Share

Nov 6, 2009

விளாத்திகுளம் சுவாமிகள்

விளாத்திகுளம் சுவாமிகள் என்றதும் ஒரு காவி கட்டிய உருவம் என நினைத்துவிடாதீர்கள் . விளாத்திகுளம் சுவாமிகள் காவி உடுத்தியது கிடையாது.இவர் காடல்குடி ஜமின்தார். மேலும் இவருக்கு மூன்று மனைவிகள். கம்பள நாயக்கர் இனம். கர்நாடக சங்கீதத்தில் மிகப்பெரும் ஞானி. நல்ல பாடகர் . ஆனால் கச்சேரி செய்பவர் கிடையாது . நல்ல சதஸில் இயல்பாக ஆலாபனை செய்ய ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட ராகத்தில் பல நாட்கள் தொடர்ந்து பாடுவார் .கீர்த்தனையாக பாடுவது என்று கிடையாது . எந்த ராகம் என்றாலும் ஆலாபனையாக பல நாட்கள் பாடுவார் .தன் ரசிகர்களுக்காக பாடியவர் . ஒரு ரசிகர் இருக்கிறார் . அவருக்காக ஒரு கூட்டத்திற்கே பாடுவார் .குறிப்பிட்ட அந்த ரசிகர் காணாமல் போகிறார் என்றால் தாயைப் பிரிந்த குழந்தை போல தவித்து விடுவார் . தாள ஞானம் இவருக்கு கிடையாது . ஸ்வர ஞானம் உண்டு . ஆனால் ஸ்வரம் பாடத்தெரியாது .
கரிசல் இலக்கிய மன்னர் கி.ரா அவர்கள் விளாத்திகுளம் சுவாமிகள் பற்றி சொல்லக் கேட்பது சுகம் ! கு . அழகிரி சாமி இவரைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார் !" இதே போல கு . அழகிரி சாமி ரசிகமணி டி கே சி யைப் பார்த்தவுடன் சொன்னாராம் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார் !"
விளாத்திகுளம் சுவாமிகள் நல்ல கருப்பு நிறத்தில் ரொம்ப கம்பீர அழகு கொண்டவர் . பெரிய மீசை உண்டு . ஆனால் சுவாமிகளுக்கு தாடி கிடையாது .
இசை பயிலும் ஆர்வத்தில் கிராவும், அழகிரிசாமியும் அந்த காலத்தில் நாகஸ்வர மேதை காருக்குரிச்சியின் சகளைபாடியான பொன்னுசாமி அவர்களை ஒரு வீடு அமர்த்தி அவரிடம் கர்நாடக இசை பயின்றார்கள் . அப்போது அங்கு விளாத்திகுளம் சுவாமிகள் வருகை தரும்போது பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க ஆரம்பிக்கும் போது, மெதுவாக ஆலாபனையை ஆரம்பிப்பார் .
விளாத்திகுளம் சுவாமிகள் பாட ஆரம்பிப்பது பற்றி கி ரா சுவாரசியாமாக சொல்வார் : சாமியாடுறவனுக்கு மேளம் அடிச்சவுடன் சாமி வருவது போல காருக்குரிச்சியின் ஷட்டகர் பொன்னுசாமி ஆர்மோனியம் வாசிக்க வாசிக்க விளாத்திகுளம் சுவாமிகள் பாடத்தொடங்குவார் . நினைத்துப் பார்க்கவே சந்தோசமாயிருக்கிறது . ஒரே ராகம் - ஆலாபனை - பல நாட்களுக்கு தொடர்ந்து !
சங்கீத கலாசாலை ஒன்று துவங்கும் முயற்சியின் போது ஹரிஜன் களையும் சேர்க்க வேண்டும் என கிராவும் கு அழகிரிசாமியும் வற்புறுத்தியபோது அதனை விளாத்திகுளம் சுவாமிகள் விரும்பவில்லை . சுவாமிகளின் இன்னொரு முகத்தைப் பார்த்த கிராவும் , கு அழகிரிசாமியும் அதனால் சங்கீத கலாசாலை பற்றிய அவரது முயற்சியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் .


கர்நாடக சங்கீதம் இப்போது ( இப்போது என்றால் கடந்த எண்பது வருடங்களாக) 'அரியக்குடி பார்முலா' மேடைக் கச்சேரி என்ற சிறைக்குள் , ஆம் சிறை என்று தான் சொல்லவேண்டும். ஒரு இருபத்தைந்து கீர்த்தனைகளை கற்றுக்கொண்டு வர்ணத்தில் ஆரம்பித்து தில்லானாவுக்குப் பின் மங்களம் என திரும்ப திரும்ப அதனையே பாடிக்கொண்டு வெளிநாட்டில் எட்டு மாதம் ,டிசெம்பர் சீசனை ஒட்டி ஒரு மூணு நாலு மாதம் உள்நாட்டில் வித்வான்கள் வியாபாரம் செய்வது என்று மாறிவிட்டது. இது குறித்த அதிருப்தியை திஜா மோகமுள்ளில் சொல்லியிருக்கிறார் .
ராகங்களை தரிசனம் செய்வது இனி சாத்தியமில்லை . அதாவது தியாகய்யர் தேவகாந்தாரியை ஏழு நாள் பாடியது , தோடி சீத்தாராமய்யர் தோடி ராகத்தை எட்டு நாட்கள் பாடியது போல , பட்ணம் சுப்ரமணிய அய்யர் பேகடா மூன்று நாட்கள் பாடியது போல இனி நடக்குமா ? நடத்திக்காட்ட முயற்சிகள் , இதற்கெனவே பிரத்யேகமான இசை விழாக்கள் நடத்தப்படவேண்டும் . கிராவும் இப்படி ஏங்கிசொல்வார் .
சங்கீதகலாசாரம் மாறுவது மிகவும் அவசியம் .ஒரு ராகம் பல நாட்கள் பாடப்படும்போது எப்படியெல்லாம் விஷ்வரூபம் எடுக்கும் !

'மிருதங்கம் ஒரு ஊமை வாத்யம் . கற்றுக்கொள்வதற்கு ஒரு கர்ப்ப வாசகாலம்
( அதாவது பத்து மாதம் ) போதும் தான் . ஆனால் என்ன வாசிக்கக் கூடாது என்பதை தெரிந்துகொள்வதற்குள் ஆயுசு தீர்ந்து விடும் . ' என்று பாலக்காடு மணி அய்யர் சொல்வார் .
ஒரு ஊமை வாத்தியத்தின் உன்னதத்தன்மையே இத்தகையது என்றால் கந்தர்வ வேதம் எனப்படும் சாஸ்த்திரீய சங்கீதத்தை எப்படி பேணப் போகிறோம் ?

Nov 2, 2009

Poramboke

Catamaran மாதிரி Poramboke என்கிற வார்த்தையும் ஆங்கில அகராதியில் இடம்பெற நேரலாம். கட்டுமரம் - Catamaran. புறம்போக்கு - Poramboke .
நம் தனித்தமிழ் coffeeயை கொட்டை வடிநீர் என்றே பிடிவாதமாய் சொல்லியும் தனித்தமிழ் புலவரே 'காப்பி' என்று தான் சொல்லும்படியாகி விட்டது!
'ஹிந்து 'பத்திரிகையில் புறம்போக்கு நிலம் பற்றி Poramboke என்றே தான் குறிப்பிடுகிறார்கள்.

இந்த உயர்ந்த நீதிபதி பி டி தினகரன் கதை ஈரோடு அடாவடிமுன்னாள் தமிழக அமைச்சர் ராஜாவை மிஞ்சும்படியாயிருக்கிறது . இந்த
land grabbing (197acres in Kaverirajapuram,Tiruvallur Dt.)கதையில் ,கலெக்டர் ,மேஜிஸ்ட்ரேட் துவங்கி வி.ஏ.ஒ வரை தினகரனின் அசகாயசூரத்தனம் பற்றி சொல்லி விட்டார்கள்.
காவேரிராஜபுரம் கிராமத்தார் பெரும்பான்மையோருக்கு அவர்கள் வீடு உள்ள இடத்திற்கே இன்னும் பட்டா கிடைக்கவில்லை!
இந்த பி.டி.தினகரனை நான் சிலவருடங்களுக்கு முன் பார்க்க வாய்ப்பு கிடைத்தது .
நான் பணி புரியும் நிறுவன முதலாளி மீது அபாண்டமான ஒரு கிரிமினல் கேஸ் போடப்பட்டது . அதை எதிர்த்து சேலத்தில் stay வாங்கியது துவங்கி உயர்நீதிமன்றத்தில் அந்த கேசை நடத்துவது வரை என் பொறுப்பில் இருந்தது . அப்போது மக்கள் தீர்ப்பாயம் (Lok Adalat) முன் உயர் நீதிமன்றத்தில்
08-07-2006
அன்று என் எம் .டி சார்பில் ஆஜர் ஆக நான் போயிருந்தேன் . அங்கே பாஷா, ரவி ராஜ் பாண்டியன் ஆகிய நீதிபதிகளோடு வழக்குகளை பைசல் செய்ய தினகரனும் இருந்தார். எங்கள் எம் டி மீது கேஸ் போட்டவர் பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் கொடுத்தாலே போதும் என்றும் நான்கு வருடங்களுக்கு வட்டியும் வேண்டாம் என்றும் சொன்னார் . கேஸ் அபாண்டமான பொய் கேஸ்! இதில் அந்த கேஸ் போட்ட சேட்டு தாராள மனசைக்காட்டினார் . தினகரன் என்னிடம் " இது லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்தமாதிரி உங்கள் அதிர்ஷ்டம் . பத்து லட்சத்திற்கு ஐந்து லட்சம் போதும் என்கிறார் . அதோடு நான்கு வருடத்திற்கு வட்டியும் வேண்டாம் என்கிறார் . ஒத்துக்கொள்ளுங்கள் " என்று கறாராக வற்புறுத்தினார் . அங்கு வந்திருந்த ஜுனியர் அட்வகேட்டும் என்னிடம் " பெரிய நீதிபதிகளை மறுக்க வேண்டாம் .'' என்று கேனத்தனமாக மிரண்டு போய் சொன்னார் . நான் பிறகு சீனியர் அட்வகேட் அவர்களையும் ,எங்கள் ஜி.எம் அவர்களையும் கன்சல்ட் செய்து விட்டு அவரிடம் அதற்கு மறுப்பு தெரிவித்து 'கோர்ட் பென்ச்சில் பார்த்துக்கொள்கிறோம் . தவறு செய்யாத போது ஏன் இதற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் ' என உறுதியாக சொல்லி விட்டேன் . மக்கள் தீர்ப்பாயம் என்றாலே கட்டப்பஞ்சாயத்து போலத்தான் என்று அன்று தெரிய வந்தது . வக்கீல் சம்பந்தப் படாமல் மூன்றுஉயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் நானே வாதாடியது எனக்கு ரொம்ப த்ரில்லான அனுபவம் .

அன்று இரவு சன் செய்திகள் வால்டாக்ஸ் ரோடு லாட்ஜில் நான் பார்த்தபோது தினகரன் தமிழக முதல்வர் அவர்களை சந்திப்பதை காட்டினார்கள் !
அடுத்த மாதமே (19.08.2006 ) அந்த கேசை இப்போது மறைந்த நீதிபதி எஸ் .அசோக் குமார் (கருணாநிதி நள்ளிரவு கைதில் போலீசை கிண்டியெடுத்த நீதிபதி தான் )அவர்கள் தள்ளுபடி செய்து தீர்ப்பு செய்தார்கள்.