Share

Jun 22, 2021

ந. முத்துசாமி நாடகங்கள் பற்றி

 https://m.facebook.com/story.php?story_fbid=3084798668400245&id=100006104256328


மார்ட்டின் எஸ்லின் Theater of the Absurd என்கிற வகைமையை 1962ல் சொன்னார். 

இது பற்றிய பிரக்ஞையில்லாமலேயே 

ந. முத்துசாமி தமிழில் முதல் Absurd play 

 'காலம் காலமாக' எழுதி நடை பத்திரிகையில் 1969ல் வெளிவந்து விட்டது. 

'நாற்காலிக்காரர் ' 1970ல் கசடதபற பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. 


இதற்கு பிறகு 1971ல் தான் இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாடகம் 

' மழை ' கசடதபற இதழில் பொழிந்தது. 


இந்திரா பார்த்தசாரதியை விட ஐந்து வயது இளையவர் ந. முத்துசாமி என்றாலும் நாடகத்தைப் பொறுத்தவரை சீனியர் என்பதை தூக்கிப் பிடித்து இப்படி காட்ட வேண்டியிருக்கிறது. 


மேற்கண்ட காலம் காலமாக, நாற்காலிக்காரர் ரெண்டு நாடகம் தான் முத்துசாமி எழுதினார் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். 

யூஜின் அயனெஸ்கோ தரத்தில் இந்த நாடகங்கள் இருக்கின்றன என்று சொல்லப்பட்ட போது தான் அயனெஸ்கோவை தெரிந்து கொண்டார். 


முத்துசாமியின் பிரபலமான நாடகங்களில் இங்கிலாந்து ஒன்று. இதற்கு 'நூல் கண்டு' என்றும் பெயர் உண்டு. 

நாடகத்தின் பெயர் இங்கிலாந்து என்பதால் மொழிபெயர்ப்பு என்று நினைத்து விட வேண்டாம். 

அப்படி யாராவது சொன்னால் நம்பக்கூடாது. 

முத்துசாமி எழுதிய தமிழ் நாடகம் தான். 


நான் இந்து தியேட்டர் ஃபெஸ்டிவலில் இயக்கிய வண்டிச்சோடை,  சுவரொட்டிகள், உந்திச்சுழி, (உந்திச்சுழி நாடகத்தின் மூலம் பேராசிரியர் செ.ரவீந்திரன் ஒளியமைப்பாளராக பிள்ளையார் சுழி போட்டார்) கட்டியக்காரன், நற்றிணையப்பன், அப்பாவும் பிள்ளையும், படுகளம், காண்டவ வன தகனம், பிரஹன்னளை உள்பட இருபத்தியொரு நாடகங்கள் எழுதியிருக்கிறார். 

இந்த இருபத்தியொரு நாடகங்களுமே 

ஒவ்வொரு வகையில் விசேஷமானது. 

கே. எஸ். கருணாப்ரசாத் வெளியீடாக இன்று கிடைக்கிறது. 


கூத்துப்பட்டறை பல மொழி பெயர்ப்பு நாடகங்கள் போட்டிருக்கிறது என்பதற்காக முத்துசாமி தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் என்று தவறாக கருதி விடக் கூடாது.


வெ.ஸ்ரீராம் மொழி பெயர்த்த மீளமுடியுமா சார்த்தர் நாடகத்தில் நடேஷ், கலைராணி நடித்தார்கள். 


'The last five seconds of Mahatma Gandhi' கூட தமிழில் கூத்துப்பட்டறை நடிகர்கள் நடிப்பில் அரங்கேறியுள்ளது.

.. 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.