறார்)
என் கார் மேல கல்ல விட்டா எவனாயிருந்தாலும் ஒன் வீட்டுக்கு வந்து தூக்குவேண்டா.(அப்போதுஅப்படி கல்லெறிந்த ஒரு ஆளை இவரே காரிலிருந்து இறங்கி விரட்டிப்பிடித்தார்!)
டே ராமச்சந்திரா! கணக்காடா கேக்கற. கணக்கு கேக்கறியா? போய் ஜெயலலிதா கிட்ட கேளுடா கணக்கு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தப்ப நாங்க எல்லாம் ஜெயில்ல இருந்தப்ப இவன் ஜெயலலிதாவோட கோவா வில இருந்தான்யா. (அப்போது ஆயிரத்தில் ஒருவன் பட சூட்டிங்கில் எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார்.)
க.அன்பழகன் அன்று பேசியது “ என் பொண்டாட்டி கூட என்கிட்ட கணக்கு கேட்டதில்ல. என்ன கணக்கு? இனிமே வேட்டிய அவுத்துத் தான் காட்டனும்.”
“மதுரையில் ’புரட்டு’ நடிகர் கட்சியை அழித்தே தீருவேன்,ஒழித்தே தீருவேன்” என்று மதுரை முத்து வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டார்.
’எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றிய வாலிபன் படம் வெளி வந்தால் சேலை கட்டிக்கொள்கிறேன்’ என்று பகீரங்க சவால் விட்டார்.
உலகம் சுற்றும் வாலிபன் ரிலீசானபோது இந்த திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதருக்கு பல பார்சல்கள் வந்தன.அவ்வளவும் சேலைகள்!
திண்டுக்கல் இடைத்தேர்தலில் அண்ணாதிமுக அமோக வெற்றி பெற்ற போது கருணாநிதி “ மதுரை மாவட்ட திமுக தலைமை, வேட்பாளர் தேர்வில் தவறு செய்து விட்டது” என்றார். பொன்முத்து ராமலிங்கம் பிரமலை கள்ளர் வகுப்பைச் சேராதவர். வெற்றி பெற்ற அண்ணாதிமுக வேட்பாளர் மாயத்தேவர் பிரமலை கள்ளர். இது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் செல்வாக்குக்கு கிடைத்த வெற்றி என்பதை மறைக்க கருணாநிதி இப்படி சொன்னார்.
மதுரை முத்துவுக்கு இதன் பிறகு கருணாநிதியோடு பிணக்கு ஏற்பட்டுவிட்டது.
மதுரை முத்து சிவகங்கையில் எம்.ஜி.ஆரை சந்தித்து அண்ணா திமுகவில் சரணடைந்தார்.எம்.ஜி.ஆர் கட்டிப்பிடித்து அணைத்து முத்தண்ணனை வரவேற்றார்.
கருணாநிதியிடமிருந்து விலகி நெடுஞ்செழியன்,மாதவன்,க.ராஜாராம்,பண்ருட்டி ராமச்சந்திரன்,எஸ்.எஸ்.ராஜேந்திரன் என்று கடுமையாக எதிர்த்தவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார்கள்!
“நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரி இப்படி பலித்தது.
எம்.ஜி.ஆரை எந்த அளவு கடுமையாக சாடினாரோ அதை விடவும் கடுமையாக மதுரை முத்து அதன் பின் கருணாநிதியை சாடினார்.
முத்தண்ணன் அப்படி சாடிப்பேசும்போது எம்.ஜி.ஆர் சிரிப்பை அடக்க முடியாமல் தவிப்பார்.
தீப்பொறி ஆறுமுகம் மதுரைமுத்து பற்றி “ நான் மதுரை முத்துவை மதிக்கிறேன். அந்த ஆளு சண்டியரு.ஆனா சிகரெட் கிடையாது, குடிப்பழக்கம் கிடையாது,சீட்டு விளையாட்டு கிடையாது..பொம்பளை விசயத்திலயும் சுத்தமான ஆளு…ஆனா ஒன்னு…அடுத்தவன் பாக்கெட்டுல பணம் இருக்கறது தெரிஞ்சா எப்படியாவது லவட்டிடுவான்!”
மதுரை மாநகரின் முதல் மேயர். அதன் காரணமாக மதுரைக்கு திமுகவின் முதல் மேயர். மீண்டும் இரண்டாவதாக மேயராகவும் மதுரை முத்து தான் பதவியேற்றார். அதன் காரணமாக மதுரைக்கு அண்ணாதிமுகவின் முதல் மேயரும் இவரேயென்றானது.
ஆனால் அவரது கடைசி காலத்தில் அண்ணாதிமுகவிலும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.கட்சியில் புதிதாய் சேர்க்கப்பட்டு கொள்கை பரப்பு செயலாளராக எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட ஜெயலலிதா இவருக்கு show cause notice அனுப்பினார்.
இலங்கைப்பிரச்னையில் எம்.ஜி.ஆருடன் கருத்து வேறுபாடு.
பழ.நெடுமாறனோடு மேடையில் முத்து.
’இலங்கைத் தமிழர்களுக்கு உதவ தயங்கும் மத்திய மாநில அரசுகளை ஓடஒட விரட்டவேண்டும்’ என்று இந்திராகாந்தி,எம்.ஜி.ஆர் இருவரையும் மதுரைமுத்து கடுமையாக தாக்கியபோது மேலமாசி வீதியில் கரகோஷம் விண்ணைப்பிளந்தது.
இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சில நாட்களில் மதுரை முத்து மறைந்தார்.அப்போது எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் ப்ரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தார்.ராஜ வைத்தியம்!
கா.காளிமுத்து இரங்கல் அறிக்கையில் “ எம்.ஜி.ஆர் உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து வந்த பின் “முத்தண்ணன் எங்கே?” என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்?” என்று வருத்தப்பட்டிருந்தார்.
ஒரு விஷயம்.
என்னுடைய திருமணம் மதுரைமுத்து தலைமையில் தான் நடந்தது!
என்னுடைய திருமணம் மட்டுமல்ல.
அதற்கும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் என் மாமனார் திருமணமும் கூட இந்த திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர் தலைமையில் தான் நடந்தது!
https://m.facebook.com/story.php?story_fbid=3117359748477470&id=100006104256328
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.