Share

Jan 21, 2021

ந. முத்துசாமி - பாலகுமாரன் கடைசி சந்திப்பு

திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது ஞானக்கூத்தன் போட்ட பிச்சை.”


நிறைய நாவல்கள் எழுதிய பாலகுமாரனிடம் ஆதங்கத்துடன் “கவிதையெழுதுவதை விட்டுட்ட பார்த்தியா” என்பாராம் ஞானக்கூத்தன்.


பாலகுமாரனின் கவிதைவரிகள் உடனே நிழலாடியது.

“ சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியாக்குதிரை

கண் மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகமென்று

கதறிட மறுக்கும் குதிரையைக் கல்லென்று நினைக்க வேண்டாம்”


பாலகுமாரன் மிகவும் தளர்ந்து கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.எழுத்துலக கமலஹாசனாக கொண்டாடப்பட்டவர்!

மிகவும் தளர்ந்து போய் இருந்த அவர் பேசுவதற்காக மேடை ஏற வேண்டி இருந்த வேளை, 

தள்ளாடிய பாலகுமாரனை 

நான் அவர் கை பிடித்து நடத்தி 

மேடையில் ஏற்றி அமர வைத்தேன்.


ஞானக்கூத்தன் பதினைந்து வருடங்களுக்கு முன் திருப்பூர் வந்திருந்தார். சென்ட்ரல் லயன்ஸ் கிளப்பில் அழகான உரை நிகழ்த்தினார்.


அன்று அவர் அங்கு சொன்னதை இந்த திருவல்லிக்கேணி இரங்கல் கூட்டத்தில் 

நான் மேடையில் பேசும்போது நினைவு கூர்ந்தேன். 

“ராஜநாயஹம் கவிஞர் அல்ல. ஆனாலும் கவிஞர் ஞானக்கூத்தனின் மாணாக்கன் என்று சொல்லிக்கொள்ள முழு உரிமை இவருக்கு உண்டு.”


பாலகுமாரனும் ந.முத்துசாமியும் மறைவதற்கு

 சில மாதம் முன் ஒரு உணவுக்கூடத்தில் தற்செயலாக சந்தித்துக் கொண்டார்கள்.   


அடுத்தடுத்து சில மாதங்களிலேயே இருவரும் அடுத்தடுத்து மறைய இருந்த தருணம் அது.


இது தான் இருவரின் கடைசி சந்திப்பு. 


இருவருமே TAFE ல் வேலை பார்த்தவர்கள்.


இருவரும் உணர்ச்சி வசப்பட்ட நிலை.


பேராசிரியர் செ.ரவீந்திரன் கூட அப்போது முத்துசாமியுடன் இருந்திருக்கிறார்.


வர்த்தக எழுத்தாளர் பாலகுமாரன் மனம் விட்டு நெகிழ்ந்து அப்போது முத்துசாமியை கனப்படுத்தி சொல்லியிருக்கிறார்.

“ முத்துசாமி மட்டும் இல்லேன்னா நான் TAFE ல கடைசி வரை க்ளார்க்காவே தான் இருந்திருப்பேன்.”


....


 பிறந்த நாளுக்கு நான் அன்பளிப்பாக கொடுத்த ரேமண்ட் சட்டையைத் தான் அன்று முத்துசாமி அணிந்திருக்கிறார்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.