Share

Jan 24, 2021

'சினிமா எனும் பூதம்' பற்றி விநாயக முருகன்

 "சினிமா எனும் பூதம் வெறும் சினிமா நூல் அல்ல. 

அதுவும் வாழ்ந்துகெட்டவர்களை பற்றி சொல்லும் இடங்களில் ராஜநாயஹத்தின் எழுத்து சற்று கூடுதலாக மிளிருகிறது." 


- விநாயக முருகன் 


R. P. ராஜநாயஹம் சினிமா எனும் பூதம் பற்றி 

விநாயக முருகன் பதிவு கீழே :


"பொதுவாக நான் சினிமா சார்ந்த அதுவும் தமிழ்சினிமா சார்ந்த நூல்களை படிப்பதில்லை. அவை பெரும்பாலும் கிசுகிசுக்களாகவோ  யார் யாரை வைத்திருந்தாங்க என்று வாரமலர் ரகமாகவோ இருக்கும்.  ஒருசில விதிவிலக்குகள் தவிர்த்து. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அண்மையில் சித்ரா லட்சுமணனின் சில நேர்காணல்கள் யுடியூப்பில் பார்த்தேன். அருமையாக இருந்தது. புத்தகம் என்றால் நான் விரும்பி படித்தது சந்திரபாபு நினைவலைகள். சிறுவயதில் நூலகத்தில் பிலிம்நியூஸ்  வாசிக்கும்போதுதான் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்ற பெயர் அறிமுகமானது. ஆனால் அவரது எழுத்தில் ஏதோ ஒரு போதாமை இருப்பதாக தோன்றும். என்னவென்று தெரியாது. வெகுநாட்கள் கழித்துதான் அது புரிந்தது. அவர் வெறுமனே தகவல் திரட்டியாகத்தான் இருந்தார் என்று. ஆனால் அதுவும் முக்கியமான பணிதான். இப்போது விக்கிபீடியா வந்துவிட்டது. அது இல்லாத காலத்தில் மிகப்பெரிய பணியைத்தான் அவர் செய்துள்ளார். அதனால்தான் பிலிம் நியூஸ் ஆனந்தனை  சினிமாவில் தகவல் களஞ்சியம் என்று அழைத்தார்கள். தமிழ்சினிமாவை தவிர்த்து தமிழ்சமூகத்தின் வாழ்க்கையை புரிந்துக்கொள்ளமுடியாது. உதாரணமாக நம் சிறுவயது நினைவுகளை அசைபோடும்போது எங்கோ கேட்ட இளையராஜா பாடல்களோ, சிறுவயதில் பார்த்த ரஜினி, கமல் திரைப்படங்களோ , நண்பர்களோடு தியேட்டருக்கு சென்றதோ ஒரு மூலையில் தோன்றும். ஒவ்வொருவருக்கும் அந்தஅந்த காலக்கட்ட இசையமைப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் என்று நினைவுக்கு வருவார்கள். சினிமா இல்லாமல் தமிழன் இல்லை. ஆனாலும் இவ்வளவுபெரிய தமிழ்சினிமா பற்றி குறிப்பிடத்தக்க எத்தனை நூல்கள் வெளிவந்துள்ளன என்று பார்த்தால் குறைவே.

 அந்தப்புத்தகங்களும் ஒன்று திரைக்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்பம் பற்றி இருக்கும். இல்லாவிட்டால் வெறும் தகவல் களஞ்சியமாக                     இருக்கும். 


அண்மையில்தான் R. P. ராஜநாயஹம் எழுதிய  'சினிமா எனும் பூதம்' என்ற நூலை படித்தேன். 


மு.க.முத்து பற்றி அவர் எழுதிய ஒரு குறிப்பை படித்துவிட்டுதான் அவரை முகநூலில்  தொடர ஆரம்பித்தேன்.


  தொடர் அனுபவப்பதிவுகள்   பார்த்துவிட்டு 

பிறகு சாருநிவேதிதா கட்டுரை பார்த்துவிட்டு 'சினிமா எனும் பூதம்'  நூலை வாங்கிப்  படித்தேன்.


 இது வெறும் சினிமா நூல் அல்ல. அதுவும் வாழ்ந்துகெட்டவர்களை பற்றி  சொல்லும் இடங்களில் ராஜநாயஹத்தின் எழுத்து 

சற்று கூடுதலாக மிளிருகிறது."



https://m.facebook.com/story.php?story_fbid=3598639693504964&id=100000769078139


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.