Share

Jan 15, 2021

என் பெயர் R.P. ராஜநாயஹம்

 என் பெயர் R. P. ராஜநாயஹம் 


 பொதுவாக, அப்பா பெயர் பீட்டர், பீர் முகமது, பீதாம்பரம் என்றிருந்தால் ஆங்கிலத்தில் இனிசியல்

 இருப்பது தான் நல்லது. 


தனித்தமிழ் வாதிகளுக்கு 

 இதெல்லாம் புரியாது. 


அப்பா பெயர் பீதாம்பரம் என்று பிடிவாதமாக பீ.வாசு என்று எழுத வேண்டுமா? தமிழில் பி.வாசு என்று எழுதினால் அப்பா பெயர் பிரபாகரா, பிச்சைமுத்துவா,பிள்ளையாரா? 


ஆங்கில இனிசியல் P என்பதை 

எதற்காக ’பி’ என்று ஏன் எழுத வேண்டும்.


 இங்கிலீஷ்ல இனிசியல் போடுகிற சுதந்திரம் பிறப்புரிமை.


ஒரு தனித்தமிழ் வெறியன் ‘ இங்கிலீஷ்ல இனிசியல் போடுறவனெல்லாம் இங்கிலீஷ்காரனுக்கு பொறந்தவனுங்க’ என்று அபத்தமாக ’மைக்’ல கூப்பாடு போட்டான்.


என் பெயரை என் விருப்பப் படி R.P.ராஜநாயஹம் என போட மறுத்து இனிசியலை தமிழில் தான் போடமுடியும் என்று ’தி இந்து’ தமிழ் செய்தித்தாள் பிடிவாதம் பிடித்தது.  நான் எழுதிய கட்டுரைகளில்

 என் பெயர் ஆர்.பி.ராஜநாயஹம் என்று தான்  பிரசுரிக்கப்பட்டது.


குமுதம் வாரப்பத்திரிக்கை  என் பெயரை என் விருப்பப்படி என் கட்டுரைகளில் ’R.P.ராஜநாயஹம்’ என அச்சிட்டிருந்தது.


ஆனந்த விகடன் 'அடடா, R. P. ராஜநாயஹம் என்று போட வேண்டும் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் அப்படி பிரசுரித்திருப்போமே' என்று சொன்னார்கள். 


கோவை ஞானி பலவருடங்களுக்கு முன்

 இந்திரா பார்த்தசாரதியின் ‘ கிருஷ்ணா, கிருஷ்ணா’ நாவலுக்கு ஒரு விமர்சனம் கேட்டார். நான் ‘லீலார்த்தம்’ தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன்.


கோவை ஞானி ’ராஜநாயஹம் என உங்கள் பெயரை பிரசுரிக்க மாட்டேன். ராஜநாயகம் தான். ’ஹ’ போட மாட்டேன்..’ 


 நான் ‘ ராஜநாயஹம் என்று என்னை சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், பிரமிள் ஆகியோர் கூட குறிப்பிட்டிருக்கிறார்களே’


கோவை ஞானி ‘ அவங்க எல்லாம் மனுசங்க தானா? எனக்கு சந்தேகமாயிருக்கு.

 நான் ராஜநாயகம்னு தான் அச்சிடுவேன்.’


 நான்  ‘ நீங்க என் லீலார்த்தத்தை பிரசுரிக்க வேண்டாம். கிழிச்சிப்போட்டுடுங்க’


பிறகு எம்.ஜி.சுரேஷின் பன்முகம் பத்திரிக்கையில்                           R.P. ராஜநாயஹம் ’லீலார்த்தம்’ பிரசுரமானது.

(என் ’டேட் ஆஃப் பர்த். விசாரித்த பிரமிள் ரொம்ப சீரியஸாக என் பெயரை R.P.RAJANAYAHEM என்று 37 எண் வரும்படி மாற்றிக்கொள்ளச்சொன்னார்.
’நான் 21 தேதியில் பிறந்தவன். 37ல் மாற்றிக்கொள்ளச்சொல்கிறீர்களே.’

‘ஜே.கிருஷ்ணமூர்த்தி( J.Krishnamurti) 12 தேதியில் பிறந்தவர். கருணாநிதி( M.Karunanidhi) 3ம் தேதி பிறந்தவர்.இருவருக்கும் 37ல் தான் பெயர். அதனால் 21ல் பிறந்த உங்களுக்கும் 37 கைகொடுக்கும். 3 வரிசையில் பிறந்தவர்களுக்கு 37 அதிர்ஷ்ட எண்’ பிரமிள் ஆணித்தரமாக  சொன்னார்.
சம்பிரதாயமாக சொல்லவில்லை.கிளம்பும் வரை R.P.Rajanayahem என்று பெயர் மாற்றம் குறித்து வலியுறுத்தியவர் கடைசியாகக் கூட அதையே சொன்னார்.

அன்று முதல் நான் அவர் சொன்ன பெயரில் தான் இருக்கிறேன். பிரமிள் யாருக்குத்தான் பெயர் மாற்றி வைக்கவில்லை. ஆனால் அவர் சொன்னபடி பெயரைஅப்படியே மாற்றிக் கொண்டவர்கள் என்னைப் போல் எத்தனை பேர்?) 


'தமிழ்ல ஹ, ஸ,  ஷ, ஜ என்ற எழுத்தெல்லாம் கிடையாது என்றால் நம்ம ரெண்டு கன்னத்திலேயும் நாமே 

அடித்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. 

இருக்கிற சிறகைப் பிய்த்து விட்டு 

தனித்தமிழ் சிறகு ஒட்ட வைப்பது அபத்தம்.'

என்று தி. ஜானகிராமன் சொல்வார். 

(தி. ஜானகிராமன் இறந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு புதுவை பல்கலைக் கழகத்தில் அவர் குறித்த கருத்தரங்கத்தில் அவர் பெயரை தி. சானகிராமன் என்று அச்சில் எழுதினார்கள்.) 

 

என் பெயரை தயவுசெய்து 

என்னுடைய விருப்பப்படி 

R. P. ராஜநாயஹம் என்று எழுதுங்கள். 


ஆங்கிலத்தில் R. P. Rajanayahem 


.....................................

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.