Share

Mar 17, 2020

ஜீ. நாகராஜன்



நாங்கள் பார்க்க முடியாமல் போன,
இறந்து போன மனிதரை பற்றிய
 எங்கள் தேடல் அன்று ...

G .நாகராஜன் மதுரை திண்டுக்கல் ரோட்டில் மேலமாசி வீதியை ஒட்டி குடியிருந்த பல வீடுகள் கொண்ட ஒட்டுகுடித்தன வீட்டுக்கு
 நானும் சரவணன் மாணிக்கவாசகமும் போயிருந்தோம்.

அப்போது G .நாகராஜன் மறைந்து ஒரு வருடம் இருக்கும்.

கொஞ்சம் தெரியாத மாதிரி ' இங்கே G.நாகராஜன்னு ஒரு புரபஸர் இருக்கிறாரல்லவா.’
அங்கிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

ஒரு வயதான பிராமண பாட்டி உடனே சொளவை கீழே வைத்து விட்டு உடனே எங்களை கூர்ந்து பார்த்தார். எழுந்து வந்தார்.

'யார் நீங்க ?'

'அவரோட மாணவர்கள் '.(' சும்மா..Harmless lie )

'பாடமெல்லாம் நன்னா நடத்துவான். இறந்துட்டானே. தெரியாதோ?'

'அப்படியா பாட்டி? '

'வருஷம் ஆறது.. 'ம்ம் .. பாப்பார கள்ளன்.. துஷ்டன்.. '

எனக்கு ' மனுஷன் மகத்தான சல்லிபயல் ' என்று G.நாகராஜன் சொன்னது ஞாபகம் வந்தது.

பாட்டி ' இனி பேசி என்ன ... '

அப்புறம் மீனாக்ஷி நிலையம் செல்லப்பன் ' இந்த கடைக்குள்ள கால் வைக்க கூடாது இனிமே ' என்று கடுமையாக G.நாகராஜனை எச்சரித்ததை பற்றி எங்களிடம் சொன்னார்.

தெற்கு மாசி வீதி 'விழிகள் ' அலுவலகம் சென்றோம். அங்கே இப்போது சினிமாவில் நடிக்கும் நாடக  மு. ராமசாமி இல்லை. அவர் தான் 'விழிகள் ' ஆசிரியர்.

அங்கேயிருந்த கூத்து ராமசாமி அவரை பற்றி சொன்னார். எல்லாம் இப்ப சுந்தர ராமசாமி 'நினைவோடை'யில் எழுதியுள்ள மாதிரி சமாச்சாரங்கள்.

 நெல்லை S.வேலாயுதம் அவர்களை சந்திக்க சொன்னார்.

எழுத்தாளர் டைலர் கர்ணனை பார்க்க சொன்னார். கர்ணனை தேடினோம்.பார்க்க முடியவில்லை.

வேலாயுதம் சோம சுந்தரம் காலனியில் இருந்தார். அப்போது படிக்க கிடைக்காத "நாளை மற்றுமொரு நாளே " நாவல் அவர் தான் படிக்க கொடுத்தார்.

நண்பர்கள், மனைவி, அப்போது ஒரிசாவில் இருந்த சகோதரன் எல்லோரும் அவரை மறுதலித்த துயர கதைகளை சொன்னார்.

நெல்லை வேலாயுதம் மகன் தன் மூலமாக புத்தகங்களை நாகராஜன் இவருக்கு தெரியாமலே புத்திசாலிதனமாக கடத்திய கதை சொன்னார்.

சரவணன் மாணிக்கவாசகம் இறுக்கமானவர்.உணர்வுகளை, அதிர்ச்சியை வெளிக்காட்ட மாட்டார். நான் தான் நிலையிழந்து புலம்பி தீர்த்தேன்.

மதுரை டவுன் ஹால் ரோடு. ஒரு பேராசிரியர்  'விழிகள் ' மு.ராமசாமியுடன் பேசிகொண்டிருக்கிறார். ஒரு அழுக்கான நலிந்த மனிதர் ' ராமசாமி ' என்று இவரை அருகில் வந்து விளிக்கிறார்.
ராமசாமி அவரை உடனே கண்ட படி திட்ட ஆரம்பிக்கிறார். உடனே அவர் அங்கிருந்து அகன்று நடக்க ஆரம்பிக்கிறார்.
இந்த பேராசிரியர் சிவக்கண்ணன்
 'அவர் யாருங்க?' வினவுகிறார்.
'G.நாகராஜன் '
சிவக்கண்ணன் பதறி விடுகிறார். 'என்ன சொல்றீங்க .... நாகராஜனா ... அவரையா இப்படி திட்டினீர்கள்? அவரா இப்படி பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறார்? '

இந்த நாடக ராமசாமி, இப்போது சினிமா நடிகர் ராமசாமி ( பல ராமசாமிகள். இவரை விழிகள் ராமசாமி என்ற பெயரால் அப்போது அறிந்திருந்தோம். புதுவையில் எதிர்வு நிகழ்வில் நான் சந்தித்திருக்கிறேன் )

இவர் தான் நாகராஜனின் கடைசி காலத்தில் அவரை கவனித்து போஷித்தவர். அவருடைய கடைசி கிரியைகளுக்கும் செலவு செய்தவர் என்று ’கூத்து’ ராமசாமி சொன்னார். நெல்லை எஸ்.வேலாயுதமும் அப்படித்தான் சொன்னார்.

கி.ரா சொன்ன ஒரு விஷயம் . ' G.நாகராஜன் குளிக்க மாட்டார். ஆனால் அவர் மேல் துர்நாற்றம் வீசி நான் பார்த்ததேயில்லே.'

எல்லோரோரையும் சித்திரவதை செய்த நாகராஜன் ஒருவரிடம் வாலாட்டினதில்லை. ஜெய காந்தன். அவரிடம் காசு கூட கேட்க மாட்டாராம். Trouble Makerஎன்று பிரபலமானவர் எந்த தொந்தரவும் இவரிடம் செய்ததில்லை.

சந்தேக கேசில் பிடிபட்டு தப்பிக்க முயன்று அனுபவித்த வியாகுலத்தை
'ஓடிய கால்கள் ' என்ற சிறுகதையாக நாக ராஜன் எழுதினார்.
மறுதலிப்பு, Rejection.
மனித வாழ்வின் மகத்தான துயரம்.

ஒரு நாவல், ஒரு குறுநாவல்,ஒரு சிறுகதை தொகுப்பு.
இவை மூன்றுமே இலக்கிய அந்தஸ்து பெற்றுவிட்டன எனும் போது நாகராஜனின் சாதனை மலைக்க வைக்கிறது. அவருடைய கட்டுரைகளும் தான்.

காலச்சுவடில் கதையொன்று  சு.ரா எழுதியிருந்தார். தலைப்பு
 ” நண்பர் ஜி.எம்”

மதுரை காலேஜ் ஹவுஸ் லாட்ஜில் இரண்டு குழந்தைகளை அறையில் பூட்டி வைத்து விட்டு பெற்றோர் வெளியே போயிருப்பார்கள். டவுன் ஹால் ரோட்டில் யானை வருகிறது. காலேஜ் ஹவுஸில் இருப்பவர்கள் கூட யானையைப் பார்க்கச்செல்கிறார்கள். குழந்தைகள் யானையைப்பார்க்க வேண்டும் என்று வாய் விட்டு அழுகின்றனர். காலேஜ் ஹவுஸில் தங்கியிருக்கும் கதை சொல்லியை பார்க்க வரும் ’ஒருவர்’ அந்த அறையின் கதவை உடைத்து குழந்தைகளை விடுதலை செய்து யானையைப் பார்க்க அனுப்புகிறார்.

சுந்தர ராமசாமியிடம் நான் சொன்னேன் “ கதவை உடைத்து குழந்தைகளை யானையைப்பார்க்க அனுப்புபவர் ஜி. நாகராஜன் தானே?”
நான் சொன்னது சரி தான் என்றார் சு.ரா.

அசோகமித்திரனின் “விரல்” கதையில் கதவிடுக்கில் சிக்கிய விரல்   நசுங்கிப் போகிற குடிகாரர் கூட
ஜி. நாகராஜன்.

திலீப் குமாரின் “ ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும் “ கதையில் வருகிற அழுக்குச் சட்டைக்காரர் ஜி. நாகராஜன்.

கோணங்கி கூட நாகராஜன் பற்றி ஒரு கதை எழுதினான். அந்த சிறுகதை தலைப்பு 'மதுரைக்கு வந்த ஒப்பணைக்காரன்'.
கோணங்கியின் இன்னொரு கதை
' சபிக்கப்பட்ட அணில் '.
இதிலும் ஜீ. நாகராஜன் காணக்கிடைப்பார்.


"தீவிரமான தேடலில் அந்நியமாகிப்போன வாழ்வுக்கு முன்னுதாரணமாக
காலத்திற்கு முன்னே பிறந்து
காலத்திற்கு முன்னே செத்து போவான்
சிரஞ்சீவி கலைஞன் ஜி.நாகராஜன் "
- விக்கிரமாதித்தன்

...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.