Share

Mar 8, 2020

கி. ரா கேட்ட பொஸ்தகம்

இருபது வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்த என்னிடம் கி. ரா ஒரு உதவி வேண்டினார்.

'வியத்தகு எண்ணெய் மருத்துவம் '
என்று ஒரு நூல் அவருக்கு தேவையாம்.

திருச்சி காஜா மலை பக்கம் ஏதோ ஒரு வீட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. எப்படியாவது தேடிப் பிடித்து இரண்டு பிரதியை வாங்கி அனுப்பும் படி கேட்டு எழுதியிருந்தார்.

 லெப்டினன்ட் கர்னல் தும்மல கோட்டேஷ்வர ராவ் எழுதிய தெலுங்கு புத்தகத்தை
ராயப்பேட்டை கோ.கிருஷ்ண மூர்த்தி தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது.

மலைக்கோட்டை பக்கம் எத்தனை புத்தக கடை.
அவற்றில் விற்பனைக்கு கொடுத்து தொலைத்திருக்கலாமே. மெயின் கார்ட் கேட் பகுதியில் எதற்கும் தேடிப்பார்க்க முயன்றேன். ம்ஹூம் கிடைக்கவில்லை.

காஜாமலை போன பின் பஸ்சில் இருந்து இறங்கி ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ரோட்டில் ரொம்ப தூரம் நடக்க வேண்டியிருந்தது.

என்னவோ ஏழு கடல், ஏழு மலை தாண்டின்ற அலுப்பு. நீண்ட தூரத்திற்கு ஒரு ஆளே பார்க்க முடியாமல், விசாரிக்க ஒரு கடை கூட காண கிடைக்காமல்.

'மதுரக்கி வழி வாயில'ன்னு சொல்றது திருச்சிக்கு செல்லுபடியாகாது போல.

ஒரு வழியா அந்த வீட்ட கண்டுபிடிச்சி
மூணு பொஸ்தகம் விலைக்கு வாங்கி
 ஒன்ன என் அப்பாவுக்கு குடுத்துட்டு
ரண்ட கி. ராஜநாராயணனுக்கு
ரிஜிஸ்டர் போஸ்ட்டில் அனுப்பி வைத்தேன்.

காலயில பல்ல விளக்கிட்டு காலக்கடனெ முடிச்ச பெறகு, சாப்பிடுறதுக்கு முன்ன ரெண்டு தேக்கரண்டி நல்லெண்ண, இல்ல கடலெண்ண, இல்லாட்டி ரீஃபைண்ட் சூரிய காந்தி எண்ணய வாயில விட்டு பதினஞ்சி, இருவது நிமிஷம் கொப்பளிச்சு துப்பிடனும். வாய நல்லா கழுவிடனும்.

ஒரு நாள்ள மூணு தடவ கூட கொப்பளிக்கலாம். ஆனா வெறும் வயித்துல தான்.

இது தான் 'வியத்தகு எண்ணெய் மருத்துவம்'.

ஆமா, இன்ன நோயின்னு இல்ல, எல்லா வியாதிக்கும் இந்த ஒரே மருத்துவ முறையாம்.

கி. ரா அப்புறம் ரொம்ப நன்றி சொன்னார்.

இந்த எண்ண கொப்பளிக்கிற வைத்திய
சிகிச்சைய செய்ய ஆரம்பிச்சாச்சுன்னு உற்சாகமாக சொன்னார்.

இந்தா பாருங்க இப்ப அவருக்கு
தொண்ணூத்து ஏழு வயசாகுது.

ஏதோ கி. ரா. வோட இந்த பூர்ண ஆயுசுக்கு நானுந்தான் காரணமோ?

....

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.