Share

Sep 2, 2018

Disfame - பேபி சாவித்திரி



பேபி சாவித்திரி
கைதி கண்ணாயிரம் படத்தில் பையனாக நடித்திருக்கும் பெண் குழந்தை பேபி சாவித்திரி. ”கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்” பாட்டு இன்றும் ரசிக்கப்படுகிறது.
நீங்காத நினைவு “ ஓஹோ, சின்னஞ்சிறு மலரை மறந்து விடாதே” பாட்டில் குதிரையில் முன்னால் உட்கார்ந்து நடிக்கும் குழந்தை. “புது விதமான உலகத்திலே பொன்மயமான வீடமைப்போமே” என்று பெரிய கண்களால் சொல்லும் பேபி சாவித்திரி.
ஆயிரம் ரூபாய் படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியுடன் நடிக்கும் சிறுமி. 
A wondrous wonder!

அழகான களையான முகம். நளினமான பாவங்கள். இயல்பிலேயே நல்ல திறமையும் சூட்டிகையும்.

 இந்த குழந்தை ஏன் பெரிய பெண்ணானவுடன் கதாநாயகியாக நடிக்கவில்லை. பாவம், உணர்வு என்பதை பிரமாதமாக தாள கதி மாறாமல் பாடல் காட்சிகளில் வெளிப்படுத்திய குழந்தை. ஏன் நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. நடிப்பில் நல்ல டைமிங் இந்த குழந்தையிடமிருந்தது. டைம் தான் சரியில்லையோ?
Fame is the thirst of youth என்பான் லார்ட் பைரன். குழந்தைப் பருவம் தாண்டி நல்ல இளமையில் இந்த பெண்ணுக்கு அப்படி ஒரு தாகம் ஏற்படவே இல்லையா? Was she too cool to fool Fame?
அல்லது அவளுடைய கனவுகள் கிஸ்மிஸ் பழம் போல் சுருங்கிப் போய் விட்டதா?

It’s over, but it happened this way.  We know her name, not her story. Fickle and Elusive popularity.

பேபி சாவித்திரியின் மகள் என்று ஒரு சங்கீதா சுப்ரமண்யம் உண்டு. அவரை கண்டு பிடிக்க முடிந்தால் எவ்வளவோ விஷயங்கள் அறிய முடியும்.




Aug 30, 2018

கோணங்கியும் முருகபூபதியும் மொட்டையும்


பத்து நாட்களுக்கு முன் இருக்கலாம். ஒரு வெள்ளிக்கிழமை கோணங்கியின் தம்பி ச.முருகபூபதி கூத்துப்பட்டறைக்கு வந்திருந்த போது சந்தித்தேன்.

பல வருடங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோணங்கி என்னிடம் 
“இவன் என் தம்பிடா. பாண்டிச்சேரி நாடகத்துறையில் படிக்கிறான்” என்று அறிமுகப்படுத்தியிருக்கிறான்.


ஒரு பத்திரிக்கையில் அப்போது என்னைப்பற்றி அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், மணிக்கொடி சிட்டி, புதுவை முன்னாள் துணை வேந்தர் சொன்ன விஷயங்கள் பிரசுரமாகியிருந்தது. அதன் நகல் ஒன்றை கோணங்கியிடம் கொடுத்தேன். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவனை சந்தித்த போது என்னிடம் சொன்னான். “ என் தம்பி கிட்ட அதை கொடுத்தேன். அவன் சொன்னான் ‘இந்த ஆளை இவங்க நல்லா மொட்டை அடிச்சிருக்காங்க.’
உண்மையில் ஜாம்பவான்கள் என்னைப்பற்றி சொன்ன விஷயங்கள் பற்றி விளக்குவது என்றால் ஒவ்வொன்றுமே ஒரு சிறுகதை போல விரியும்.
ஆனால் கோணங்கி இப்படி மட்டையடி தான் அடிப்பான். 


கோணங்கிக்கு நான் எவ்வளவோ செலவழித்திருக்கிறேன். அப்படி பார்த்தால் என்னை மொட்டையடித்தது என்றால் அதில் பிரதான இடம் கோணங்கிக்கு உண்டு தான்.
Invariably, a taker and not a giver. Precisely, Konangi is a sponger.

திருப்பூரில் இருந்த நாட்களில் ஒரு முறை நான் போன் பேசிய போது கோணங்கி சொன்னான் “தமிழ்நாட்டில ஒருத்தன் திருப்பூருக்கு போயிட்டான்னா அவன் அகதின்னு தான் அர்த்தம். ராஜநாயஹம் நீ அகதி ஆயிட்டியேப்பா.”

இப்படி என்னிடம் பல சலுகைகள் அனுபவித்த ஒருவர் பேசுவது எரிச்சலாக இல்லையா என்றால் இல்லை.  இல்லவே இல்லை


ஒரு பத்திரிக்கையில் சில மாதங்களுக்கு முன் படித்தேன். தனுஷ்கோடியில் கோணங்கி தன் அம்மாவை நினைத்து கதறி அழுததாக.

‘என் பிள்ளை அழுங்குரல் கேட்குதே’ என்று கடலம்மையாய் அலைகள் தவித்திருக்கும் வாசக ஷற்புத்திரரே.
”சிருஷ்டியின் எண்ணற்ற மாய உருக்கள் தோற்றத்திலும் மொழியிலும் வடிவமாகக் கூடுகிறதே” என்பான் கோணங்கி.
”அம்மா மறைந்துலவும் இந்நாட்களில் நைந்து போன ஹிருதய பூமியில் வளரும் மரத்தைப் பாதுக்காக்கவே அகதிப்பறவைகளின் உதிர் இறகுகளோடு திரிந்து கொண்டிருக்கிறேன்” என்பவை ச.முருகபூபதியின் வரிகள்.