Share

Jun 10, 2019

நாஞ்சில் மனோகரன்


அடையாளச் சிக்கல் நாஞ்சில் மனோகரனுக்கு இருந்தது.
நாகர்கோவில்காரர்களிடம் கேட்டால் இவர் தமிழரே என்பதை பற்றி ஜாதியை குறிப்பிட்டு தெளிவாக ’மனோகரன் இல்லத்து பிள்ளைமார்’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்வார்கள்.
தமிழகத்தில் மற்ற ஊர்க்காரர்கள் “நாஞ்சில் மனோகரன் மலையாளி” என்றே தான் குறிப்பிடுவார்கள்.
இல்லத்துப் பிள்ளைமாருக்கு மலையாளத்திலும் உறவுகள் உண்டு தான். பணிக்கர் என்று அறியப்படுவார்கள்.
மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதியில் பரவலாய் உள்ள இனம்.
திராவிட இனத்தின் இரும்பு மனிதர், மதுரை முன்னாள் மேயர் எஸ்.முத்து இல்லத்துப்பிள்ளைமார் தான்.
எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த போது தி.மு.கவினர் மலையாளத்தான் கட்சி என்று ஏகடியம் பேசியதுண்டு. அதன் பின் நாஞ்சிலார் அ.தி.மு.கவில் இணைந்த போது “ மலையாளிக நம்ம தமிழ் நாட்ட பிடிக்க திட்டம்போடுறானுங்க” என்று எம்.ஜி.ஆர், மனோகரன் இருவர் மீதும் சாணியடித்தார்கள். இதெல்லாம் அரசியல் சரித்திரம்.
எம்.ஜி.ஆரை தாக்கி நெடுஞ்செழியன் அன்று பேசிய வார்த்தைகள் “வாழ வந்தாய் வாழ்ந்து விட்டுப்போ. எங்களை ஆள நினைக்கலாமா?”
மலையாளிக கட்சி என்று தி.மு.க குறிப்பிட்டதோடு சென்னையில் சில மலையாளிகளை, மலையாளிகளின் கடைகளை அவமானப்படுத்திய நிகழ்வுகளும் உண்டு. சிறுபான்மையினர் மலையாளிகள் என்பதை சுட்டியதுண்டு.
ஆனந்தவிகடனில் அப்போது ஒரு அட்டைப்பட கார்ட்டூன்.
ஒரு தேநீர் கடையில் இரண்டு சல்லிகள் கல்லாவில் உட்கார்ந்திருப்பவரை பார்த்து “ என்னது பில்லுக்கு பணமா? தரமுடியாது. இப்ப என்னன்ற? உன்னய பாத்தா கூட ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினர் மாதிரி தான் தெரியுது.”
நாஞ்சில் மனோகரனை தன் அரசியல் எதிரியாக காங்கிரஸிலிருந்த கண்ணதாசன் அறிவித்தார். ’திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக நாஞ்சில் மனோகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்’ என்று கவிஞர் ஆவேசப்பட்டார்.
சொகுசான அரசியல்வாதி நாஞ்சில் மனோகரன் என்ற கோபம் கண்ணதாசனுக்கு ரொம்ப உண்டு.

’அந்தி மழை’ இந்த ஜூன் மாத இதழில் ஒரு கட்டுரையில் “நாஞ்சிலார் என்ன சாதி என்பதை அறிந்து கொள்ள ராஜாஜி துடித்திருக்கிறார்.
‘நான் அதை மறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதனால் உடனே என்னால் சொல்ல இயலவில்லை. நினைவுபடுத்திப் பார்க்கக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்’ என்று நாஞ்சிலார் நழுவியிருக்கிறார்.” என்று எழுதப்பட்டுள்ளது.
உண்மையிலேயே தன் சாதி பற்றி துச்சமாக அண்ணா காலத்தில் நாஞ்சிலார் கருதினாரோ என்னவோ.
’அந்திமழை’யில் கட்டுரை எழுதியவர், தான் முதன் முதலாக 1998ல் தி.மு.க அமைச்சரவையில் நாஞ்சிலார் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த போது சந்தித்ததாக சொல்கிறார்.
அமைச்சராக இருந்த அந்த கால கட்டத்தில் நாஞ்சிலார் ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லத்து பிள்ளைமார் சங்கம் நடத்திய விழா நிகழ்வில் பங்கு பெற்று தன் இனத்தவரை புல்லரிக்க வைத்தார்.
அப்போதுதான் ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் குடியிருந்தேன்.
அந்த கூட்டத்திற்கு நான் போகவில்லை. சொந்தக்காரர்கள் எல்லோரும் உற்சாகமாக கலந்து கொண்ட அந்த கூட்டத்தில் அவர் என்ன பேசினார் என்பதை கேட்டறிய நான் தவறவில்லை.
இல்லத்துப்பிள்ளைமார் பற்றிய புள்ளி விபரத்தோடு சுவாரசியங்கூட்டி மனோகரன் பேசியிருக்கிறார். அந்த புள்ளி விபரம் உண்மை தானா என்பதில் எனக்கு சந்தேகமுண்டு. அவ்வளவு பேரா? ரொம்ப சிறுபான்மை சமுதாயம் ஆயிற்றே.
“ நாம் இருபது லட்சம் பேர் இருக்கிறோம். இந்த உண்மை தெரிய வரும்போது அரசியல் கட்சிகள் இனி நம்மைப் பார்த்து கண்ணடிக்கலாம்” என்று நாஞ்சிலார் சொன்னபோது சாதி சனங்க கை தட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். இல்லத்துப்பிள்ளைமார் தயவும் இனி வாக்கு வங்கி அரசியலுக்கு முக்கியமானதாக ஆகும் என்பதாக இப்படி தன் நாசூக்கான பாணியில் பேசியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.