Share

Mar 21, 2020

'சினிமா எனும் பூதம்' பற்றி சரவணன் மாணிக்கவாசகம்

சினிமா எனும் பூதம் - R P ராஜநாயஹம்:

ஆசிரியர் குறிப்பு:

R.P. ராஜநாயஹம் ஒரு எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், பாடகர், சங்கீதரசிகர், இயக்குனர், கூத்துப்பட்டறை ஆசிரியர், பெரும் வாசகர், அரசியல் உட்பட பலவிசயங்களை எழுதும் பத்தி எழுத்தாளர்,  சினிமா தகவல்களை (ஹாலிவுட், உலகப்படங்கள் உட்பட) மூளையில் சுரங்கம் போல் வைத்திருப்பவர், இத்தனைக்கும் மேல் சிறந்த மனிதர். தற்போது ஆதன் டிவியில் Old Wine என்ற தொடரில் பல விசயங்களைப் பகிர்ந்து வரும் இவரது முதல் முழுநூல் இது.

நான் பள்ளி இறுதி படிக்கையில் இவர் அறிமுகம். பிரித்தோ உயர்நிலைப்பள்ளி எதிரே, ஞானஒளிவுபுரத்தில், நண்பர்கள் கூடும் இடத்தில் மணிக்கணக்கில் நாற்பது பேர் உட்கார்ந்து கேட்க தொடர்ந்து பேசுவார். அவ்வளவு பேருக்கும், தேநீர் இவர் செலவில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். எதிரிருக்கும் நபரின் சிந்தனாசக்திக்கு ஏற்றவாறு, பேசும் விசயங்களின் கனபரிமாணம் மாறும். அதிகம் பேசாத எனக்கு இவரிடமும், சீருடை அணிந்து பள்ளிக்கு எதிரே நின்று புகைபிடிக்கும் மாணவன் மேல் இவருக்கும் பெரிதாக முதல் அபிப்ராயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் காலப்போக்கில் தமிழ் நவீன இலக்கியம் ஒரு அசைக்க முடியாத பிணைப்பை, எந்த அந்தரங்களையும் பகிரும் நட்பை ஏற்படுத்தக் காரணமாயிருந்தது.

முழுக்க முழுக்க சினிமா பற்றிய, கூகுளில் தேடி கண்டடைய முடியாத தகவல்கள் கொண்ட நூலிது. எதிரிருந்து பேசுவது போன்ற மொழிநடை இதன் சுவாரசியத்தைக் கூட்டும். பல பிம்பங்கள் உடைகின்றன. சில உண்மைகள் வெளி வருகின்றன. சினிமா எனும் பூதம் அடுத்து என்ன என்ன என்று கேட்கிறது.

முதல்பதிவே எம்.ஜி.ஆர். அலட்சிய சிரிப்புடன் கிராபிக் இல்லாத காலத்தில் இருகைகளிலும் வாளை அதிவேகமாக சுற்றிய எம்.ஜி.ஆர். எத்தனை தகவல்கள் இந்தக் கட்டுரையில்!  "எம்.ஜி. ஆர் சிரிப்பு பின்னால் சத்யராஜ் சிரித்துக் காட்டினார்" என்பது போன்ற தகவல்கள் இவரால் மட்டுமே சொல்ல முடியும்.

சிவாஜியை எவ்வளவு இரசித்திருக்க வேண்டும் என்பதைக் கூறும் கட்டுரை. தேசத்துரோகியாக அந்தநாளில்,  total negativeஆக திரும்பிப்பாரில் எவ்வளவு Negative characters? மகாநடிகன்.

"An angel's graceful performance" " the greatest actress ever born and ever to be born" என்பதை விட சாவித்திரியின் நடிப்பை எப்படி சொல்வது?

தமிழ் திரை கண்ட கதாநாயகிகள் மின்னிய தாரகைகள் குறித்த நல்லதொரு கட்டுரை.

ரஞ்சன், வாள்வீச்சு கவர்ச்சிகரம். நீலமலைத் திருடன் பார்த்திருக்கிறீர்களா?

என் ஆசையும் உன்நேசமும், பாட்டொன்று கேட்டேன் போன்ற சாகாவரம் பெற்ற பாடல்களைப் பாடிய ஜமுனாராணி பற்றிய கட்டுரை.

கழிவறையாய் நான் பார்த்த சமாதி தான் ஆதன் டிவி Old wineன் முதல் Episode.

அகிலஇந்திய கனவுக்கன்னியான ஹேமமாலினி, வெண்ணிற ஆடை படத்தில் புதுமுகமாக நிர்மலா பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டு பின் ஸ்ரீதரால் ரிஜெக்ட் செய்யப்பட்டார்.  இது சத்தியம் படத்தில் ஹேமமாலினி ஆடுவதை சந்திரகாந்தா ஆடுவதாக அசோகன் கற்பனை செய்வார். உச்சத்தைத் தொடுமுன் அவமானங்கள் தவிர்க்க இயலாதவை.

நாட்டியப்பேரொளி பற்றிய அழகான கட்டுரை.

நீரும் மாறும் நிலமும் மாறும் அறிவோம் கண்ணா, மாறும் உலகில் மாறா இளமை அடைவோம் கண்ணா- தேவிகா என்றொரு தேவதை.

நகுலன் கவிதை, அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், தி.ஜா எழுத்து, Baudelaire போன்றவர்களின் Quotes, லா ச ராவின் பாற்கடல் என்று இலக்கியமும் நடுநடுவே இவரை விட்டு விலகாமல் வருகின்றது. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் கிளியோபாட்ரா சீசரை நினைத்து சொல்கிறாள் "When I was green in judgment, cold in blood.." அதை ஸ்ரீதேவியின் மரணத்துடன் கொண்டு வந்து பொருத்துவது இவரால் மட்டுமே முடியும். இதைப்போல் சூழ்நிலைக்கேற்ற Shakespeare quotes எத்தனையோ இவரிடம் கேட்டிருக்கிறேன். இவரது திறமையில் கால்வாசி கூட இல்லாதவர்கள் கண்முன்னே உச்சத்தை எட்டியிருக்கிறார்கள்.

"Such as we are made of, such we be."

பிரதிக்கு:

Zero degree publication 98400 65000& amazon. In
முதல் பதிப்பு ஜனவரி 2020
விலை ரூ 375
#தமிழ்கட்டுரைநூல்கள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.