Share

Jun 21, 2019

அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா


எதிரிகள் ஜாக்கிரதை. 1967ல் மாடர்ன் தியேட்டர்ஸ் படம். இதில் ஒரு பாட்டு. லாலா லல்லலல்லா ஒரு நாள் இருந்தேன் தனியாக, ஒரு பெண் நடந்தாள் அருகே, சிரித்தேன் சிரித்தாள் மெதுவாக, சிவக்கும் ரோஜா மலரே என்று ஒரு பாடல்.
ஆர்.எஸ்.மனோகர், மணிமாலா, மாஸ்டர் பிரபாகர் இடம்பெற்ற பாடல். அந்த காலத்தில் ரொம்ப ஹிட் ஆன பாடல்.
இதில் மாஸ்டர் பிரபாகருக்கு வரிகள் – அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா.
இந்த குழந்தை குரல் பாடியவர் வசந்தா ராணி.
அந்த காலத்தில் குழந்தை பாடல்கள் பாடியவர் என்றால் எம்.எஸ்.ராஜேஸ்வரி தான்.
வசந்தா ராணி பாடிய அப்பா பக்கம் வந்தா, அம்மா முத்தம் தந்தா மறக்க முடியாத குரல்.
வசந்தாராணி ராமண்ணாவின் ”மூன்றெழுத்து” (1968) படத்தில் நடித்தார். நல்ல நகைச்சுவை நடிப்பையும் இவரிடம் காண முடிந்தது. நாகேஷை “டேய் கூத்தாடியத்தான்” என்று கலாட்டா செய்வார். அசட்டு பாத்திரம். அப்பாவாக ஓ.ஏ.கே தேவர் ஐயராக நடித்திருப்பார். ஐயர் பாஷை ஓ.ஏ.கே தேவர் பிரமாதமாக தன் கணீர் குரலில் பேசுவார். ’மதராஸ் டூ பாண்டிச்சேரி’(1966)யில் ஐயர் ஓட்டல் முதலாளியாக விசிறியால் விசிறிக்கொண்டே வருவார்.
மூன்றெழுத்தில் மாடிப்படியேறும் ஓ.ஏ.கே தேவரின் பின்னால் வசந்தா ராணி போய்க்கொண்டு “ மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ” பாடும்போது தேவர் நின்று திரும்பி ’உன்னை போய் பெத்தனே’ என அர்த்தப்படும் படி தன் வயிற்றில் இரண்டு அடி அடித்துக்கொள்வார். திரும்பி மீண்டும் அவர் படியில் நடக்கும்போது “ ஆக மெல்ல நட மெல்ல நட” பாடுவார் கிறுக்குப்பெண்.
வசந்தி, வசந்தா என்று அன்று அறியப்பட்டவர்
வசந்தா ராணி பின்னால் தற்கொலை செய்து கொண்டார்.

.
’அச்சச்சோ’ சித்ரா வசனம் பாலச்சந்தரின் அரங்கேற்றம் (1973).
“இந்த படம் நல்லாருக்காதுன்னு நான் தான் சொன்னேன். ஏன் நல்லால்லேன்னு பாத்துட்டு வந்துடுவோம்னு அம்மா தான் சொன்னா”

வசனம் பேசும் போது ’அச்சச்சோ, அச்சச்சோ சொல்லி பிரபலமான சித்ரா.

நான் அவனில்லை(1974)யிலும் வருவார் அச்சச்சோ சித்ரா.
இந்த நடிகையும் தற்கொலை செய்து இறந்தார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.