Share

Jun 6, 2021

சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும்

 சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் 

- R. P. ராஜநாயஹம் 


சந்தம் தப்பாது பாடல் பதிவான மறு நாள். 

எஸ். பி. பி, சுசிலா பாடிய பாடல் பதிவு.


எம். எஸ். வி இசையமைப்பது, 

தன் முதல் படம் போல ரொம்ப அனுபவித்து செய்வார். பரபரப்பு ரொம்ப காட்டுவார். 

பின்னணி பாடகர்களை பாட சொல்லி கேட்கும்போது சின்ன நடனமிடுவார். 

ஆர்கெஸ்ட்ரா ஆட்களை வேலை வாங்குவதை பார்ப்பதே ரொம்ப சுவையான அனுபவம். 


'டே தபேலா அடக்கி வாசி.'


" பாலு, இப்படி பாடு 

' ஆடட்டும் தோகைஎன்று பாடட்டும் மேகம் இன்று ' 


' தழைக்கும் சுகமே நம் கனவு ' -இப்படிப்பா '


கண்ணதாசன் பாடல். 


"சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும்


அது எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்.


அடிக்கடி தேடி தேடி உலகெங்கும் ஓடியாடி சிரிப்பது காதலன்றோ?"


என்ற அந்த பாடல் பாடும்போது அவரிடம்

 எஸ். பி. பி, ஏன் சுசிலா கூட 

 திட்டு வாங்கினார்கள். 


"பிழைப்பு விஷயத்தில் மானம் பார்த்தால் குடும்பம் பாழாகி விடும் "-வள்ளுவர் வாக்கு. 


"மேளத்தின் பக்கம் ரெண்டு


தாளத்தில் ஓசை உண்டு


நடிப்பது உந்தன் கண்கள்


துடிப்பது எந்தன் கைகள்


இணைப்பது காதலன்றோ?"


'டே பாலு தேவைக்கு மேலே ஏன் ஹம்மிங் கொடுக்கிற? '

கோபத்தில் எம். எஸ். வி முகம் கடுகடு என்று

 சுண்டி விடும்.


"ஏம்மா சுசிலா ஏன் இந்த பாடு படுத்துறீங்க? 

நான் சொன்ன மாதிரி பாட முடியாதா? "


அருகில் நின்று கொண்டிருந்த ஹிந்து ரங்கராஜனிடம் சொன்னார் சத்தமாக

 ' ஜாலி ஆப்ரகாம் ன்னு ஒரு பையன். சங்கீதம் தெரியாது. ஆனா கேள்வி ஞானத்திலேயே நான் நினைக்கிறதை, சொல்றதை அப்படியே பாடுவான். இதுங்க எல்லாம் மண்டைகனம் பிடிச்சதுகள் "


 சுசிலாவை நேரடியாக இப்படி திட்டினார் .


அப்போது நடந்த ஒரு சம்பவம். பெக்கட்டி சிவராம் அந்த கூடத்திற்கு வந்தார்.

அவர் பிரபல கன்னட இயக்குனர். 

நடிகர் பிரசாந்துடைய அம்மாவின் தகப்பனார். அப்போது நடிகை ஜெயந்தியும் அவருடைய இரண்டாவது மனைவி. 


அவரை சந்தோசமாக ஹிந்து ரங்கராஜனிடம் எம் எஸ் வி அறிமுகப்படுத்தினார். 


'இவர் பெக்கட்டி சிவராம். 

பெரிய கன்னட டைரெக்டர் "


பெக்கட்டி சிவராம் படு தோரணையுடன் ஹிந்து ரங்கராஜனை நோக்கி " ஹலோ " என்று சொல்லியவாறு கைகுலுக்க கை நீட்டினார். 


ஹிந்து ரெங்கராஜன் பின்னால் கட்டிய கைகளை எடுக்கவே இல்லை. 

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டார். 

பதிலுக்கு கைநீட்டவில்லை. வர்ஜனம். 


"சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் " பாடல் ஒரு வழியாக நீண்ட நேரத்திற்கு பின் தான் பதிவானது. 


பாடல் பதிவு முடிந்து வெளியே வந்த போது சுசிலா                 வாய் விட்டு ஆயாசத்துடன் சொன்னார் :


"என் வாழ்க்கையில் இந்த பாடல் பாட கஷ்டப்பட்டது போல வேறு எந்த பாடலுக்கும் கஷ்டப்பட்டதில்லை. ஐயோ என் உயிரே போயிடுச்சு.. "


சொல்லும்போதே தன் காதுகளை இரு கைகளால் மூடிக்கொண்டார். 

கண்களையும் இமைகளால் மூடினார் சிறிது நேரம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.