Share

Jan 24, 2021

புதுவையில் தி. ஜானகிராமன் கருத்தரங்கம்

 புதுவை தமிழ் துறையில் தி சானகிராமன்


1989.


அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக 

ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.


புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே 

தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.

க .ப .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.


'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.என் பெயர் ஆர்பி ராசநாயகம்! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன்.


விழாவுக்கு போனவுடன் இபா

 'என்ன ராச நாயகம், 

ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார்.

 கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன்!"

- பட்டிகாட்டானாக மாறி 

இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார்.


 தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள்.


பூனைக்கு யார் மணி கட்டுவது? 

நான் எதற்கு இருக்கிறேன்?

பயம் என்றால் என்ன என்றே தெரியாதவன்.


பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் வேறு அந்த சபையில்.


நான் பேசும்போது இந்த தமிழ் வெறியை குறிப்பிடாமல் விடவில்லை. I broke the ice.


" தமிழில் 'ஷ் ,ஹ ஜ'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது

 நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இருக்கிற சிறகை பிய்த்து விட்டு 

தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம்" 

- இப்படி தி ஜானகிராமன் சொல்வார். 

அவர் பெயரையே அவர் படத்திலும் 

அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக எழுதிவிட்டீர்கள் " 

 என் எதிர்ப்பை  தெரிவித்தேன்.


அவ்வளவு தான். தனி தமிழ் வெறியர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். 

உடனே க.ப .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார் ' தயவு செய்து எல்லோரும் அமருங்கள்.உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '


தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி 'தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம். உங்களை கும்பிட்டு கேட்டுகொள்கிறேன் '


விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு 

பல 'கன்னட' கடிதங்கள்.

அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள்.


"தமிழ் துறை நடத்திய விழாவில் 

ஒருவன் தமிழை பழிக்கிறான். 

எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "


டெல்லியில் இருந்து திஜாவின் மகன் 

சாகேத ராமன் எனக்கு 

ஒரு கடிதம் 

நொந்து எழுதினார்.

"சாணி உலகம். 

இந்த சாணியில் 

'சானகிராமன்'தான் நிற்க முடியும் "


..............



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.