Share

Jun 26, 2021

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

 ரொம்ப சின்னப் பையனாய் இருக்கும் போது சங்கரன் கோவிலில் ஒரு திருமணத்திற்கு போய் இருந்தேன். திருமணங்கள் எவ்வளவோ உண்டு தான். 

இந்த திருமணம் மறக்கவே முடியாது. அதைப் பற்றிய வித விதமான நினைவுகள். 


நான் ஒரு பாட்டு பாடினேன்.

"பொல்லாத புன்சிரிப்பு, போதும் போதும் உன் சிரிப்பு, யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததிந்த ரோசாப்பூ? "

 'தொர பாடுறான்' , 'தொர பாடுறான்' என்று பெரியவர்கள், குழந்தைகள் எல்லோருமே உற்சாகமாக ரசித்தார்கள். 


என் பெரிய மாமனார், அப்போது அவர் புது மாப்பிள்ளை, காரில், (அது அவருடைய அப்பா கார். அவர் தான் சங்கரன் கோவில் திருமணத்தை 

தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

என் மனைவியின் தாத்தா. )

 என் அப்பாவும், பெரியப்பாவும் (பெரியப்பா மகள் - ராஜம்  அக்கா தான் கல்யாணப் பெண். நான் தான் மாப்பிள்ளை ஊர்வலத்தில் அத்தான் ராமகிருஷ்ணன்  கையைப் பிடித்து அழைத்து வந்தேன். ) குற்றாலம் போனோம். 


அங்கே என் அப்பாவுடன் நான்காம் வகுப்பு முதல் இன்டர்மீடியட் வரை செயின்ட் சேவியர்ஸில் ஒன்றாக படித்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை

 என் தந்தை தற்செயலாக மெயின் ஃபால்ஸில் சந்தித்தார். இருவரும் பள்ளி, கல்லூரி கால நினைவுகளில் பரவசமானார்கள். 

அப்போது எட்மண்ட் தி. மு. க. வில் உதவி சபாநாயகர். 


(பின்னால் இவர் அ.தி. மு. க வில் எம்ஜியார் அமைச்சரவையில் உணவு அமைச்சராகவும் இருந்தார். 


சுயமரியாதை மிகுந்த எட்மண்ட் அமைச்சராக இருக்கும் போது மகள் கல்யாணத்துக்கு தோட்டத்திற்கு முதல்வருக்கு பத்திரிகை வைக்கப் போன போது அவரை எம். ஜி.ஆர் நேரில் சந்திக்காமல் இன்டர்காமில் பேசி, கல்யாண பத்திரிகையை ஹாலிலேயே வைத்து விட்டு போக சொல்லியிருக்கிறார். எட்மண்ட் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.) 


சங்கரன் கோவில் திருமண வைபவம் நிறைவுற்றது. சங்கரன் கோவிலில் இருந்து திருச்சிக்கு ரயிலில் செல்லும் போது

 ரயிலில்

 ஒரு பாடகன். என்னை விட நான்கைந்து வயது மூத்தவனாயிருப்பான். ரயிலில் பாடி யாசகம் பெறுபவன். தன் கையில் இருந்த தாளக்கட்டையை தட்டிக் கொண்டு அற்புதமாக பாடினான். 

'பூ முடிப்பாள் இந்த பூங்குழலி ' 

ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை படப்பாடல். சிவாஜி, கே. ஆர். விஜயா மேக் அப் இல்லாமல் நடித்த படம் நெஞ்சிருக்கும் வரை. 

பாடலில் நடிப்பில் சிவாஜி கணேசன், குரலில் சௌந்தர் ராஜன், இசையில் விஸ்வநாதன் மூவருமே கொடி கட்டினார்கள்! 

பாடலின் சரணங்கள் எல்லாம் மாறுபட்ட வித்தியாசமான பாடல். கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் அந்த பையன் அற்புதமாக பாடிய பாங்கு. 


' நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணி திங்கள் இருபதாம் நாள் .. ' என்று கல்யாணப் பத்திரிகையே ஒரு சரணம். 


அடுத்து சரண வரிகள் முகூர்த்த நிகழ்வு 

' மாதரார் தங்கள் மகள் என்று பார்த்திருக்க, 

மாப்பிள்ளை முன் வந்து

 மணவறையில் காத்திருக்க... 

கொட்டியது மேளம்,  குவிந்தது கோடி மலர், 

கட்டினான் மாங்கல்யம்....... '


அடுத்த விச்ராந்தியான சரண வரிகள் 

' .... கண்மணி வாழ்க, கடமை முடிந்தது கல்யாணம் ஆக.... '


அந்த முழுப் பாடலையும் சொக்கிப்போய் 

கேட்கும் படி அந்த அண்ணா பாடினான். 


கண்ணுக்குள் முகமும், செவிகளில் அந்த குரலும் 

இன்றைக்கும் மறக்கவே முடியாது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.